.jpg)
ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்.) போட்டிகளில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் விடுத்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மீண்டும் நிராகரித்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இப்போட்டிகளை நடத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் திட்டமிட்டுள்ளது. எஸ்.எல்.பி.எல். போட்டிகளில் விளையாட தனது வீரர்களை அனுமதித்தால், ஏனைய நாடுகளால் ஏற்பாடு செய்யப்படும் இருபது20 போட்டிகளிலும் விளையாட அவர்களை அனுமதிக்க வேண்டியிருக்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கருதுகிறது.
அத்துடன், இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் மாதங்களில் இறுக்கமான சுற்றுலா அட்டவணையை கொண்டுள்ளது. இலங்கையில் ஒருநாள் மற்றும் இருபது20 சுற்றுப்போட்டிகளில் இந்திய அணி பங்குபற்றவுள்ளது. அதன்பின் சொந்த மண்ணில் நியூஸிலாந்துடன் இரு டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றவுள்ளது.
"அவர்கள் (ஸ்ரீலங்கா கிரிக்கெட்) எம்மை அணுகினார்கள். ஆனால் எம்மால் எமது வீரர்களை அனுப்பமுடியாதிருக்கும் " என இந்திய கிரிக்கெட் சபை அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
தேசிய அணியில் இடம்பெறாத இந்திய வீரர்களை எஸ்.எல்.பி.எல்.போட்டிகளில் சேர்த்துக்கொள்ளும் நம்பிக்கையுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் உள்ளது. எனினும் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள இந்திய கிரிக்கெட் சபை தயங்குகிறது. எனினும் இம்முறை திட்டமிட்டபடி இச்சுற்றுப்போட்டியை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரியொருவர் கூறினார்.
கடந்த வருடம் இப்போட்டிகளை ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் திட்டமிட்டது. எனினும், இந்திய வீரர்கள் பங்குபற்றாத நிலையில் அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. எஸ்.எல்.பி.எல். போட்டிகளின் பின்னால் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி இருப்பதாக சந்தேகித்தமையும் இப்போட்டிகளுக்கு ஆதரவளிக்க இந்திய கிரிக்கெட் சபை மறுத்தமைக்கான காரணமாகும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !