
இலங்கை அமைச்சர்களுக்கு எதிராக தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இலங்கை அமைச்சர்களுக்கு, இந்திய-தமிழக அரசுகள் பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், தமிழக கட்சிகளை வன்முறையாளர்கள் என்றும் குறை கூறி ஜாதிக ஹெல உறுமய உட்பட சில இலங்கை கட்சிகளும், அரசியல்வாதிகளும் பொங்கி எழுந்துள்ளார்கள். ஹெல உறுமய, தேசப்பற்று தேசிய இயக்கம் மற்றும் விமல் வீரவன்ச கட்சி ஆகியவை, தாம் ஏதோ நாகரீகம் மிக்க கண்ணியமான அரசியல் செய்கின்ற கட்சிகள் போல் கருத்துகள் தெரிவிப்பதை பார்த்து உலகமே கைகொட்டி சிரிக்கின்றது.
இந்த வரிசையில் இப்போது, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற கொரடா ஜோன் அமரதுங்கவும் சேர்ந்துள்ளார். இதன்மூலம், இன்று ஆளுகின்ற அரசு சார்பு அரசியல்வாதிகளுக்கு தமிழகத்தில் கிடைக்கும் மரியாதை, எதிர்காலத்தில் எதிர்கட்சி தலைவருக்கும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசியல்வாதிகளுக்கு, தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மரியாதை வழங்கி வருவது சம்பந்தமான இவர்களது கருத்துகளை, வரலாற்றுடன் ஒப்பிட்டு பார்த்தால், சாத்தான் ஓதும் வேதம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜனாதிபதி ஜெயவர்தன முன்னிலையிலேயே ராணுவ அணிவகுப்பின்போது, இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மண்டையை துப்பாக்கி கட்டையால் அடித்து உடைத்து அவரை கொலை செய்ய முயற்சி கொழும்பில் நடந்தது. தனது கெட்டிக்கார மெய்பாதுகாவலரின் புண்ணியத்தால் ராஜீவ் அன்று தப்பினார். பின்னாளில் புலிகளால் ராஜீவ் கொலை செய்யபட்டதால் இந்த சம்பவம் இன்று மறக்கடிக்கபட்டாலும், அது இங்கே கொழும்பில் நடந்தது என்ற உண்மை ஒருபோதும் மறைக்கப்பட முடியாதது.
அதேபோல், இந்தியா-இலங்கை நாடுகளில் பிரபலம் பெற்றுள்ள நடிகர் ஷாருக் கான், இலங்கை வந்தபோது அவரது வருகைக்கு எதிராக ஹெல உறுமய ஆர்ப்பாட்டம் செய்தது. அந்த ஆர்ப்பாட்டம் வன்முறையில் முடிந்து, ஷாருக் கானின் கலை நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீசப்பட்டது. அதில் ஐந்து அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஷாருக் கான் ஓடியே போய் விட்டார். இனிமேல் கோடி. கோடியாக கொட்டி கொடுத்தாலும் அவர், இலங்கை வருவார் என நான் நம்பவில்லை.
இலங்கை வந்த மேற்குலக நாடுகளின் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எதிராக ஹெல உறுமய, தேசப்பற்று தேசிய இயக்கம் மற்றும் விமல் வீரவன்ச கட்சியினர் பல்வேறு தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது அனைவருக்கும் தெரியும்.
இவர்கள் எவரையும் எதுவும் செய்யலாம். ஆனால் இவர்களுக்கு எதிராக எவரும், எதுவும் செய்யவும், சொல்லவும் கூடாது. இந்த கோமாளிக் கருத்தை தமிழகமும், இந்தியாவும், உலகமும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
உண்மையில் இந்தியா செல்லும் இலங்கை அமைச்சர்களுக்கு, அந்நாட்டு காவல்துறை முழுமையான பாதுகாப்பு வழங்கி வருகிறது. சமீபத்தில் அங்கு போய் மரியாதை வாங்கி வந்த, பிரதி அமைச்சர் ரெஜினோல்ட் குரே இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
இலங்கையுடன் ஒப்பிட்டால் இந்தியா ஊடக சுதந்திரம்கொண்ட ஒரு ஜனநாயக நாடு. எனவே, இந்தியாவில் அந்நாட்டு ஜனநாயக வரையறைகளுக்கு உட்பட்ட ஆர்ப்பாட்டங்களை அந்நாட்டு அரசுகளால் நிறுத்த முடியும் என நான் நம்பவில்லை.
இலங்கை இனப்பிரச்சினை இன்று இலங்கை கரைகளை கடந்து ரொம்ப நாளாகி விட்டது. இதை இந்த இனவாத முட்டாள்கள் உணர வேண்டும். உண்மையில், இவர்கள் இங்கே தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தினால், அங்கே அவை தானாகவே நின்று போய் விடும்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !