.jpg)
ராம்நகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்தியானந்தா மீது அமெரிக்காவில் வசித்து வரும் ஆர்த்தி ராவ் என்ற பெண் சீடர் கன்னட தொலைக்காட்சி அலைவரிசையொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தன்னை மயக்கி பலமுறை நித்தியானந்தா உடலுறவு வைத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும் பல பெண்களை அவர் வல்லுறவுக்கு உட்படுத்தி வருகிறார் என்றும், ஹிப்னோடிசம் மூலம் பெண்களை அவர் அடிமையாக வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிடதி ஆசிரமத்தில் வைத்து ஊடகவியலாளர்களை நித்தியானந்தா சந்தித்த போது ஆர்த்தி ராவ் விவகாரம் பெரிதாகியது. இதன்போது நித்தியானந்தாவின் ஆதரவாளர்களால் கன்னட தொலைக்காட்சியொன்றின் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு ஆதரவாக கன்னட நவநிர்மான் சேனே அமைப்பினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இரு தரப்பினர் மீதும் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இரு தரப்பிலிருந்தும் பலர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து தலைமறைவான நித்தியானந்தாவை ராம்நகர் பொலிஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது ஆசிரமும் சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனுவொன்றைத் தாக்கல் செய்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதையடுத்து எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான் ராம்நகர் நீதவான் நீதிமன்றில் நித்தியானந்தா சரணடைந்துள்ளார். சரணடைந்த நித்யானந்தாவை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் ராம்நகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. (தட்ஸ்தமிழ்)
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !