

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் முடிந்தால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வென்று காட்டட்டும் என கல்லடி உதயகீற்று இளைஞர் கழக வருடாந்த கலாசார விழாவில் பேசி ஊடகங்களில் வெளிப்படுத்திய செய்திக்கு பதில் வழங்கும் போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்!
யூ.எஸ்.எயிட் தொண்டர் நிறுவனம் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் இளைஞர்களுக்கு வழங்கிய ஐம்பது இலட்சம் பெறுமதியான இசைக் கருவிகளை அவ் இளைஞர்களுக்கு இன்று வரை வழங்காது கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றிக்காக தமக்கு விரும்பிய உறவினர்களுக்கு, ஆதரவாளர்களுக்கும் வழங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இன்று வரை இளைஞர்களுக்கு கையளியாது அரசியல் நடாத்தும் மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் இன்றும் இளைஞர்களின் பொருட்களை அவர்களிடம் கையளியாது இளைஞர் கழக நிகழ்வுகளில் கலந்து கொள்வது வெட்கக்கேடான விடயமாகும்.
இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் சிலர் பயத்தின் நிமிர்த்தம் நடவடிக்கைக்கு பதில் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளனர். என்னைப் பொறுத்தவரை நான் கிழக்கு மாகாண சபையில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் மட்டக்களப்பு தமிழ் மக்கள் பெரும்பான்மை வாக்குகளை வழங்கி என்னை பாராளுமன்றம் அனுப்பியுள்ளனர்.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாத போது அரசாங்கத்தில் இணைந்து போட்டியிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் அதன் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட மூவர் மட்டக்களப்பில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டனர்.
ஆனால் பிரசாந்தன் படு தோல்வி அடைந்தார். பின்னர் ராஜபக்ஷ குடும்பத்தினரின் காலில் வீழ்ந்து பின்வழியால் மாகாண சபை உறுப்பினர் பதவியை பெற்றார். இப்போது அவர்கள் தங்களது மாகாண சபை உறுப்பினர் பதவிகளையும், தங்கள் கட்சிக்கு கிடைத்த முதலமைச்சர் பதவியையும் தக்க வைத்துக் காட்டினால் மட்டக்களப்பு மக்கள் உங்கள் பக்கம் அப்போது உள்ளனர் என்பதை அப்போது ஏற்றுக் கொள்ளமுடியும்.
ஏனெனில் இம்மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட உள்ளது. இதில் உங்கள் பலத்தை ஜனநாயக ரீதியில் ஆயுத அச்சுறுத்தல் இன்றி மேற்கொண்டு மக்களின் ஆணையை பெற்றுக் காட்டுங்கள். அதிலும் பின் வழியால் வந்த பிரசாந்தன் இம்முறை தமது மாகாண சபை உறுப்பினர் பதவியை மக்களின் வாக்குகள் மூலம் தக்கவைத்துக் காட்ட முன்வருவாரா? என கேள்வி எழுப்புகின்றேன்.
ஏனெனில் தமது மாகாண சபை உறுப்பினர் பதவியையும், முதலமைச்சரின் இணைப்பாளர் பதவியையும் மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் தக்கவைத்துக் காட்டினால் அது வரவேற்கத்தக்கதாகும்.
தமிழ் தேசிய கூட்டடைப்புடன் சவால் விடும் தகுதி மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தனுக்கு இல்லை. கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் ஆரையம்பதியில் தமது குண்டர்களுடன் என்னை தாக்க வந்த பிரசாந்தன் இத்தேர்தலில் நான் வெற்றி பெற்றால் தான் மாகாணசபை உறுப்பினர் பதவியை துறப்பதாக கூறினார். ஆனால் நான் அதிகப் படியாக வாக்குகளால் வெற்றி பெற்றும் அவர் தமது சொல்லை நிறைவேற்றவில்லை.
பல அட்டூழியங்களை மேற்கொள்ளும் முதலமைச்சர் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் பெற முடியாத நிலையில் மீண்டும் சவால் விடுவது வெட்கக் கேடான விடயமாகும்.
அதுமட்டுமின்றி தற்போது பல பிரமுகர்களிடமும் சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்தி உதவுங்கள். நாங்கள் மாத்திரம் இதில் தமிழ் மக்கள் சார்பாக போட்டியிடுகின்றோம் என கேட்டும், கெஞ்சியும் திரிவதை நாங்கள் அறிவோம்.
எங்களுடன் போட்டியிட பயப்படும் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் எங்களுக்கு சவால் விடுவதா? திடீரென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குள் நுழைந்த பிரசாந்தன் அங்கிருந்த மூத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்களை புறம்தள்ளி முதலமைச்சரை மயக்கி பொதுச் செயலாளர் பதவியை பெற்றுக் கொண்டமை இன்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் உட்பூசலாக உள்ள நிலையில் எங்களது கட்சி உட்பூசல் பற்றி பேச முற்படுகின்றார்.
உண்மையிலே எங்களது கட்சியினர் ஒற்றுமையாக உள்ளோம். கருத்து வெளியிடும் ஜனநாயகம் எங்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு. ஆனாலும் எமது கட்சியினர் உறுதியாக உள்ளதை பியசேன தவிர ஏனைய எவரையும் அரசாங்கத்தால் விலைக்கு வாங்க முடியவில்லை என்பதில் இருந்து பிரசாந்தன் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை தமிழரசுக் கட்சி மகாநாட்டுக்கு வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உட்பட பல இடங்களில் இருந்து மக்கள் வருகை தந்து கலந்து கொண்டது உண்மையாகும். அதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போன்று அம்பாறை, பொலநறுவை மாவட்டங்களில் இருந்து சிங்கள மக்களை பஸ் வண்டி மூலம் ஏற்றி பறிக்கவில்லை.
மட்டக்களப்பு மக்கள் தங்களது அச்சுறத்தலிலும், பெரும்பாண்மையாக வந்து கலந்து கொண்டது பெரும் வெற்றியே. மகாநாட்டை கலைக்க தாங்கள் மேற்கொண்ட அனைத்து சதியும் தோல்வி கண்டதுடன், தங்களது இச்சதி செயற்பாட்டால் மக்கள் எங்கள் மீது கொண்ட நம்பிக்கை பெருகியுள்ளது.
இனவீதாசாரம், வாக்காளர் நிலை யாவும் எங்களுக்கு தெரியும். இதனாலேயே இத்தேர்தலில் நாங்கள் போட்டியிட முனைந்துள்ளோம். முடியுமானால் தங்கள் உறுப்பினர்களை தக்கவைத்து காட்டி பெருமை கொள்ளுங்கள். இதைவிடுத்து வாய்க்கு வந்த வகையில் பேசி காலத்தை கழியாது தங்களது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மாகாண சபை உறுப்பினரையும், முதலமைச்சர் பதவியையும் நிலை நிறுத்த ஜனநாயக ரீதியில் முயற்சி செய்யுங்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு இத்தேர்தலில் தங்களை எதிர்த்து போட்டியிடுவதை நிறுத்த முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !