
ஐ.பி.எல். இறுதிப்போட்டி
5-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 4ஆம் திகதி தொடங்கியது. 9 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றுடன் ராஜஸ்தான் ரோயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், புனே வொரியர்ஸ் ஆகிய அணிகளும், பிளே-ஆப் சுற்றுடன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளும் வெளியேற்றப்பட்டன. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர்கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐ.பி.எல். மகுடத்திற்கான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா அணியில் மூன்று மாற்றமாக காயத்தில் இருந்து மீளாத பாலாஜி மற்றும் பிரன்டன் மெக்கல்லம், டெபப்ரதா தாஸ் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக பிரெட்லீ, மன்விந்தர் பிஸ்லா, மனோஜ் திவாரி இடம் பெற்றனர்.
வலுவான ஆரம்பம்
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணித் தலைவர் டோனி முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்தார். இதன்படி மைக் ஹஸ்ஸியும், முரளிவிஜயும் சென்னை அணியின் இன்னிங்சை தொடங்கினர். அவசரம் காட்டாமல் தொடக்க ஓவர்களை மிகவும் எச்சரிக்கையுடன் கையாண்டனர். இதனால் முதல் 2 ஓவர்களில் 6 ஓட்டங்கள் மட்டுமே வந்தது. அதன் பிறகு ஹஸ்ஸி-விஜய் கூட்டணியின் தாக்குதல் தொடங்கியது. ஷகிப் அல்-ஹசனின் ஓவரில், சிக்சரும், பவுண்டரியும் ஹஸ்ஸி ஓட விட்டார். இதே போல் உலகின் அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவரான பிரெட்லீயின் பந்து வீச்சில் இருவரும் தலா ஒரு சிக்சர் விரட்டி அசத்தினர். ரசிகர்களின் கூட்டம் அலைமோதிய சேப்பாக்கம் அரங்கில், சென்னை துடுப்பாட்ட வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு ஓட்டத்துக்கும் கரவொலி, காதை பிளந்தது.
10 ஓவர்களில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 86 ஓட்டங்கள் திரட்டியது. அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்த முரளிவிஜய் 42 ஓட்டங்களில் (32 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சுரேஷ் ரெய்னா களம் புகுந்தார். முக்கியமான இந்த ஆட்டத்தில் கைகொடுத்த சுரேஷ் ரெய்னா, யூசுப்பதானின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.
மர்ம சுழற்பந்து வீச்சாளர் என்று வர்ணிக்கப்பட்ட சுனில் நரினும், ரெய்னாவின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. நரினின் பந்து வீச்சில் இரு மெகா சிக்சர்களை தூக்கியடித்து, ரசிகர்களை பரவசப்படுத்தினார். இதில் ஒரு பந்து 105 மீட்டர் தூரத்திற்கு பறந்து போய் விழுந்தது. இதற்கிடையே அரைசதத்தை கடந்த மைக் ஹஸ்ஸி 54 ஓட்டங்களில் (43 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) காலிசின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார்.
இதையடுத்து டோனி ஆட வந்தார். கலிசின் பந்து வீச்சில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்து கணக்கை தொடங்கிய டோனியிடம் இந்த முறை ஹெலிகொப்டர் ஷொட்டை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டோனியால் ஹெலிகொப்டர் வகையிலான சிக்சரை அடிக்க முடியவில்லை. இதே போல் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி கூட விட்டுக்கொடுக்காமல் ஷகிப் அல்-ஹசன், கட்டுக்கோப்பாக பந்து வீசியதால் சென்னை அணியால் 200 ஓட்டங்களையும் தொட முடியாமல் போனது.
191 ஓட்டங்கள் இலக்கு
அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்வில் பக்கபலமாக இருந்த சுரேஷ் ரெய்னா 73 ஓட்டங்கள் (38 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) சேகரித்த நிலையில் கடைசி பந்தில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் குவித்தது. டோனி 14 ஓட்டங்களுடன் (9 பந்து, 2 பவுண்டரி) களத்தில் இருந்தார். ஐ.பி.எல். வரலாற்றில் கொல்கத்தாவுக்கு எதிராக சென்னை அணியின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்பு 2009ஆம் ஆண்டு 3 விக்கெட் 188 ஓட்டங்கள் எடுத்ததே அந்த அணிக்கு எதிராக அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரினால் ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியவில்லை. இந்த தொடரின் சிக்கனமான பந்து வீச்சாளரான சுனில் நரின் 37 ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தார்.
பிஸ்லா விஸ்வரூபம்
அடுத்து 191 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் இன்னிங்சை கவுதம் கம்பீரும், மன்விந்தர் பிஸ்லாவும் தொடங்கினர். ஹில்பனாசின் முதல் ஓவரின் கடைசி பந்தில் நம்பிக்கை நட்சச்திரம் கம்பீர் (2 ஓட்டங்கள்) கிளீன் போல்டானார். கம்பீர் ஆட்டம் இழந்ததும், கொல்கத்தா அணி தடம்புரண்டு விடும் என்பது தான் பெரும்பாலாரின் எண்ணமாக இருந்தது. ஆனால் அதிகம் பிரபலம் இல்லாத பிஸ்லா திடீரென விசுவரூபம் எடுத்தார்.
அல்பி மோர்கலின் ஓவரில் 4 பவுண்டரிகளை சாத்திய பிஸ்லா, அஸ்வினின் பந்து வீச்சில் 2 சிக்சர்களை பதம் பார்த்தார். கடினமான ஒரு கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய பிஸ்லா, சென்னை அணியின் மோசமான பீல்டிங்கை கன கச்சிதமாக பயன்படுத்தி கொண்டு, அனைத்து பந்து வீச்சாளர்களையும் துவம்சம் செய்தார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் சென்னை வீரர்கள் பதற்றமடைந்தனர். அவரது துடுப்பாட்டத்தால் கொல்கத்தா அணியின் ஓட்ட எண்ணிக்கை கிடுகிடுவென எகிறியது. 10 ஓவர்களில் கொல்கத்தா அணி 100 ஓட்டங்களை தொட்டது.
அணியின் ஓட்ட எண்ணிக்கை 139 ஓட்டங்களாக உயர்ந்த போது, ஒரு வழியாக பிஸ்லாவை வெளியேற்றினர். அவர் 89 ஓட்டங்களுடன் (48 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) களத்திலிருந்து திரும்பினார். அதுவரை அவருக்கு பக்கபலமாக நின்ற கலிஸ் அதன் பிறகு பொறுப்பை எடுத்துக் கொண்டு சிறப்பாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்தார். மறுமுனையில் சுக்லா (3 ஓட்டங்களை), யூசுப்பதான் (1 ஓட்டங்கள்) வந்த வேகத்தில் நடையை கட்டினர்.
இறுதிகட்டத்தை நெருங்க நெருங்க ஆட்டத்தில் பரபரப்பும்... திரிலிங்கும் தொற்றி கொண்டது. கடைசி 2 ஓவர்களில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரை வீசிய ஹில்பனாஸ், காலிசின் (69 ஓட்டங்கள், 49 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) விக்கெட்டை பறித்தாலும், அந்த ஓவரில் வீசிய ஒரு நோ-பால் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும் அமைந்தது. அந்த நோ-பாலால் விக்கெட் வாய்ப்பு பறிபோனதுடன் ஒரு பவுண்டரி கூடுதலாக சென்றது. இதனால் அந்த ஓவரில் மொத்தம் 11 ஓட்டங்களை விட்டுக்கொடுக்க வேண்டியதாகி விட்டது.
கொல்கத்தா அணி சாம்பியன்
இதையடுத்து கடைசி ஓவரில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டன. மனோஜ் திவாரி, ஷகிப் அல்-ஹசன் களத்தில் இருந்தனர். ஆட்டத்தின் முடிவு எப்படி இருக்குமோ? என்ற பதைபதைப்பு ரசிகர்கள் முகத்தில் தெரிந்தது. சில ரசிகர்கள் கண்ணீர் விட்டனர்.
இப்படிப்பட்ட சூழலில் பரபரப்பான இறுதி ஓவரை வெய்ன் பிராவோ வீசினார். இதில் முதல் இரு பந்துகளில் 2 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 3-வது மற்றும் 4-வது பந்தை மிக எளிதாக பவுண்டரிக்கு அனுப்பி மனோஜ்திவாரி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 192 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்து, முதல் முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை தன்வசப்படுத்தியது. மேலும் சென்னை அணியின் ஹெட்ரிக் கனவையும் கொல்கத்தா அணி தகர்த்தது. இந்த வெற்றியை கொல்கத்தா அணி வீரர்கள் விடிய விடிய கொண்டாடி மகிழ்ந்தனர். அவர்களுக்கு அணியின் உரிமையாளர் நடிகர் ஷாரூக்கான் விருந்து அளித்து பாராட்டினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !