Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய மாநாடு - முழுமையான ஒரு பார்வை

தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய மாநாடு - முழுமையான ஒரு பார்வை

Written By sakara on Sunday, May 27, 2012 | 8:00:00 PM


அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் அவசியம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடக்கு கிழக்கில் நடைபெற்றுவரும் இராணுவ ஆக்கிரமிப்பு நிலை விலக்கல், காணாமல் போனோர், கைதிகள் பிரச்சினைக்கு விரைந்த  தீர்வு எட்டப்படல், வாழ்க்கை செலவு சுமையிலிருந்து மக்களை விடுவித்து இயல்;பு வாழ்வை ஏற்படுத்துதல் உட்பட பல தீர்மாஅடங்கிய தீர்மானங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் இன்று நிறைவேற்றப்பட்டன.

மட்டக்களப்பு, ஊறணியிலுள்ள அமெரிக்க மிசன் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிமுதல் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இலங்கையில் தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகூடிய அதிகாரப் பகிர்வு ஊடாக வட, கிழக்கு பிராந்தியத்தில் எமது மக்கள் தமது அரசியல், சமூக, பொருளாதார, கல்வி, கலாச்சார அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆட்சியதிகாரங்கள் அவர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும். 

இப்படியானதொரு அரசியல் தீர்வு தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்டும் கூட அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமையினால் இலங்கையின் தேசியப் இனப் பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. 

மேலும் காலத்தை வீணடிக்காமல் இந்த அடிப்படையிலும் முஸ்லிம் மக்களது அபிலாஇஷகளை அங்கீகரிக்கும் வகையிலும் அரசியல் தீர்வொன்றுக்கு அரசாங்கம் இணங்க வேண்டும். வட, கிழக்கு பிராந்தியத்தில் போர்ச் சூழலினால் இடம் பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் உடனடியாக மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் வீட்டு வசதிகளுடன் மீள்குடியேற்றப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். 

போரினால் நிர்க்கதியாக்கப்பட்ட வாழ்விழந்த பெண்கள் (தலைமை தாங்கும் பெண்கள்)இ பெற்றோரை இழந்த பிள்ளைகள் மாற்றுத்திறனாளர்கள்; ஆகியோருக்கு புனர்வாழ்வும் மறுவாழ்வும் அளிக்கப்பட வேண்டும். இந்தக் கடமைகளின் மேற்கொள்வதற்கு மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும். இனமத அரசியல் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடுகள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பகிர்ந்தழிக்கப்பட வேண்டும். 

வட, கிழக்குப் பிராந்தியம் இராணுவ மயமாக்கப்பட்ட நிலையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மக்களின் நில உரிமை, வாழ்வாதார உரிமை என்பன சுதந்திரமாக செயற்படுத்தும் நிலமை உருவாக வேண்டும். மக்களின் அன்றாட வாழ்வில் இடையூறாக நிற்கும் இராணுவத் தலையீடு முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். 

இதேபோன்று குடியியல் நிர்வாகத்தில் உள்ள இராணுவத் தலையீடு முற்றாக அகற்றப்பட வேண்டும். வடகிழக்கு பிராந்தியத்தில் தலைவிரித்தாடும் மக்களுக்கெதிராக மனித உரிமை மீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வடகிழக்கில் தமிழ் மொழி தெரியாத சிங்கள இராணுவ ஆளுனர்கள், தமிழ் மொழி தெரியாத சிங்கள அரச அதிபர்கள், சிங்கள அதிகாரிகள் முற்றாக  அகற்றப்பட வேண்டும்.

காணாமல் போயுள்ளவர்கள், சரணடைந்த பின் காணாமல் போனவர்கள் சம்மந்தமாக விசாரணைகள் நடாத்தப்பட்டு இவற்றுக்கு பொறுப்பாக உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  மரண சான்றிதல் மற்றும் பொருத்தமான நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும், அவசரகால சட்டத்தின் கீழும் தடுப்புக் காவலில் அல்லல் உறும் தமிழ்  அரசியல் கைதிகள் அனைவருக்கும் 1970ஆம், 1980ஆம் ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட முன்மாதிரிகளைப் பின்பற்றி பொது மன்னிப்பு வழங்கப்;;பட வேண்டும். 

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினால் முழு நாடும் அல்லல்படும் சூழ்நிலையில்இ யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வருமானம் வாழ்வாதாரங்களை இழந்த வடகிழக்கு பிராந்திய மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். 

வேலையற்றவர்களுக்கும்  விசேடமாக வட, கிழக்கு பிராந்தியத்தில் வாழும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். பொதுச் சேவையில் 5 வீதத்திற்கு குறைந்திருக்கும் தமிழர்களின் எண்ணிக்கையின் காரணமாக தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளார்கள்;. அதனால் பொதுச் சேவையில் அவர்களுடைய விகிதாசாரம் தேசிய விகிதாசார அடிப்படையில் தாமதமின்றி  உயர்த்தப்பட வேண்டும். 

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், தாயகத்திலுள்ள தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை உணர்ந்து தமிழ் மக்களுடைய நம்பிக்கையுள்ள பிரதிநிதிகள் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு அவற்றை அடைவதற்கு ஆதரவாக செயற்படுமாறு புலம் பெயர்ந்த உறவுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். 

அத்தோடு மீள்குடியேற்ற விடயங்களில் எமது மக்களுக்கு வேண்டிய பொருள் உதவிஇ நிபுணத்துவ உதவி போன்றவற்றை ஒரு குறித்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வழங்க முன்வர வேண்டும் என்ற வகையில் புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளுக்கான வேண்டுகொள் அமைந்திருந்தது.

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மனித உரிமை பாதுகாப்பு சம்மந்தமாக சர்வதேச சமூகம் இதுவரை ஆற்றியிருக்கும் பங்களிப்புக்காக அவர்களுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில் தொடர்ந்து தமிழ் மக்களை வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கும் தமிழ் மக்களின் மனித உரிமைகள், அரசியல் உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் சர்வதேச சமூகம் தேவையான உதவிகளையாற்றி அதன் மூலமாக நாட்டில் நீதி, நேர்மை,  கௌரவம்,  சமத்துவம் என்ற அடிப்படையில் விசுவாசமான புரிந்துணர்வும் சமத்துவமும் நல்லுணர்வும் ஏற்படுத்த வழி செய்ய வேண்டும்.

எம்மால் நியாயமான முறையின் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு எமது மக்கள் பரிபூரணமான ஆதரவை நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் அதே வேளையில் இவற்றை அடைவதற்கு இந் நாட்டின் சிங்கள, முஸ்லிம் சகோதரர்களும் ஏனைய முற்போக்கு சக்திகளும்  தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

இலங்கையில் 2009 மேயில் முடிவடைந்த போரின்போது சர்வதேச மனிதாபிமான சட்டங்கள்,உரிமைகள் மீறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா.செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்வின் சிபாரிசுகளின் படி குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு சர்தேவ விசாரணை ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும்.

அதேபோல் இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவால் செய்யப்பட்ட பொறுப்புக்கூறும் கடப்பாடு தவிர்ந்த ஏனைய பரிந்துரைகள் நடைமுறைப்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 2012ஆம் ஆண்டு மார்ச் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டால் நாட்டில் விசுவாசம், புரிந்துணர்வு ஏற்பட்டு கௌரவமான சமாதானம் ஏற்படும்.

சாத்வீகப் போராட்டத்துக்கு அறிவித்தல் விடுக்கும் வகையில் அமைந்த 9ஆவது தீர்மானத்தில், இந்த மாநாட்டில் இலங்கை அரசாங்கத்திடம் மிகவும் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம். இவற்றை அரசாங்கம் மறுதலிக்குமாக இருந்தால் இந்த நியாயமான இலக்குகளை அடைவதற்காக நாம் காந்தீய வழியில் வன்முறையற்ற சாத்வீக போராட்டம் ஒன்றை உரிய நேரத்தில் உரிய முறையில் ஆரம்பித்து அவற்றை அடையும் வரை போராடுவோம் என்று தெளிவாகவும் வெளிப்படையாகவும் தமிழ் அரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு உறுதியுடன் அறிவித்தல் கொடுத்து தீர்மானங்களை நிறைவேற்றியது. 


மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தேசிய மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தன் ஆற்றிய நீண்ட உரை பின்வருமாறு: 

எமது கட்சியின் தேசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்திருக்கும் - அதன் உருவமாகவும், உயிராகவும், இயங்கு சக்தியா கவும் விளங்குகின்ற உங்கள் ஒவ்வொருவரையும், இந்த மட்டக்களப்பு மண்ணில் - நான் உவகையுடன் வரவேற்கிறேன். 

தமிழ் தேசிய இனத்தின் அரசியல் ஆன்மாவினது சின்னமாக விளங்குவதும், உயரிய விழுமியங்களுடன் தனக்கெனத் தனித்து வமான ஓர் அரசியற் பாரம்பரியத்தைக் கொண்டதுமான - இலங்கைத் தமிழரசுக் கட்சியினது 2012 ஆம் ஆண்டில் நிகழும் கட்சியின் 14ஆவது தேசிய மாநாட்டில், அதன் தொண்டர்களாகிய நாம் - பெருமிதத்துடன் ஒன்றுகூடியிருக்கின்றோம். 

இலங்கைத் தீவை வன்கவர்ந்து ஆண்ட வெளியார்களிடமிருந்து, சிறீலங்கா சுதந்திரம் அடைந்துவிட்டதாகப் பிரகடனம் செய்யப்பட்ட தன் பின்னரான - கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில், முன்னெப் போதும் இருந்திராதவிதமான, ஒரு புதிரான காலகட்டத்தில் - நாம் இங்கே நம்பிக்கையுடன் ஒன்றுகூடியிருக்கின்றோம். 

தமிழ் மக்களது அரசியல் அபிலாசையின் அங்கீகாரம் பெற்ற வெளிப்பாட்டு வடிவமாக, இலங்கையில் மட்டுமன்றி, அனைத்துலக ரீதியிலும் தங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக எமது மக் களால் சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமிதம் மிக்க தனிப் பெரும் அரசியல் அமைப்பாக - நாம் இங்கே அடக்கத்துடன் ஒன்றுகூடியிருக்கின்றோம். 

தமக்கே உரித்தான அடிப்படை மனித உரிமைகளையும், தம் மைத் தாமே ஆளுவதற்கான நியாயமான அரசியல் அதிகாரங் களையும் கேட்டமைக்காக மட்டுமே படுகொலை செய்யப்பட்டுவிட்ட நூறாயிரம் வரையான எமது மக்களின் புதைகுழிகளின் மீது அஞ்சலித்து - நாம் இங்கே ஒன்றுகூடியிருக்கின்றோம். 

தாம் நேசித்த தமது மக்களின் அரசியல் விடுதலைக்கான அமைதிவழிப் போராட்டங்கள் வெற்றியடையாத சூழலில், ஆயுத மேந்திப் போராடி, தமது தூய உயிர்களை ஈகமாய் கொடுத்துவிட்ட தமிழ் இளைஞர்களின் அர்ப்பணிப்புகளை மனதில் இருந்தி - நாம் இங்கே ஒன்றுகூடியிருக்கின்றோம். 

சிறீலங்கா அரசாங்கம் எமது இனத்தின் மீது ஒர் இனப்படு கொலையை நிகழ்த்தியது என்பதையும், எமது இனத்திற்கான அரசியல் உரிமைகளை அது தொடர்ந்தும் மறுத்துவருகின்றது என்பதையும் - அனைத்துலக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பதிவாக ஆக்கி - சிறீலங்கா அரசாங்கத்தின் மீது குறியீட்டு ரீதியான ஒர் உலகக் கண்டனமாக ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் பின்பலமாகச் செயற்பட்ட வெற்றி யின் நிறைவுடன் - நாம் இங்கே ஒன்றுகூடியிருக்கின்றோம். 

இலங்கைத் தமிழரசுக் கட்சியானது, அதன் பிதாமகரான, தேசத் தந்தை சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்களால் தமிழர்களுக்கென இந்தத் தீவில் ஓரு சுயாட்சி அரசை நிறுவ வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்சி@ தனது கொள்கையையே தனது பெயராகவும், அந்தக் கொள்கையையே தனது இயங்குவிதியாகவும் கொண்டிருக்கின்ற கட்சி. இருந்தாலும், எமது கட்சியின் பெயர், எமது கட்சியின் கொள்கையை மட்டும் எடுத்தியம்பி நிற்கவில்லை அது - எமது இனத்தின் வரலாற்றையுமே குறித்து நிற்கின்றது. 

இந்தத் தீவில், தமிழர்கள், உன்னதமான சமூக - பண்பாட்டு வாழ்வை மட்டுமல்லாது, தன்னிறைவான ஒரு பொருளாதாரப் பொறிமுறையையும்; முன்பொரு காலத்தில் கொண்டி ருந்தனர்@ தமக்கெனத் தனித்த அரசுகளை நிறுவி, சீரிய முறையில், ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, அவர்கள் தம்மைத் தாமே ஆண்டனர். 

பின்னர், இந்தத் தீவை வன்கவர்வு செய்த வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள், தமது இலகுவான ஆளுதலுக்காக, முழுத் தீவையும் ஒரே நாடு என்று ஆக்குகின்ற வரையில் - இந்தத் தீவில் இறைமையுடைய தமிழரசுகளை எமது இனம் கொண்டிருந்தது என்ற வரலாற்றின் குறியீடாகவும் எமது கட்சி; திகழ்கின்றது. எமது கட்சியின் சின்னமாக, எமது தேசபிதா அவர்கள் தேர்ந் தெடுத்த ~வீடு| என்பதும் அதையே குறிக்கின்றது. இந்த ~வீடு| என்பது எமது இனத்தின் இல்லம்@ எமது இனத்தின் தாயகம்@ எமது இனத்தின் இறையாண்மை. 

எமது இனத்தி;ன் இல்லத்தை, எமது இனத்தின் தாயகத்தை, எமது இனத்தின் இறையாண்மையை, மீளவும் மீட்டெ டுத்து, எமது இனத்திற்கே அதிகாரபூர்வமாக உரித்துடையதாக்கிவிடு வதுதான் எமது கட்சியின் அடிப்படைக் கொள்கை. எமது கட்சியின் அந்த அசையாத கொள்கையைத்தான் எமது கட்சியின் சின்னமான ~வீடு| பிரதிபலித்து நிற்கின்றது. 

எவ்விதமாக ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் எமது கட்சிக்கு வரலாறு ஓர் அரசியல் பிறப்பைத் தந்ததோ, அதே விதமாகவே, பத்தாண்டுகளுக்கு முன்னர், எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் இருந்த அன்றைய காலச் சூழலுக்கு இசைவாக, வரலாறு எமது கட்சிக்கு ஒரு புதிய அரசியற் பாத்திரத்தையும் தந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற குடையின் கீழ் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்த தமிழ் அரசியல் கட்சிகளைத் தலைமையேற்று வழி நடத்தும் பாத்திரமே அது. 

அந்தத் தலைமைப் பாத்திரம் என்பது கூட, எமது கட்சியின் வரலாறு, பாரம்பரியம், தனித்துவம் என்பவற்றின் அடிப்படையிலிருந்துதான் வந்தது. அந்தப் புதிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியே இன்றுவரை விளங்கி வருகின்றது. அவ்வாறே அது என்றும் விளங்கி வரும். ஆயுதப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரான தற்போதைய சூழலில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையிலான, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆகிய நாம்தான் தமிழ் மக்களின் முதன் மைப் பிரதிநிதிகள். 

முற்றுமுழுதான சிறீலங்காப் படை மயமாக்கத்தின் கீழ், சிறீலங்கா அரசாங்கத்தின் முழுமையான ஆளுகையின் கீழ், பலவிதமான அழுத்தங்களுக்கு மத்தியிலும் - துணிவுடனும், உறுதியு டனும், தெளிவுடனும் - வாக்களித்த தமிழ் மக்களால் சுதந்திரமாகத் தேந்தெடுக்கப்பட்ட தனிப் பெரும் கட்சி எமது கட்சி. அந்த வகையில், இப்போது - நாம்தான் தமிழர்களின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகள். 

எவ்விதமான ஆயுதப் பின்னணிகளும் அற்ற - வன்முறைப் போராட்ட வடிவங்களை என்றைக்கும் நிராகரித்த - நீண்ட ஜனநாயகப் பண்பு களைத் தன்னகத்தே கொண்ட - நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டங்களையே எப்போதும் முன்வைத்த - இலங்கைத் தமிழரசுக் கட்சியான எமக்குத்தான்; - அதிகூடிய இராஜீய அங்கீகாரமும் அனைத்துலக சமூகத்தால் வழங்கப்படுகின்றது. இந்த இராஜீய அங்கீகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஏற்புடையதாகவும் உரித்துடையதாகவும் கூட பரிணமித்துள்ளது. 

எனது அன்புக்குரியோர்களே! தமிழ் தேசிய இனத்தின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம், இப்போது முற்றிலும் வேறுபட்ட புதியதோர் அத்தியாயத்திற்குள் நுழைந்திருக்கின்றது. இந்தப் புதிய வரலாற்றுப் பரிமாணத்தில், இந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று வழிநடத்திச் செல்லும் எமது கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களாகிய நாம், எமது கட்சியின் பேராளர்களாகிய உங்களுக்கும், எமக்கு வாக்களித்துத் தம்மைப் பிரதிநிதித்துவம் செய்யும் தகுதியை தந்த எமது மக்களுக்கும், எமது கட்சியின் கொள்கை நிலைப்பாடு சார்ந்த ஒரு விளக்கத்தை அளிக்க வேண்டிய கடமைப்பாடு உடையவர்களாக இருக்கின்றோம். 

1948இல் சிறீலங்கா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னான, முதல் 30 ஆண்டு கால வரலாறு என்பது, தமிழர்களைப் பொறுத்தவரையில், ஏமாற்றுதல்களாலும் அவமதிப்புக்களாலுமே நிரப்பப்பட்டிருந்தது. தமிழர்களோடு எழுதப்பட்ட உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டன. தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தூக்கியெறியப்பட்டன. 

சகமனிதர்களாக வாழ்வதற்குத் தமிழர்களுக்கு இருந்த உரிமைகளை நிராகரிக்கும் அரசமைப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டன. இவற்றுக்கெல் லாம் நீதி கேட்டுத் தமிழினம் அமைதியாக முன்னெடுத்த மென் முறைப் போராட்டங்கள் அனைத்துமே, ஆயுத வன்முறைகள் மூலம் ஒடுக்கப்பட்டன. 

இந்த அவமதிப்புகள் எல்லாவற்றினதும் அடிப்படை உண்மையாக இருந்தது, எங்களுக்குள் ஒர் அகப்பலமோ, அல்லது எங்களுக்கு வெளியே ஒரு புறப் பலமோ இல்லாமல் எமது இனம் இருந்ததுதான். ஏமாற்றுதல்களாலும் அவமதிப்புக்களாலும் நிரப்பப்பட்ட இந்த வர லாற்றுப் பின்னணியில்தான் - தமிழினத்திற்கென ஒரு தனியான தனித்த அரசை உருவாக்குவதைத் தவிர வேறு வழிகள் இல்லை என்ற நிலைப்பாடு தோற்றம் கொண்டது. 

அந்த நிலைப்பாட்டின் அடிப் படையிலேயே - எமது கட்சியையும் ஓர் அங்கமாகக் கொண்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழம் என்ற தனியரசை உருவாக்க வேண்டும் என்ற வரலாற்றுத் தீர்மானத்தை, 1976 ஆம் ஆண்டு எடுத்தது. எமது கட்சியின் அந்தத் தீர்மானத்தின் அடிப்டையிலும், எமக்கென ஓர் அகப்பலம் இருக்கவேண்டும் என்ற அரசியற் தேவை யின் அடிப்படையிலும் - வன்முறையை வன்முறை மூலமே எதிர் கொள்ளத் துணிந்த தமிழ் இளைஞர்கள், ஆயுத எதிர்ப்;பு இயக்கங் களாக எழுச்சி கொண்டெழுந்தனர். 

தனக்கு எதிரான வன்முறைதான் தமிழினத்தை வன்முறைப் பாதைக்கு இட்டுச்சென்றது என்பதே வரலாறு. அமைதியான போராட் டங்கள் எல்லாம் ஆயுத பலம் கொண்டு கொடூரமாக நசுக்கப்பட்ட போது, தாமும் பதிலுக்கு ஆயுத பலத்தையே நாடவேண்டும் என்ற சூழலுக்குள் தமிழ் இளைஞர்கள் தள்ளப்பட்டனர். 

வேறு வழிகள் எதுவும் இல்லை என்ற விரக்தி நிலைக்கு வந்த பின்னர், ஆயுத பலத்தை மட்டுமே தாமும் நம்பவும் வன்முறைப் போராட்ட வடிவத் தையே தாமும் கைக்கொள்ளவும் தமிழ் இளைஞர்கள் நிர்ப்பந் திக்கப்பட்டனர். 

வன்முறை வடிவ அரசியல் போராட்டத்தின் வரலாறு ஆரம்பித்த 1980களுக்குப் பின்னான 30 ஆண்டுகள், எமது இனத்தினது சரித்திர ஏட்டில் இன்னொரு ஆழப் பதிந்த அத்தியாயம். இரத்தமும், கண் ணீரும், வீரமும், பெருமிதங்களும், துன்பங்களும் அழிவுகளும் என நீண்டு சென்ற அந்த ஆயுதப் போர் அத்தியாயம் - உண்மையில் இரண்டு விடயங்களைச் சாதித்திருந்தது. 

ஒன்று, அகப் பலமாக எமது இனத்திற்கு உள்ளேயே உரு வெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரமாண்டமான வளர்ச்சி. அடுத்தது, எமது இனத்திற்குப் புறப் பலமாக இருக்கக் கூடிய ஏது நிலைகளோடு பரிணமித்த இந்தியத் தலையீடு. 

இந்தியாவின் தலையீடு என்பது ஒரு தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாக எமது போராட்டத்தில் இடம்பெற்றது. எமது விருப்புக்கள் என்னவாக இருந்தாலும், இந்தியாவின் தேசிய நலன்களுக்கு ஒத் திசைவாக அமையாத எந்த ஒர் அரசியல் தீர்வையும் இலங்கைத் தீவில் நாம் பெற்றுவிடுவதை இந்தியா வரவேற்காது என்பதுவே, இந்தியத் தலையீடு எமக்கு உணர்த்திய கட்டாயப் பாடமாக அமைந் தது. எனினும், இந்தியத் தலையீடு என்ற அம்சத்தையே சாதகமாகப் பயன்படுத்தி, இந்தியாவின் துணையுடனும் ஆசீர்வாதத்துடனும், எமது இனம் மதிப்புடன் வாழக்கூடிய ஒரு தீர்வினை ஒன்றுபட்ட இலங்கைக்குள் பெறக் கூடிய ஒரு வாய்ப்பினை நாம் பற்றி நின்றோம். 

எமது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால், காலம் இட்ட ஒரு கட்டாயக் கோலமாக இந்தியத் தலையீடு அமைந்தது. நுட்பமான இராஜதந்திர வளைவுகளை வரைந்து, சூட்சுமமான அரசியல் வர் ணங்களைக் கலந்து, அதனை ஓர் அழகான கோலமாக ஆக்குவதும், அல்லது, அதனைக் கலைத்துச் சிதைத்து அலங்கோலமாக ஆக்கி விடுவதும் எமது கைகளிலேயே இருந்தது. 

அந்த வகையிலேயே - பெரும் அகப்பலத்தை வைத்திருந்தும் கூட அடையக் கடினமான தழிழீழத் தனியரசு என்ற அசாத்தியமான ஒரு கொள்கைக்காகத் தொடர்ந்தும் உயிர்களைப் பலியிடுவதைத் தவிர்த்துவிட்டு, ஒரு புறப்பலமாக உருவெடுத்திருந்த இந்தியாவின் அநுசரணையுடன், அந்த வாய்ப்பினைக் கச்சிதமாகப் பயன்படுத்தி, ஒன்றுபட்ட இலங் கைக்குள், எமது அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்காத ஒரு தீர்வினைக் கண்டறியும் முயற்சிகளை எமது கட்சி ஆதரித்தது. 

மென்முறை வழிகளிலும் வன்முறை வழிகளிலும் கடந்த 60 ஆண்டுகளாக எமது இனம் நிகழ்த்திய நீண்ட விடுதலைப் போராட்டம் எமக்குப் பல பட்டறிவுகளைத் தந்திருக்கின்றது. ஓர் இனமாக எங் களைப் புடம்போட்டு எடுத்திருக்கின்றது. கற்றறிந்த பாடங்களுக்காக நாங்கள் காவு கொடுத்த விலை மிகப் பெரியதாக இருக்கலாம்@ இருந்தாலும், ஒரு சுபீட்சமான அரசியல் எதிர்காலத்தை வேண்டி நிற்கும் இனமான நாங்கள், அந்த இலட்சியம் நோக்கி எடுத்து வைக்க வேண்டிய அடுத்த அடிகளுக்கு, நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் அத்திபாரக் கற்கள் போன்றவை. 

தத்தமது தேச நலன் களை மட்டுமே மையப்படுத்தி உலக ஒழுங்கை வகுத்துச் செல்லும் உலகப் பெரும் சக்திகளின் சூட்சுமங்களைப் புரிந்து, அதற்கேற்ப மட்டுமே நாங்கள் இனி காய்களை நகர்த்திச் செல்ல வேண்டும் என்பதுதான் - கடந்த 60 ஆண்டு காலப் போராட்டம், குறிப்பாக, கடந்த 30 ஆண்டு கால வன்முறை வடிவிலான ஆயுதப் போராட்டம் எமக்குக் கற்பித்துச் சென்றிருக்கும் வரலாற்றுப் பாடம். 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியும் மறைவும் எமக்கு உணர்த்தி நிற்பது என்னவெனில் - எவ்வளவுதான் பலம் வாய்ந்ததாக இருந்தாலும், எவ்வளவுதான் தர்மத்தின் பாற்பட்டதாக இருந்தாலும், தமிழர்கள் இந்தத் தீவில் வன்முறை அரசியல் செய்வது நடைமுறைச் சாத்தியமானதாக என்றைக்குமே இருக்கப் போவதில்லை என்பதாகும் அத்தோடு, இராணுவ பலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, உலக ஓட்டத்திற்கு ஒத்திசைவு இல்லாத அரசியல் கோட்பாட்டின் ஊடாகக் கட்டி எழுப்பப்படும் எந்த ஒரு போராட்டமும் நின்று நிலைக் காது என்பதுமாகும். 

அந்த வகையில் தான் - அனைத்துலகப் பரிமாணங்களுடன் பிறந்திருக்கின்ற தற்போதைய புதிய சூழலில், அந்தச் சூழலுக்கு ஏற்ற வகையான நெகிழ்வுத் தன்மைகளுடன், சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடனும் பக்கபலத்துடனும் எமது உரிமைப் போராட்டத்தை நகர்த்திச் செல்லும் புதிய வழிமுறைகளை நாம் கையாளத் தொடங்கியுள்ளோம். 

இலங்கைத் தமிழரசுக் கட்சி அதன் தந்தையர்கள் கொண்டிருந்த அடிப்படைக் கொள்கையிலிருந்து விலகிச் செல்கின்றது என்றோ, அல்லது, தான் தலைமையேற்றிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப் பைத் தவறான தடத்தில் வழி நடாத்திச் செல்ல முனைகின்றது என்றோ எவரும் அர்த்தப்படுத்திவிடக் கூடாது. 

பேரம் பேசுவதற்கு அடிப்படையான அகப்பலம் எல்லாம் அழிந்தொழிந்து போன பின்னர், நிர்க்கதியாகி, இருள் சூழ்ந்த அரசியல் எதிர்காலத்தை எதிர்நோக்கி நிற்கும் எமது மக்களுக்கு, இன்று இருக்கும் ஒரே நம்பிக்கை ஒளி - அனைத்துலக சமூகம் எமது தேசிய போராட்டத்தின் மீது, நியா யத்தின் அடிப்படையில் கொண்டிருக்கின்ற ஈடுபாடுதான். அதுதான் எம்மோடு இப்போது சேர்ந்திருக்கின்ற புதிய புறப்பலம். 

முன்பொரு தடவை இந்தியாவுடன் எழுந்த கருத்து வேறுபாடு, இருபது வருடங் களாக அந்த நாட்டை எம்மிலிருந்து அகன்று நிற்கவைத்தது மட்டு மன்றி, எமக்கு எதிராகவும் செயற்பட வைத்தது என்ற வரலாற்றுப் பாடத்தை நாம் மறந்துவிடக் கூடாது. இன்னொரு தடவையும் நாம் அவ்வாறே செயற்பட்டு, அனைத்துலக சமூகத்தை எம்மிலிருந்து அந்நியப்படுத்திவிடக் கூடாது என்பதுதான் எமது அக்கறை. 

அனைத் துலகச் சமூகத்தைச் சங்கடப்படுத்தாத வகையில் அனுசரித்துப் போக நாம் செய்யும் சில மென்போக்கான விட்டுக்கொடுப்புகள் என்பவை, எமது இராஜதந்திரத்தின்; நுட்ப நகர்வுகளே அல்லாமல், எமது அடிப்படைக் கொள்கைகளைக் கைவிடுவதற்கான சமிக்ஞைகள் அல்ல. 

ஓற்றையாட்சி இலங்கை என்ற அமைப்பிற்கு வெளியே, ஐக்கிய இலங்கை என்ற அரசமைப்பிற்குள், தமிழர்கள் சுயமரியாதையுடனும், தன்னிறைவுடனும் வாழத் தேவையான ஆகக்கூடிய அரசியல் அதி காரங்களை உள்ளடக்கிய ஒர் ஆட்சியலகையே தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வாக நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 

இத்தகைய அதிகாரங்களைக் கொண்ட ஒர் ஆட்சியலகிலேயே - எமது இனத்திற்கு நீக்கமற உரித்தான - உள்ளகச் சுயநிர்ணய உரிமை பூர்த்தியடைய முடியும் என நாம் நம்புகின்றோம். இந்த ஆட்சியலகின் விட்டுக்கொடுக்க முடியாத அடிப்படையாக இருக்க வேண்டியது - இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பிராந்தி யங்களை உள்ளடக்கிய, தமிழ் பேசும் மக்களின் பிரிக்கப்படாத வரலாற்று வாழ்விடமாகும். 

இந்த ஆட்சியலகில் - நமது நிலத்தை நாமே ஆளுகை செய்து, நமது சமூகத்தை நாமே பாதுகாத்து, நமது பொருளாதாரத்தை நாமே வளப்படுத்தி, நமது பண்பாட்டை நாமே செழுமைப்படுத்தும் அதிகாரங்கள், எத்தகைய இடையூறு களுமற்று உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். 

இந்த ஆட்சியலகிற்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் முன்னெடுப்பானது - 1987ஆம் ஆண்டு, சிறீலங்காவின் அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13ஆவது திருத்தத்தினை விடவும் மேலே உள்ள ஒரு புள்ளியிலி ருந்து தொடங்கி, அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வைத் தருவதாகப் பரிணமிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனையே எமது கட்சியின் நிலைப்பாடும் ஆகும். 

இந்த நிலைப்பாட்டினை நாம் எடுத்ததற்கான காரணம் - 13ஆவது சட்டத் திருத்தத்தையே ஒரு நேர்த்தியான தீர்வாக நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்பதோ, அல்லது, மேற்குறிப்பிட்ட வகையிலான எமது உள்ளகச் சுய நிர்ணய உரிமை தொடர்ந்தும் மறுக்கப்படும் சூழலில், சர்வதேசச் சட்ட நியதிகளின் அடிப்படையில் எமக்கிருக்கும் புறவயச் சுயநிர்ணய உரிமையை நாம் பிரயோகிக்கமாட்டோம் என்பதோ அல்ல மாறாக, இதுவே, இன்றைய சூழலில் நடைமுறைச்சாத்தியமான ஒன்றாக இருப்பதனாலாகும். 

மேலும், எமக்கான அரசியல் அதிகாரங்கள், இந்தியாவினதும் அமெரிக்கா உள்ளிட்ட உலக சமூகத்தினதும் அனுசரணையுடனும் துணையுடனுமே பெறப்படவேண்டியுள்ள தற்போதைய சூழலில் - அவற்றைப் பெறுவதற்கு நாம் முன்வைக்கும் மேற்படி தீர்வுப் பொறி முறையானது, நியாயமான ஒன்று என அவர்களால் கருதப்படத் தக்கதாகவும் இருக்கும். 

மேலும், ஐக்கிய இலங்கைக்குள்ளான அரசியல் பொறிமுறை ஒன்றைத் தீர்வாகப் பெறக்கூடிய தன்மையே தற்போது நிலவுவதால், எம்மால் முன்வைக்கப்படும் மேற்கூறப்பட்ட தீர்வு யோசனை - இலங்கைத் தீவிற்குள் வாழும் எந்தத் தரப்பினராலும் எதிர்க்க முடியாத வகையில் நியாயப்பாடு உள்ளதாகவும் இருக்கும். 

குறிப்பாக - தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மைப் பிரச்சி னைக்கு நாம் காண முற்படும் எந்த ஒரு தீர்வும், தமிழர் தாயகத்தில் வாழும் முஸ்லீம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு கட்டமைப்பாக அமைய வேண்டும். அது அவர்களது சமூக - பொருளாதார - அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய பொறிமுறையைக் கொண்டிருக்க வேண்டும். 

ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பிற்குள், தமிழ் பேசும் மக்களாகிய எமக்கு, எமது அரசியல் - குடியியல் - பொருளாதார - சமூக - பண்பாட்டு அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய விதமான ஓர் ஆட்சியலகை ஏற்படுத்த இந்தத் தீவின் ஆட்சியாளர்கள் மனப்பூர்வமாக முன்வரவேண்டும். அந்தத் தீர்வானது, தமிழ் பேசும் மக்கள், தமது அபிலாசைகள் தொடர்பான தமது ஜனநாயகத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய சட்டத் தகுதி உடையதாக அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும். 

எனது பெருமதிப்பிற்குரிய பெருந்தகையோர்களே! இப்போது - நாங்கள் பொறுமை காக்கவேண்டும். தமிழர்களுக்கு இந்தத் தீவில் நியாயமான அரசியற் பிரச்சினைகள் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதையும், அந்தப் பிரச்சனைகள் புதுப்புது வடிவங்களில் பரிணமித்து வருகின்றன என்பதையும் உலகம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. 

போரின் கடைசிக் காலத்தில் மிகப் பாரிய மனித அழிவுகள் இங்கே நிகழ்த்தப்பட்டன என்பதையும் உலகம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. போரை நிகழ்த்துவதற்கு சிறீலங்கா அரசாங்கத்திற்கு இராணுவ ரீதியிலும் இராஜதந்திர ரீதியிலும் உறுதுணையாய் இருந்த இந்த சர்வதேச சமூகம், போர் நிகழ்ந்த போது சிறீலங்கா அரசாங்கத்தால் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அதன் மீது இப் போது இறுக்கமான அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது. 

அந்த வாக்குறுதிகள் என்பவை - போர் முடிவடைந்த பின்பு தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்பதாகும். இப்போது, போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற் றப்படாததால் விசனம் கொண்டுள்ள அனைத்துலக சமூகம் இராஜதந் திரக் களத்தில் இறங்கி அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்த நேரத்தில் நாம் பொறுமை காக்கவேண்டும். தமிழ் தேசிய இனப் பிரச்சினையில் உலக சமூகத்தினர் அதீத ஈடுபாடு கொண்டுள்ள இந்த நேரத்தில், அவர்களோடு நாம் சேர்ந்து இயங்க வேண்டும். அவர்களது ஆலோசனைகளை நாம் பெற்றும், அவர்களுக்கு எமது ஆலோசனைகளை வழங்கியும் ஒத்திசைவாக இயங்க வேண்டும். 

இந்த வேளையில் - அவர்களைச் சர்ச்சைகளுக் குள் சிக்க வைக்கும் விதமாகவோ, அல்லது சங்கடத்திற்கு உள்ளாக் கும் விதமாகவோ நாம் செயற்படுவோமேயானால், அது எமது இனத்தைத்தான் பாதிக்கும். இப்போது எமது மூலோபாயம் என்ன வெனில் - இவ்வளவு வருடங்களும், தமிழ் தேசிய இனப்பிரச்சி னையை, ஒரு பயங்கரவாதப் பிரச்சினை| என விவரித்து வந்த சிறீலங்கா அரசாங்கத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவது ஆகும். 

அதாவது, தமிழருக்கு உரிமைகள் வழங்குவதை இழுத் தடித்த சிறீலங்கா அரசாங்கத்தின் உண்மையான பிரச்சினை - தமிழர்களுக்கு உரிமைகள் வழங்குவதற்கு அது இதயசுத்தியுடன் இல்லை என்பதை, உலக சமூகத்தின் முன் நாம் தெளிவாக நிரூபிக்க வேண்டும்@ இன்னொரு வகையில் சொல்லுவதானால், ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்புக்குள் எமக்கான உரிமைகளைப் பெறுவது சாத்தியமற்றது என்பதை நாம் உலக சமூகத்திற்கு நிரூபிக்க வேண்டும். 

இன்னொரு வகையில் சொல்லுவதானால் - தாம் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி பெறமுடியாது என்பதை இந்த அனைத்துலக சமூகம் தானாகவே உணரும்வரை நாம் பொறுமை காக்க வேண்டும். இன்னும் அழுத்தமாகச் சொல்லுவதானால், ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பிற்குள் தமிழர்களுக்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க பேரினவாத ஆட்சியாளர்கள் ஒருபோதும் முன்வர மாட்டார்கள் என்பதை நாங்களே சொல்லாமல், அனைத்துலக சமூகம் அதுவாகவே தன் அனுபவங்கள் வாயிலாக உணர இடமளிக்க வேண்டும். 

அதுவரை, நாம் பொறுமை காக்கவேண்டும். இந்தப் பூலோகம் நீதியின் அச்சாணியில் சுழல்வதில்லை. அடக்கப்பட்ட தேசிய இனங்;களின் விடுதலைப் போராட்டங்கள் எல்லாம் நியாயத் தராசில் வைத்து நிறுக்கப்படுவதுமில்லை@ ஜனநாயகத்தைப் பற்றியும், மனித உரிமைகளைப் பற்றியும் பறைசாற்றுகின்ற உலகப் பெரும் சக்திகள் எல்லோரும் நீதி தேவர்களும் அல்லர். 

அனைத்துலக வல்லரசுகளும் அவற்றைச் சார்ந்து இயங்கும் சக்திமிக்க உலக நிறுவனங்களும் - ஏதோ தமது நலன்களை எல்லாம் பண யம் வைத்துவிட்டு எமக்காக இரங்கி வந்து, எமது உரிமைகளைப் பெற்றுத் தரப் போகின்றன என்றும் நாங்கள் நம்பவில்லை. இருந்த போதும் - அண்மைக் காலங்களில் மோசமான மனித உரிமை மீறல்களை அனைத்துலக சமூகம் வெறுமனே கைகட்டி மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கவில்லை என்பதும், நாங்கள் யதார்த்தத் தில் தொடர்ந்து அவதானித்துவரும் உண்மைதான். 

அதனால், தமது தேசிய நலன்களை அடிப்படையாக வைத்து அவர்கள் நிகழ்த்தும் சதுரங்க ஆட்டத்தின் ஏதோ ஒரு பகுதியாக, அவர்களது மனிதா பிமான உள்ளுணர்விற்கும் தேச நலன் சார்ந்த முனைப்பிற்கும் இடையிலிருக்கும் ஒரு புள்ளியில், எமது நலன்களும் பாது காக்கப்படலாம். அதற்கு உகந்த சூழலை நாம்தான் பேண வேண்டும். கனிந்துவரும் சூழலைக் குழப்பாமல், அனைத்துலக சமூகத்தை அசௌகரியப் படுத்தாமல், நிலைமையை நாங்கள் பக்குவமாகக் கையாள வேண்டும். 

அதற்காக - நாம் பொறுமை காக்க வேண்டும். எண்பதுகளின் நடுப் பகுதியில் இந்தியத் தலையீடு நிகழ்ந்த போது இருந்த உலகச் செல்நெறி இப்போது மாறிவிட்டது. இப்போது - ஆடுகளம் பழையதானாலும், அதைச் சூழ நிகழ்ந்துவிட்ட மாற்றங் கள் புதியவை. ஆட்டம் பழையதானாலும், அதன் தந்திரோபாயங்கள் புதியவை@ இலக்குகள் பழையவைதான் என்றாலும், அவற்றை அடைவதற்கான மூலோபாயங்கள் புதியவை ஆட்டக்காரர்கள் பழைய வர்கள் தான் எனினும், அவர்கள் சேர்ந்திருக்கும் அணிகள் புதியவை. 

தமிழர்களுக்கும் அப்படித்தான் - இலட்சியம் பழையதே ஆனாலும், இனி நாங்கள்; கைக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் முற்றிலும் புதியவை. முன்பொரு காலம், அமெரிக்கா, இந்தியாவிற்கு எதிரான பக்கத்தில் இருந்தது. ஆனால், இன்று எமக்குச் சாதகமாகக் கனிந்து வந்துள்ள சூழலில் இந்தியாவும் அமெரிக்காவும் ஏறக்குறைய ஒரே பக்கத்தில் இருக்கின்றன. ஆனால், சிறீலங்கா அரசாங்கமோ, இவர் களுக்கு மாறான பக்கத்தில் இருப்பவர்களுடன் நட்புறவைத் தொடர்ந்தும் வளர்த்துச் செல்கின்றது. 

சிறீலங்கா அரசாங்கத்தை வளைத்து வியூகமிட்டு, ஐ. நா. மனித உரிமைகள் மன்றத்தில் அண்மையில் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணையை ஆதரித்து இந்தியா வாக் களித்தமை, எமக்குச் சாதகமாக அரங்கேறிய ஓர் அற்புதமான உலக நிகழ்வு. அதனை, எதிர்கால அரங்கேற்றங்களுக்கான ஓர் எதிர்வுகூரல் என்றே கருத வேண்டும். 

எனது பெருமதிப்பிற்குரியோர்களே! ஆளணிகள், அம்பு வில்லுகளுடன் சாதிக்க முடியாது போன ஒப்பற்ற உயரிய காரியங்களைக் கூட - உயிரழிவு ஏதுமின்றிச் சாதிக்கும் மகத்தான வாய்ப்பை இந்தப் புதிய ஆட்ட ஒழுங்கு எமக்குப் பெற்றுத் தரலாம். அதனால் தான் - நாம் பொறுமை காக்கவேண்டும். 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பாகிய எமக்கு இருக்கின்ற பலம் என்பது, நாம் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதுதான். தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, நேர்மையான முறையில், சட்ட பூர்வமாக நிகழ்ந்த தேர்தல்களின் மூலம் எமது மக்கள் எம்மைத் தேர்ந்து எடுத்தனர். 

நாங்கள் மக்களின் மலையான ஆதரவைப் பெற்ற மாபெரும் அரசியல் அமைப்பு. அதனால்தான், எமது அரசியற் செயற்பாடுகளை மதித்து, அனைத்துலக சமூகமும் எமக்குரிய அங்கீகாரத்தைத் தருகின்றது. ஆனால், நாம் கடும்போக்குவாதிகள் என்றோ, நெகிழ்வுத் தன்மை அற்றவர்கள் என்றோ, மீண்டும் வன் முறைக்குத் தூபமிடும் விதமான மறைமுக எண்ணங்களைக் கொண்டவர்கள் என்றோ உலகம் கருதுமிடத்து நாமும் இன்றைய இராஜதந்திர முன்னெடுப்புக்களில் இருந்து ஓரங்கட்டப்படலாம். 

அதனால், நாங்கள் எமது சொற்களிலும் செயல்களிலும் மிகுந்த நுட் பத்தைப் பேண வேண்டும். மிகுந்த அவதானத்துடன் காய்களை நகர்த்த வேண்டும். ஆதலால் - நாம் பொறுமை காக்கவேண்டும். முப்பது ஆண்டு கால மிக நீண்ட போர் எமது சமூகத்தின் வாழ்வாதார அபிவிருத்தியை முற்றாக முடக்கிவிட்டது என்பது உண்மைதான்@ அவ்வாறு முடக்கியது மட்டுமின்றி, எமது சமூகத்தின் பொருளாதாரத்தை பல தசாப்தங்களுக்குப் பின்தள்ளிவிட்டது என்பதும் உண்மைதான் அவ்வாறு பின்தள்ளியது மட்டுமன்றி, தாட் சண்யமின்றி நிகழ்த்தப்பட்ட போரின் நேரடியான தாக்கம், எமது சமூகத்தை, அன்றாட வாழ்வுக்கே அல்லற்படும்படியான அதல பாதாளத்தில் வீழ்த்திவிட்டது என்பதும் உண்மை தான். 

எங்களை, எமது சமூகத்தை, ஒட்டுமொத்தமான எமது இனத் தையே - இந்த அதல பாதாளத்திலிருந்து மீட்டு எடுத்து, உலகத் தரம் வாய்ந்த ஒரு வாழ்வின் சிகரத்திற்கு இட்டுச்செல்ல வேண்டிய பெரும் கடமை, எங்கள் எல்லோரிடமும் உள்ளது என்பதுவும் உண்மைதான். ஆனால், அதற்காக அன்பர்களே, சிறீலங்கா அர சாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி என்ற மாயப் பொறிக்குள் நாங்கள் சிக்கிவிடலாகாது. 

ஏனெனில், அது ஒட்டுமொத்தமான எமது இனத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் ஒரு சூழ்ச்சிப் பொறி ஒரு மரணப் பொறி. எமது மக்களின் புனர்வாழ்வுப் பணிகளில் எமது ஈடுபாட்டை சிறீலங்கா அரசாங்கம் விரும்பவில்லை@ எமது மக்களின் மீள் கட்டுமானத் திட்டங்களில் பங்கேற்க நாம் முன்வைத்த யோசனை களை சிறீலங்கா அரசாங்கம் பரிசீலிக்கவில்லை@ எந்த மக்களின் பிரதிநிதிகளாக நாம் உள்ளோமோ, அந்த மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்களில் எமது பங்களிப்பையும் வழங்குவதற்கு எமக்கு இருக்கும் உரிமையை, சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்தது. 

ஏனெனில் - தமிழர் தாயகத்தின் குடிப்பரம்பல் கட்ட மைப்பை மாற்றியமைத்து, தமிழினத்தினது தேசிய இயல்பின் அடிப் படையையே தகர்த்துவிடும் சதி நோக்கத்தையே, அபிவிருத்தி என்ற போர்வையில் இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்த முனை கின்றது. எனவேதான், அவல வாழ்விலிருந்து எமது மக்களை மீட்டு எடுத்துவிட வேண்டும் என்ற அவாவிலும் அவசரத்திலும் - இந்த மாயப் பொறிக்குள் வீழ்ந்துவிடாமல் நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும். நிதானமாக நகர வேண்டும். 

ஆனால் - எமக்கான கடமைகளை நாம் செய்வதற்கு ஏற்ற சூழல் கனிந்து வருகின்றது. அனைத்துலக சமூகத்தின் ஈடுபாடு, சிறீலங்கா அரசாங்கம் மீது கொண்டுவரும் அழுத்தம், எமது மக் களுக்கான பணிகளில் எம்மையும் கலந்திணைக்கும் நிர்ப்பந்தத்தை சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்படுத்தும். தவிர்க்க முடியாத கட்டா யமாக, எமது மக்களின் பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் எமது ஒத்துழைப்பைத் தேடி வரும் சூழல் சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்படும். 

ஆனால் - அதுவரை, நாம் பொறுமை காக்கவேண்டும். இருந்தாலும், எமது பொறுமை கால வரையறை அற்றதாக நீண்டு செல்லப் போவதில்லை@ எமது பொறுமைக்கும் எல்லைகள் உண்டு. பொறுமையின் அந்த எல்லையை நாம் தொட்டதன் பின்னரான, அடுத்த கட்டத் திட்டங்களை நாம் கொண்டுள்ளோம். 

இலங்கைத் தீவில் வாழும் எமது மக்களை ஒருங்கு திரட்டி, இந்த நாட்டிலுள்ள முற்போக்குச் சக்திகளின் ஒத்துழைப்புடனும், சர்வதேச சமூகத்தின் முழு ஆதரவுடனும் திடமான ஒரு சாத்வீகப் போராட் டத்தை முன்னெடுக்கவும் நாம் தயங்க மாட்டோம். காலம் குறித்து, நேர வரையறைகள் நிர்ணயித்து, நாம் அந்தத் திட்டத்தைச் செயலாக்கத் தொடங்குவோம். 

ஆனால், அந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு முன்னதாக - ஓர் அரசியற் தீர்வைப் பெறுவதில் நாம் உளப்பூர்வமாகச் செயற்பட்ட வண்ணம், எமது இனச் சிக்கலோடு தொடர்புபட்ட எல்லாச் சக்திகளுக் கும், எமது பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுத்தருவ தற்கு, நாம் போதிய அவகாசம் வழங்கவேண்டும். 

எனவே, அதற்கு இட மளிக்கும் வகையிலும் நாம் பொறுமை காக்கவேண்டும். பொறுமை காப்பது கூட - மிகச் சக்தி மிக்க ஓர் இராஜதந்திரச் செயற்பாடுதான். எனது அன்புக்குரிய பேராளர்களே, தமிழ் மக்களின் சட்டபூர்வப் பிரதிநிதிகளான நாம் எல்லோரும் கூடியிருக்கின்ற இந்த அவையிலிருந்து, எம் எல்லோரது சார்பிலும், சிங்கள மக்களுக்கும், இராஜபக்ச அரசாங்கத்திற்கும், அனைத்துலக சமூகத்திற்குமான எமது நிலைப்பாட்டு விளக்கத்தை நான் தெளிவாக அளிக்க விரும்புகின்றேன். 

மாண்புமிகு சிங்கள மக்களே! உரிய அரசியல் அதிகாரங்களைப் பெற்று, தமது அரசியல், குடியியல், பொருளாதார, சமூக, கலாசார விடயங்களைத் தாமே நிர்வகிக்கும் ஆட்சியுரிமையை ஈட்ட வேண்டும் என்ற எமது இனத்தின் அரசியல் விருப்பு நியாயமானது. அது, தர்மத்தின் பாற்பட்டது@ வர லாற்றின் வேரில் இருந்து எழுந்தது@ அது எமது மக்கள் சமூகத்தின் ஒர் அடிப்படையான மனித உரிமையும் கூட. 

எமது அரசியல் விருப்பை அடைவதற்காக நாம் முன்வைக்கும் தீர்வானது - வேறு எந்த ஒர் இனத்தினதும் இறையாண்மையைக் கேள்விக்கு உட்படுத் தாதது@ இந்த நாட்டின் ஐக்கியத்தைப் பிரிக்கும் கபட நோக்கங்கள் எதுவும் இல்லாதது@ வேறு எந்த ஒரு நாட்டினதும் தேசிய நலன் களைப் பாதிக்கும் எண்ணங்கள் அற்றது. இந்த நாட்டிற்குள், உங்களது பூர்வீக நிலங்களில், உங்களுக்கான அதிகாரங்களைப் பிரயோ கித்து நீங்கள் வாழ்வது போலவே, தமிழ் பேசும் மக்களும், தமது பூர்வீக நிலங்களில், தமக்கான அதிகாரங்களைப் பிரயோகித்து வாழும் உரிமையை உறுதிப்படுத்த முனைகின்றார்கள் என்ற அடிப்படை விடயத்தை நீங்கள் தயவு செய்து விளங்கிக்கொள்ள வேண்டும். 

எனவே, தனிப்பட்ட அரசியல் உள்நோக்கங்களுக்காக, இன முரண்பாட்டை முனைப்புறச் செய்து, இனத் துவேசத்தைத் தூண்டும் விதமாக முன்வைக்கப்படும் கொள்கைகளைப் புறக்கணித்து - தமிழினத்தின் நியாமான அரசியல் அபிலாசைகளைப் புரிந்து, அங் கீகரித்து, அவர்களையும் சகோதரர்களாக அரவணைத்து - ஐக்கிய இலங்கைக்குள் நல்லிணக்கத்துடன் வாழ நீங்கள் முன்வரவேண்டும். ஆனால், இன்றைய சிறீலங்கா அரசாங்கமோ, தமிழர் பிரச்சி னைக்கு உருப்படியான தீர்வு காணும் அரசியல் விருப்புறுதி எதனை யும் கொண்டிருக்கவில்லை. 

மாறாக - தீர்வு காண்பதை நோக்கி எடுக்கப்படும் முயற்சிகளைத் தாமதப்படுத்தி, தவிர்த்து, ஒரேயடியாகக் கைவிடும் கபட யுக்தியினையே அது செயற்படுத்துகின்றது. இராஜ பக்ச அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்துமே - நேர்மையற்று, விவேகமற்று, முதிர்ச்சியற்று இருப்பதுடன், வெறுமனே இனவாத நிலைப்பாட்டினை முதன்மைப்படுத்துபவையாகவே இருக்கின்றன. இந்த அரசாங்கம் தனது இந்தக் கபட நிலைப்பாட்டை விடாப்பிடி யாகத் தொடர்ந்தும் கைக்கொண்டிருக்குமானால், அது, இந்த நாட்டை, முன்னெப்போதும் இல்லாதவிதமான ஒரு பின்னடைவை நோக்கி, மிகத் தெளிவாக இட்டுச்செல்கின்றது என்றே அர்த்தமாகும். 

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கிடைத்திருக்கும் இந்த இறுதி வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்தி, இதயசுத்தமாக எம்மோடு கைகோர்க்க இந்த நாட்டின் அரசாங்கம் தவறுமிடத்து, இந்த நாடு ஒரு வரலாற்றுப் பின்னடைவைச் சந்திக்கப் போவது உறுதி என்பதை இங்கே நான் தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றேன். 

ஒருமித்த இலங்கை என்ற அரசமைப்பிற்குள், ஒரு தீர்வு வேண்டும் என்பதுவே எமது தெளிவான கோரிக்கை அத்தகைய தீர்வு ஒன்றைக் காண்பதிலேயே நாங்களும் உறுதிபூண்டுள்ளோம். அந்தத் தீர்வானது - நியாயமானதான, எம்மால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதான, நடை முறைச் சாத்தியமானதான, நின்று நிலைக்கக் கூடியதான பொறி முறைகளுடன் உருவாக்கப்பட வேண்டும். அத்தகைய ஒரு தீர்வை உருவாக்குவதற்கு, அத்தகைய ஒரு தீர்வை உருவாக்குவதில் உறுதிப்பாடு உள்ள எவருடன் இணைந்து பக்குவமாகப் பணியாற் றவும், ஒத்துழைப்பை வழங்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம். 

சிறீலங்கா அரசாங்கத்திற்கு நாம் வழங்க வேண்டிய செய்திகளை யும், தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகாளான எம் எல்லோரது சார்பிலும் இந்த அரங்கத்தில் முன்வைப்பது பொருத்தமானது என நான் கருதுகின்றேன்: 

சிறீலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில், போர் நடத்தப்பட்ட விதம் தொடர்பாகப் பொறுப்புக் கூறும் விவகாரம் வலியுறுத்தப்படவில்லை என்ற ஆழமான அதிருப்தி எமக்கு இருந்தா லும், அதிலிருக்கும் வேறு சில பரிந்துரைகள் உருப்படியானவை என்றே நாம் கருதுகின்றோம். 

அவை - உண்மையான நல்லிணக் கமும் புரிந்துணர்வும் அமைதியும் ஏற்படுவதற்கு வழிகாட்டுபவையாக உள்ளன. குறிப்பாக - மக்களின் வாழிடங்களில் படை மயமாக்கம் குறைக்கப்பட வேண்டும், மக்களிடம் அவர்களது காணி நிலங்கள் மீள வழங்கப்பட வேண்டும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும், தடுப்புக் காவலில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக - இயன்றளவு உச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஒரு அரசியல் தீர்வு விரைந்து காணப்பட வேண்டும் என்பன போன்ற - இன நல்லிணக்கத்திற்கு அடிப்படையான பல பரிந்துரைகளை அந்த ஆணைக்குழு செய்துள்ளது. 

தன்னாலேயே நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என நாம் அதனிடம் கேட்டுக்கொள்ளுகின்றோம். வெறுமனே வாக்குறுதி களை மட்டுமே வழங்கியபடி இருக்காமல், விரைவாகவும் வெளிப் படையாகவும் இந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். 

முப்பதாண்டு கால நீண்ட போரானது, பல இலட்சக்கணக்கான மக்களைத் தமது ப+ர்வீக வாழ்விடங்களிலிருந்து வேரோடு பிடுங்கி வெளியேற்றிவிட்டது. அவர்களில், இந்த நாட்டை விட்டே வெளியேறிச் சென்றுவிட்டவர்கள் ஒருபக்கம் இருக்க, பல்லாயிரக் கணக்கானோர், போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட போதும், நாட்டிற்கு உள்ளேயே இடம்பெயர்ந்த நிலையில் இன்னமும் அகதிகளாகவே அந்தரிக்கின்றனர். இந்த மக்களை அவர்களது சொந்த வாழ்விடங் களில் மீளக் குடியேற்றத் தேவையான அனைத்து நடவடிக்கை களையும் அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும். 

குறிப்பாக - யாழ்ப்பாணத்தின் வலிகாமம் மற்றும் திருகோணமலையின் சம்பூர் பிரதேச மக்களை மீளக் குடியேற்றும் விவகாரத்தில் அரசாங்கம் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும். தமது சொந்த வாழ்விடங் களிலேயே வாழவேண்டும் என்ற எமது மக்களின் அடிப்படை மனித உரிமையை மதித்து, ஏற்றுக்கொண்டு, தனக்குரிய பொறுப்புடன் சிறீலங்கா அரசாங்கம் செயலாற்ற வேண்டும். அனைத்துலக சமூகமும் இந்த விவகாரத்தில் மேலும் கவனம் செலுத்தி, இந்த அரசாங்கம் தனது கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற வழிவகை செய்யவேண்டும். சிறீலங்காவின் சிறைகளில், மிக நீண்ட காலமாக, தமிழ் இளைஞர்கள் பலர் எதிர்காலம் பற்றிய எவ்வித நம்பிக்கையுமற்று வாடுகின்றார்கள். 

போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் இன்னமும் விடுவிக்கப்படாமல் தடுக்கப்பட்டிருப்பவர்கள் ஒருபுறம் இருக்க, போரின் பின்னாலும்; கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தள்ளப்பட்டுள்ளோர் பெருமளவானோர். அரசாங்கப் படைகளினால் கைது செய்யப்பட்ட வர்கள் ஒருபுறம் இருக்க, படையினரிடம் தாமாகவே சென்று சரண டைந்தவர்களும் இவர்களுள் ஏராளமானோர். சட்டத்திற்கு உட்பட்டுக் குற்றம் சாட்டப்பட்டும், நீதிமன்ற நடைமுறைகள் ஊடாக எவ்வித தீர்வையும் பெறமுடியாமல் காலவரையறையற்று அடைக்கப்பட்டிருப்பவர்கள் ஒருபுறம் இருக்க, கைதுசெய்யப்பட்ட மற்றும் சரண டைந்த பின்பு, தெளிவான தகவல்கள் எதுவுமின்றி மறைக்கப்பட்டு விட்டவர்களும் பெருந்தெகையானோர். 

இவர்கள் எல்லோரும் தொடர் பாக அவர்களது பெற்றோரும் குடும்பத்தினரும் உறவினர்களும் மட்டுமன்றி - ஒட்டுமொத்தமான தமிழினமே படும் வேதனைகள், பழைய காயங்களுக்குப் புதிய வலிகளைக் கொடுக்குமே அல்லாமல், அவற்றை ஆற்றுவதற்கு மருந்திடா. இந்த விவகாரத்தை நாம் பல தடவைகள் அரசாங்கத்திடம் எடுத்துச் சென்றும், உருப்படியான எந்தக் காரியமும் நடக்கவில்லை இவை தொடர்பாக எமக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவுமில்லை. 

இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் துரிதமாகச் செயற்பட வேண்டும். கைது செய்யப்பட்ட எல்லோரைப் பற்றிய உண்மை நிலையையும் அவர்களது உறவினர்களுக்கு அறியத்தந்து, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவித்து - இந்த விடயத்திற்கு ஒரு உறுதியான முடிவு காண வேண்டியது, உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு அத்தியாவசியமான ஒன்று என்பதை இந்த அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டும். 

எனவே, இந்த விடயத்தில் உடனடி அக்கறை காட்டி, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி கள் அனைவரையும் உடன் விடுவிக்க அரசு ஆவன செய்யவேண் டும் என சிறீலங்கா அரசாங்கத்திடம் நாம் விநயமாக வேண்டிக் கொள்ளுகின்றோம். அனைத்துலக சமூகம் ஆழமாக உணர்ந்து கொள்;ள வேண்டிய விடயங்களையும் நான் இங்கே வெளிப்படையாக வற்புறுத்த விரும்புகின்றேன்: 

கடந்த முப்பது ஆண்டுகாலப் போரில் ஏற்கெனவே கொல்லப் பட்டுவிட்ட மக்களுடன் சேர்த்து, 2009 இல் இறுதிப் போர் நிகழ்ந்த போது மட்டும், பலபத்தாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள், போர் நடத்தப்பட்ட விதத்தின் நிமித்தம் கொல்லப்பட்டுவிட்டார்கள். அந்தப் போர் நடத்தப்பட்ட விதத்திலும், அந்தப் போரில் நடந்த ஏனைய நிகழ்வுகளிலும் - சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களும் மீறப்பட்டுள்ளனவாகவே கருதப்படுகின்றது. 

இவை தொடர்பாக - சுயமான, சுதந்திரமான, நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு, அந்த போர் நடத்தப்பட்ட விதம் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிக்கொணரப்பட வேண்டும் என்ற கருத்தும் இப்போது அனைத்துலக மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நிய மிக்கப்பட்ட நிபுணர் குழுவாலும் இத்தகைய ஒரு விசாரணை பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு - அண்மையில் ஐ. நா. மனித உரிமை பேரவையில் சிறீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்த விவகாரம் தொடர்பாகப் பொறுப்புக் கூறும் கடமைப்பாடும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடந்து முடிந்த போரில் நிகழ்ந்த இந்த மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல் கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதுவும், அவை சர்வதேச மனித உரிமை, மனிதாபிமானச் சட்ட நியமங்களுக்கு அமைவாக நடத்தப்பட வேண்டும் என்பதுவுமே எமது நிலைப்பாடுமாகும். 

ஏனெனில் - சுதந்திரமான, நியாயமான, உண்மைகள் வெளிக்கொணரக்; கூடிய, எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக்கொள் ளத்தக்க ஒரு வெளிப்படையான விசாரணையும், நடந்த நிகழ்வு களுக்கான உரிய பொறுப்புக் கூறலும் - நீதியை நிலைநாட்டுவதற்கு மட்டுமன்றி, இந்த நாட்டில் அமைதியும், புரிந்துணர்வும், நல்லி ணக்கமும் ஏற்படுவதற்கும் அத்தியாவசியமானவை என்றே நாமும் கருதுகின்றோம். 

இந்தத் தீவில் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்த இதுதான் இறுதி வாய்ப்பு. இந்தத் தீவில் அமைதி நிலவுவதே தமது தேச நலன்களுக்கும், சர்வதேச நலன்களுக்கும் உகந்தது எனக் கருது கின்ற நாடுகள், இந்த இறுதி வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துப் பயன்படுத்திவிட வேண்டும். நியாயமான அரசியற் கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழினம் அன்று முன்னெடுத்த மென்முறைப் போராட் டங்கள் எல்லாம், வன்முறை மூலம் அடக்கப்பட்ட நிகழ்வுகள் வர லாற்றுப் பாடங்கள். 1956, 58, 61, 77, 81, 83 என நீண்ட - தமிழி னத்திற்கு எதிரான இந்த வன்முறை மூல அடக்குமுறை வரலாறே, பெரும் யுத்தத்திற்கும் வழிகோலி, பின்னர் 2009 வரையும் தொடர்ந்தது. 

இப்போது, மீண்டும், நாங்கள், எமது அரசியல் உரிமைகளைக் கோரி அமைதிப் போராட்டங்களைத் தொடங்குகின்ற வேளையில், முன்னரைப் போலவே, இப்போதும், மீண்டும் - எம் மீது ஆயுத வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதற்கான பாதகச் சூழல் இருப் பாகத் தமிழ் மக்கள் அஞ்சுகின்றார்கள். 

அதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. அவ்வாறு மீளவும் எம் மீது ஆயுத வன்முறை பிரயோகிக்கப்படுமானால், அது, மீண்டும் இந்தத் தீவை ஒரு மிகப் பாரதூரமான சூழலுக்குள்ளேயே இட்டுச் செல்லும் என்பதுடன், அது தமிழினத்திற்குப் பெரும் அழிவையே ஏற்படுத்தும். எனவே, அவ்வாறு மீண்டும் தமிழினத்தின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதைத் தடுக்கும் பொறுப்பும் கடமையும் அனைத்துலக சமூகத்திடமே உள்ளது. 

நீண்ட ஆயுதப் போராட்டமும் அது நடத்தப்பட்ட விதமும் - எமது மக்களுக்கு இழப்பையும், அழிவையும், களைப்பையும், சலிப் பையும் ஏற்படுத்தியிருக்கலாம்@ ஆனால், போர் முடிந்ததன் பின்னான நிகழ்வுகள் எமது மக்களுக்கு விரக்தியையும், சினத்தையும், சீற்றத்தையுமே கொடுத்தபடி உள்ளன என்பதை இந்த உலகம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். 

வெளிப்படையாகவே இராணுவ மயப்பட்ட சூழல் தொடர்ச்சியாக இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு உட்பட்ட வாழ்வு பொது நிர்வாகச் செயற்பாடுகளில் பாதுகாப்பு தரப்பின் இறுக்கமான தலையீடு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில் இன்னமும் காட்டப்படும் பாரபட்சம் தமிழ் பெண்களினதும் இளைஞர்களினதும் சமூக - பொருளாதார - பண்பாட்டு வாழ்வின் மீது நுட்பமாக உட்செலுத்தப்படும் சீர்கேடுகள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செய்யப்படும் சிங்களமயமாக்கல் மீள்கட்டுமான மற்றும் பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களிலிருந்து தமிழர்களின் பிரதிநிதிகள் திட்டமிட்டு ஓரங்கட்டப்படல், 

கணிப்பிட்டுக் கச்சிதமாக மாற்றப் பட்டுவரும் தமிழர் தாயகத்தின் குடிப்பரம்பல் தமிழரின் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து தமிழ் பேசும் மக்களின் இன, மத, பண்பாட்டு, வரலாற்றுச் சின்னங்கள் அகற்றப்பட்டு, தமிழர்களின் அடையாளத்தை இல்லாமற் செய்யும் நோக்குடன் பௌத்த ஆலயங்களும் மதச் சின்னங்களும் எழுப்பப்படுதல் - என, 

இவை எவையுமே, நல்லி ணக்கத்திற்கான அறிகுறிகள் அல்ல இவை எவையுமே, தமிழர்களும் சக மக்களாகக் கருதப்படுவதற்கான சமிக்ஞைகள் அல்ல இவை எவையுமே, தமிழர்களுக்கு நம்பிக்கையையும் அமைதியையும் தரு வன அல்ல. இவை எல்லாமே, தமிழினத்தை மீண்டும் ஒரு தடைவை முன்னெப்போதையும் விடவும் பெருத்த ஆபத்திற்குள் இட்டுச் செல்வதற்கு இடப்படும் அடிக்கற்கள்தான். 

மானிடவியலின் மகத்துவங்களைப் போதித்து, மனித குல வளர்ச்சியின் மாண்புகளைப் பரப்பும் அனைத்துலக சமூகம் - இங்கே, இந்தத் தீவில், பல பத்தாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஒரு தேசிய இனம் இருப்பழிந்து போய்விடும் விளிம்பில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். தமக்கெனத் தனித்துவமான மானிட மரபுகளைக் கொண்டு வாழும் மகிமை பொருந்திய மக்கள்; சமூகத்தின் எதிர்காலம் அபாயத்தின் வாசலில் உள்ளது என்பதை உலக சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுகூடிச் செயலாற்றியாக வேண்டும். அதற்கு, இதுதான் கடைசிச் சந்தர்ப்பம். இந்த நிலை மையை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். 

மதிப்பிற்குரிய பேராளர்களே, இலங்கைத் தமிழரசுக் கட்சியை, இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு மாபெரும் தலைமைச் சக்தியாக நாம் கட்டியெழுப்ப வேண்டும். மிகவும் அடிமட்டத்தில், கிராம நிலைகளில் இருந்து எழுப்பப்படும் இந்தக் கட்டமைப்பு ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுக்க வேண்டும். மக்களுக்கு உள்ளிருந்து, மக்களால், மக்களுக்காகக் கட்டியெழுப்பப்படும் இந்த மக்கள் இயக்கம் ஒர் அரசியற் சக்தியாக மட்டுமன்றி, மக்களது சமூக - பண்பாட்டு - பொருளாதார வாழ்வின் அனைத்து அங்கங்களிலும் நற்தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். 

அதனால், ஒரு பல்-பரிமாண வளர்ச்சி நோக்கிய அடுத்த கட்டத்திற்கு எமது கட்சியை நகர்த்திச் செல்வதற்கான, தூர நோக்கத்தின் அடிப்படையிலான, சீரிய வேலைத்திட்டங்களை நாம் வரைய வேண்டும். நீண்ட போரின் காரணமாகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதும், எதிர்கால வளர்ச்சியின் தூண்களாக இருக்கப் போவதுமான, எமது சமூகத்தின் இரு முதன்மைக் கூறுகளான பெண்களையும் இளைஞர்களையும் இலக்கு வைத்து எமது வேலைத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். 

30 ஆண்டுகளாக நீண்ட பெரும் போர்ச் சூழல், எமது கட்சியைச் சீரிய முறையில் கட்டமைத் துக் கட்டியெழுப்பும் ஏதுநிலைகளை எமக்குத் தந்திருக்கவில்லை. அதனால், இப்போது பிறந்திருக்கின்ற இந்தப் புதிய சூழலை - தாயக மக்களின் பேராதரவும், அனைத்துலக சமூகத்தின் அங்கீகார மும் கிடைத்திருக்கின்ற இந்தப் புதிய சூழலை - மக்களுக்குச் சேவையாற்ற எமக்குக் கிடைத்திருக்கும் ஒரு மகத்தான வாய்ப்பாகக் கருதி, அதனை நாம் செவ்வனே பயன்படுத்த வேண்டும். 

பெண்களே ஒரு சமூகத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். ஒரு மக்கள் சமூகம் நிமிர்ந்து நேராக எழுவதும், கூனிக் குறுகிச் சிதைந்து போவதும், அந்தச் சமூகத்தின் பெண் இனம் எப்படி வாழ்கின்றது என்பதைப் பொறுத்தது. அதிலும் குறிப்பாக, ஈழத் தமிழ் பெண் சமூகம் சந்தித்துவிட்ட, இப்போதும் சந்திக்கின்ற துயரங்கள், வார்த் தைகளின் வரம்புகளிற்குள் அடக்க முடியாத வரலாற்றுக் கொடுமை. எமது பெண்களின் சமூக - பொருளாதார வாழ்வைக் கட்டியெழுப்பு வதே எமது கட்சியின் முழு முதற்பணியாக அமைய வேண்டும். 

இளைஞர்கள், ஒரு சமூகத்தின் தூண்கள் போன்றவர்கள். ஒரு மக்கள் சமூகம் எதிர்காலத்தில் எப்படியாகப் பரிணமிக்கப் போகின்றது என்;பதன் முன்னறிவிப்பாகவே, அந்தச் சமூகத்தை நாளை தாங்கி நிற்கப்போகின்ற இன்றைய இளைஞர்கள் திகழ்கின்றார்கள். ஒழுக்க நெறி, தன்னம்பிக்கை, அறிவார்ந்த வாழ்வின் இன்றியமையாமை என்பவற்றை ஊட்டி - நாளைய தமிழினத்தின் தூண்களுக்கு இன்றே வலுச்சேர்க்கும் பணிகளையும் எமது கட்சி தொடங்க வேண்டும். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழர்கள் எல்லோருக்குமான தலைமைச் சக்தி. தமிழ் பேசும் மக்களின் முன்னேற்றங்கள், பின்ன டைவுகள் எதிலும் - முஸ்லிம், இ;ந்து, கிறிஸ்த்தவ சமூகங்களைப் பிரித்துப் பார்க்க முடியாது. பெரும்பான்மை இனம்|, ~சிறுபான்மை இனம்| என்ற சொற்பதங்கள் பரவலாக முதன்மை நிலைப்பட்டுவரும் இலங்கைத் தீவின் புதிய அரசியற் சூழலில் - தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒரே மக்கள்| என ஒருங்கு திரள்வதே மிகத் துல்லிய மான தந்திரோபாயமாக இருக்க முடியும். அந்த வகையில், காலம் எம்மிடம் தந்துள்ள முதன்மையான பணிகளுள் ஒன்று, தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள தமிழ் பேசும் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ சமூகங்கள் முழுமையையும் இந்த விடுதலைப் பயணத்தில் ஒருங்கு திரட்டுவதாகும். 

அதேபோல - தமிழர் தாயகத்திற்கு வெளியே, மலையகத்திலும் தென்னிலங்கையிலும் எமது பணிகளை விரிவாக்கம் செய்து, அங்கு வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் உள்வாங்கிக்கொள் வதற்கான நேர்த்தியான வேலைத்திட்டங்கள் வரையப்பட்டு, நடை முறைப்படுத்தப்பட வேண்டும். இந்த தீவின் சிறுபான்மைச் சமூகங்கள் அனைத்தும் - தமது இன, மத, பண்பாட்டு அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாக்க வேண்டுமெனில், அவர்களுக்கு இருக்கின்ற ஒரே வழி, அவர்கள் அனைவரும் தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவதே ஆகும். 

சிறீலங்கா அரசாங்கத்தில், தமிழ் பேசும் மக்கள் சார்பாக அங்கம் வகிக்கும் ஏனைய அரசியற் கட்சிகளுக்கு இருக்கும் பெரும் பொறுப்பை யும் இந்தவேளையில் நான் தயவுடன் நினைவுபடுத்த விரும்புகின்றேன்: 

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான ஒரு தீர்வைத் தராமல்; அரசாங்கம் தாமதப்படுத்துவதற்குக் காரணம் - அதன் நேர்மையற்ற, மனப்பூர்வமற்ற, நல்நோக்கற்ற உளப்போக்குத்தான். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நிபந்தனையற்று ஆதரவளிப்ப தற்கு, அதனோடு இருக்கும் தமிழ் பேசும் மக்கள் சார்பான கட்சி களுக்கு சுயதேவைகளும் வேறு காரணங்களும் இருக்கலாம்@ ஆனால், இந்தக் கட்சிகள் - தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் இழுத்தடிக்கும் அரசாங் கத்தின் நேர்மையற்ற போக்குக்குத் துணை போய்விடக் கூடாது. 

ஒற்றையாட்சி இலங்கை என்ற அரசமைப்பிற்குள் தீர்வு காண, தமிழ் கட்சிகளது ஆதரவும் தனக்கு உண்டு எனக் காட்டித் தீர்வின் தரத்தைக் குறைக்க அரசாங்கம் எடுக்கும் கபட எத்தனங்களுக்கு இந்தக் கட்சிகள் வாய்ப்பளித்துவிடக்கூடாது. தனிப்பட்ட மற்றும் கட்சி நலன்களுக்கு அப்பால், இனத்தின் நலனை முன்னிறுத்தி இயங்க அவை முன்னவரவேண்டும். தமிழ் பேசும் மக்கள் சார்பாக, எமது இனத் தின் இறையாண்மையைக் கேள்விக்குட்படுத்தாத ஒரு வலிமையான தீர்வு யோசனையை, தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதி கள் என்ற அடிப்படையில் நாம் முன்வைக்க வேண்டும். அதற்கு ஒத்துழைக்கு மாறு நான் அனைத்துத் தரப்பினரையும் அன்போடு அழைக்கிறேன். 

அன்புடையீர்களே! தாயகத்தை விட்டுப் பிரிந்து பிற தேசங்களுக்குச் சென்றுவிட்ட போதும் - தமது தேசத்தின் மீது கொண்டுள்ள அருகாத பற்றினா லும், தமது மக்கள் மீது கொண்டுள்ள குறையாத அன்பினாலும்;, தமது இனத்தின் மீது கொண்டுள்ள தெய்வீக பக்தியினாலும் - புலம் விட்டுப் பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஆற்றிவரும் பணிகள் - ஈடற் றவை. இந்த மண்ணில் வாழும் ஒரு சாதாரண தமிழ் குடிமகனாக நன்றியுணர்வுடன் நான் அவர்களுக்கு மரியாதை செய்கின்றேன். 

எமது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகிய நாம் எல்லோரும் கூடியிருக்கின்ற இந்த மன்றமே, புலம் பெயர்ந்து வாழும் எமது உறவுகளுக்கான எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளு வதற்குப் பொருத்தமான அரங்கமாகவும் உள்ளது. மதிப்பிற்குரியோர்களே! இங்கே, இலங்கைத் தீவில் தமது அரசியல் நிலைப்பாடுகளை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் தமிழர்கள் ஒரேயடியாக முடங்கிப்போய் உள்ளார்கள் என, தீவிற்கு வெளியில் வாழும் ஒரு பகுதித் தமிழர்களிடம் இருக்கும் கருத்து, ஏற்புடைய ஒரு முழுமையான யதார்த்தநிலை அல்ல. 

அமைதியாக, ஆனால் திடமாக, தமிழ் மக்கள் இங்கே பேசிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். எமது இனத்திற்கென உரித்தான அடிப்படைப் பிறப்புரிமைகளை நிலைநிறுத்துவது தொடர்பான தமது நிலைப்பாடுகளை மக்கள் வெளிப்படுத்திய வண்ணமேதான் உள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அவர்கள் வாக்களித்ததே, அவர்கள் கொடு;த்த ஓர் துணிவான, சக்திமிக்க செய்திதான். 

அவர்கள் மட்டுமன்றி, அவர்களின் பிரதிநிதிகளான நாங்கள் ஒவ்வொருவரும் கூட வெளிப்படையாகப் பேசுகின்றோம். எனவே, இலங்கைத் தீவிற்குள் தமிழர்கள், தமது அரசியல் விருப்புறுதியை வெளிப்படுத்த இயலாமல் முழுமையான அரசியல் முடக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்கள் என்ற கருத்தைத் தளர்த்த வேண்டும் என, புலம் பெய்ந்து வாழும் தமிழர்க ளிடம் நான் தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளுகின்றேன். 

எமது மக்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் தாயகத்தில் வாழ்ந்தாலும் சரி, அல்லது வெளியில் வாழ்ந்தாலும் சரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எமது மக்கள் எல்லோரையும் சமமாகப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள்@ ஆனால், வெளியில் வாழும் மக்கள், தமது கணிப்புக்களுக்கும் கற்பிதங்களுக்கும் அப்பால், தாயகத்தில் வாழும் மக்களது நிலைப்பாட்டிற்கே எப்போதும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

தாயகத்தில் இன்னமும் வாழும் மக்களின் அரசியற் தெளிவுக்கும், முடிவெடுக்கும் துணிவுக்கும், தமது அரசியற் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் திறனிற்கும் - புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மதிப்பளிக்க வேண்டு;ம்@ தாயகத்தில் வாழும் மக்களினது இந்த இயல்புகளில் அவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். 

இலங்கைத் தீவிற்கு வெளியில் வாழும் தமிழர்கள், தீவிற்கு உள்ளே வாழும் தமிழர்களுக்காக எடுக்கும் அனைத்து அரசியல் முன்னெடுப்புக்களும், பகிரங்கமாக வெளியிடும் கருத்துக்களும் - இங்குள்ள களநிலைக்குப் பாதகத்தை ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும் இங்கு நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறுகளை விளைவிக்காதவையாக அமைய வேண்டும். ஏனென்றால் - இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, இங்குள்ள சூழ்நிலையை அனுசரித்து, இங்கேயே வாழும் மக்களால், இங்கேயே எடுக்கப்படும் முயற்சிகள்தான் - உருப்படியான இறுதி விளைவுகளை ஒட்டுமொத்தமான தமிழ் தேசிய இனத்தின் மீதும் ஏற்படுத்தும். 

அன்பானவர்களே! புலம்பெயர்ந்து, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சமூகமே, இந்த மண்ணில் இன்னமும் வாழும் மக்களின் அரசியற் - பொரு ளாதாரப் பலம் என்பதையும் நான் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும். அவர்களது இருப்பும், இயக்கமும், பங்காற்றலும் எப்போ தும் உயர்த்தி மதிக்கப்படவேண்டியவை. கொடூரப் போர் நிகழ்ந்த காலத்திலும் சரி, அந்தப் போர் குரூரமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னாலும் சரி - புலம் பெயர்ந்த மக்களே, தாயகத்து மக்கள் ஒரேயடியாகத் துவண்டு விடாமல் முண்டுகொடுத்து நின்றார்கள். அவர்களது ஈடுபாடும் பணிகளும், எப்போதும் இதே வேகத்துட னும் வீரியத்துடனும் தொடர வேண்டும் என்பதே எமது ஆழ்மன விருப்பம். 

தாயக மக்களது சமூக - பொருளாதார வாழ்வின் முன்னேற்றத்தில் புலம் பெயர்ந்த மக்கள் பாரிய அளவில் பங்கெடுக்க வேண்டும். போர் முடிந்ததன் பின்னால் உருவாகியுள்ள புதிய சூழலில், அவர் களது வாழ்வாதாரங்களைக் காத்திரமாக உயர்த்த உழைக்க வேண்டும். அவர்கள் சொந்தக்காலில் எழுந்து நிமிர்ந்து நிற்பதற்கு ஏதுவான பொருளாதாரப் புறச்சூழலைப் புலம் பெயர்ந்த மக்களே ஏற்படுத்த வேண்டும். 

இதனை அவர்கள் மேலோட்டமாக அல்லாமல், ஆழமான ஈடுபாட்டுடன், சீராகத் திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டும். இங்கு இப்போதுள்ள அகச் சூழலுக்குப் பொருத்தமான, நேர்த்தியான பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்றை, புலம் பெயர்ந்த மக்களே தாயக மக்களுக்காக உருவாக்கித் தர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம். 

எனது பேரன்புக்குரிய பெரியோர்களே, நாம் கூடியிருப்பது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு மன்றத் திலாக இருந்தாலும், எமது கட்சியே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக இருப்பதாலும், என்றும் அது அவ்வாறே இருக்கப் போகின்றது என்பதாலும், எமது கட்சியினதும் கூட்டமைப் பினதும் தலைமைப்பொறுப்பில் தற்போது நானே இருப்பவன் என்ற அடிப்டையிலும் - மேலும் சில விடயங்களை நான் இந்தச் சந்தர்ப் பத்தில் தெளிவுபடுத்திவிட விரும்புகின்றேன். 

ஒரு ஜனநாயக அரசியற் கட்டமைப்பிற்குள் கருத்துவேறுபாடுகள் எழுவது இயல்பானது. கருத்து வேறுபாடுகள் எழத்தான் வேண்டும்@ ஜனநாயகத்தின் அடிப்படையும் அதுதான். ஆனால், அமைப்பிற்குள் ளான கருத்துவேறுபாடுகள், அமைப்பிற்கு உள்ளேயே கலந்தாலோ சிக்கப்பட்டுக் களையப்பட வேண்டியவையே அல்லாமல், கட்சிக்கு வெளியே பகிரங்கப் பொது மன்றங்களில் கட்டவிழ்த்துவிடப்படக் கூடியவை அல்ல. 

அது ஒரு நலமான அணுகுமுறையாகவும் அமை யாது. அவ்வாறான அணுகுமுறைகள், கருத்திணக்கத்தையும் ஒரு மைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக, ஏற்கெனவே இருக்கும் முரண்பாடுகளைத்தான் மேலும் முற்ற வைக்கும். அது மேலதிக பிளவுகளுக்கு வழிவகுப்பதுடன், எமது அரசியற் கட்சியைப் பாதிப்பது மட்டுமன்றி, ஒட்டுமொத்தமான எமது இனத்தையுமே பலவீனப் படுத்திவிடும். இதனை, மக்களின் பிரதிநிதிகளான நாங்கள் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது. 

அதனாலேயே - உள் முரண்பாடுகள் எதனையும் பகிரங்கத்தில் விவாதிக்கும் புதிய பண்பாடு எதனையும் எமது கட்சி ஊக்குவிக்காது என்பதனையும், அதனை நாம் அனுமதிக் கக் கூடாது என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் உறுதிப்படத் தெளிவுபடுத்திவிட விரும்புகின்றேன். 

ஒரு ஜனநாயகக் கட்சியின் சிறப்பியல்பு என்பது, அனைத்துவிதமான கருத்துக்களுக்கும் அது வாசல்களைத் திறந்துள்ளது என்பதுதான். எமது கட்சியும் அந்தச் சிறப்புத் தன்மையை உடையது. கட்சியை மேன்மைப்படுத்தி, மக்க ளுக்குப் பயனுறச் செய்ய வேண்டும் என்ற உயரிய எண்ணத்து டனேயே நாம் இருப்பதால், அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் வழிகாட்டக்கூடிய உருப்படியான கருத்துக்களை நாம் வரவேற்கி றோம். முன்வைக்கப்படும் ஆக்கபூர்வமான கருத்துக்களை ஆராய்ந்து, தேர்ந்தெடுத்து, உள்வாங்கி, செயற்படுத்தி அடுத்த கட்டம் நோக்கி நகரும் விருப்புறுதியோடு நாம் உள்ளோம் என்பதையும் நான் ஆணித்தரமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். 

எனது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய பெரியோர்களே! எமது மக்களுக்கு சுபீட்சமான ஓரு வாழ்வை விரைந்து ஏற்படுத்திவிட வேண்டும் என எமது உள்ளுணர்வு தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருக்கின்றது. அதற்கான காலம் கனிந்து வரும் என்றே நாம் நம்புகின்றோம். 

சிறுகச் சிறுக, மெல்ல மெல்ல, நுட்பமான நகர்வுகள் ஊடாக - இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்துடன் நாம் கட்டியெழுப்பிவரும் புரிந்துணர்வும் நல்லுறவும் எமது இனத்திற்கு தீர்க்கமான ஒரு பலத்தைச் சேர்த்துவருகின்றன. இந்தப் பலத்தை வைத்து, எமது இனத்தின் இறையாண்மைப் பிரச்சனைக்கு உருப் படியான ஒரு நிரந்தர அரசியற் தீர்வைப் பெற்றுவிடும் சாத்தியம் உண்டு என்றே நாம் உறுதியாக நம்புகின்றோம். 

எமது இந்த நம்பிக்கையின் ஊற்று நீங்கள்தான். உங்கள் எல்லோரிடமிருந்தும் எமக்குத் தேவையானது - ஒற்றுமை@ நம்பிக்கை@ பாதுகாப்பு ஒத்துழைப்பு. தமிழ் தேசிய இனத்திற்காக மாசற்ற ஒரு தலைமைச் சக்தியைக் கட்டி எழுப்புவதற்குத் தேவையான உளப்ப+ர்வமான ஒற்றுமையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். 

நேர்மையான, நேர்த்தியான ஒரு பாதை வழியே - எமது மக் களுக்கு நிரந்தரமான அரசியல் விடுதலையைப் பெற்றுத்தர வேண்டும் என்ற ஒரே வேட்கையுடனேயே, எமது ஒவ்வொரு அடிகளையும் நாம் பக்குவமாகப் பதித்துச் செல்கின்றோம் என்பதில் நீங்கள் முதற்கண் நம்பிக்கை வைக்க வேண்டும். நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியினதும் ஆழமான அர்த்த பரிமாணங்களைக் கற்றுக்கொண்டு, அந்த முயற்சிகளுக்கு இடையூறுகளோ, களங்கமோ ஏற்பட்டு விடாமல், அந்த முயற்சிகளின் சுமூகமான முன்னெடுப்புக் களுக்கு நீங்களே எப்போதும் பாதுகாப்புக் கவசங்களாக இருக்க வேண்டும். 

ஆழமான அரசியல் அர்த்தங்களுடன் நாம் எடுத்துச் செல்லும் காத்திரமான இராஜதந்திரப் பணிகளை எமது மக்களுக்கு விலா வாரியாக எடுத்துவிளக்கி, குழப்பகரமான சூழல்களுக்குள் அவர்கள் சிக்கிவிடுவதைத் தவிர்த்து, எமது பணிகளுக்கு எல்லாவிதமான ஒத்துழைப்பையும் நீங்களே தரவேண்டும். 

எமது இனத்தின் உரிமைக் கோரிக்கைக்கான விடுதலை வேள் வியில் ஆகுதியாகிவிட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான எமது உடன்பிறப்புக்களின் ஆன்மாக்களின் மீது அஞ்சலித்து நாம் நடந்து செல்கின்றோம். அவர்களது ஆசீர்வாதங்களுடனேயே நாங்கள் இந்தப் பயணத்தைச் செய்கின்றோம். 

பழைய உலகச் செல்நெறிக்குள் அவர்களால் அடைய முடியாது போன அந்த இலக்கை - அவர்களுக்காகவும் எங்களுக்காகவும், புதிய உலகப் புறச் சூழலில் அடையத் தேவையான எல்லாவற் றையும் நாங்கள் செய்வோம். 

அந்த வரலாற்று வெற்றியை - இறந்தவர்களின் புனிதக் கல்லறைகளில் காணிக்கையாக்கி, இருப்பவர்களின் நலிந்த வாழ்வைச் செழுமைப்படுத்துவோம்.




இலங்கை அரசாங்கத்திடம் மிகவும் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம். இவற்றை அரசாங்கம் மறுதலிக்குமாக இருந்தால் இந்த நியாயமான இலக்குகளை அடைவதற்காக நாம் காந்தீய வழியில் வன்முறையற்ற சாத்வீக போராட்டம் ஒன்றை உரிய நேரத்தில் உரிய முறையில் ஆரம்பித்து அவற்றை அடையும் வரை போராடுவோம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசாவினால் தீர்மானம் வெளியிடப்பட்டது. 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அவசியம் 

1.அர்த்தமுள்ள அதிகூடிய அதிகாரப் பகிர்வு ஊடாக வடகிழக்கு பிராந்தியத்தில் எமது மக்கள் தமது அரசியல்இ சமூகஇ பொருளாதார, கல்வி, கலாச்சார அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆட்சியதிகாரங்கள் அவர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும். இப்படியானதொரு அரசியல் தீர்வு தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட்டும் கூட அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமையினால் இலங்கையின் தேசியப் இனப் பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. மேலும் காலத்தை வீணடிக்காமல் இந்த அடிப்படையிலும் முஸ்லீம் மக்களது அபிலாஷைகளை அங்கீகரிக்கும் வகையிலும் அரசியல் தீர்வொன்றுக்கு அரசாங்கம் இணங்க வேண்டுமென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது. 

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு 

2.வடகிழக்கு பிராந்தியத்தில் போர்ச்சூழலினால் இடம் பெயர்ந்த தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரும் உடனடியாக மீண்டும் தங்கள் சொந்த இடங்களில் வீட்டு வசதிகளுடன் மீள்குடியேற்றப்பட்டு, புனர்வாழ்வழிக்கப்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். போரினால் நிர்க்கதியாக்கப்பட்ட வாழ்விழந்த பெண்கள் (தலைமை தாங்கும் பெண்கள்), பெற்றோரை இழந்த பிள்ளைகள், மாற்றுத்திறனாளர்கள்; ஆகியோருக்கு புனர்வாழ்வும் மறுவாழ்வும் அளிக்கப்பட வேண்டும். இந்தக் கடமைகளின் மேற்கொள்வதற்கு மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும். இனமத அரசியல் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடுகள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பகிர்ந்தழிக்கப்பட வேண்டும். 

இராணுவ ஆக்கிரமிப்பு நிலை விலக்கல் 

3.வடகிழக்குப் பிராந்தியம் இராணுவ மயமாக்கப்பட்ட நிலையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இதன் மூலம் மக்களின் நில உரிமை, வாழ்வாதார உரிமை என்பன சுதந்திரமாக செயற்படுத்தும் நிலமை உருவாக வேண்டும். மக்களின் அன்றாட வாழ்வில் இடையூறாக நிற்கும் இராணுவத் தலையீடு முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். இதே போன்று குடியியல் நிர்வாகத்தில் உள்ள இராணுவத் தலையீடு முற்றாக அகற்றப்பட வேண்டும். வடகிழக்கு பிராந்தியத்தில் தலைவிரித்தாடும் மக்களுக்கெதிராக மனித உரிமை மீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வடகிழக்கில் தமிழ் மொழி தெரியாத சிங்கள இராணுவ ஆளுனர்கள், தமிழ் மொழி தெரியாத சிங்கள அரச அதிபர்கள், சிங்கள அதிகாரிகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் 

காணாமல் போனோர், கைதிகள் பிரச்சினைக்கு 

விரைந்து தீர்வு 

4.காணாமல் போயுள்ளவர்கள், சரணடைந்த பின் காணாமல் போனவர்கள் சம்மந்தமாக விசாரணைகள் நடாத்தப்பட்டு இவற்றுக்கு பொறுப்பாக உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மரண சான்றிதல் மற்றும் பொருத்தமான நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும், அவசரகால சட்டத்தின் கீழும் தடுப்புக் காவலில் அல்லல் உறும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் 1970ஆம், 1980ஆம் ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட முன்மாதிரிகளைப் பின்பற்றி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். 

வாழ்க்கை செலவு சுமையிலிருந்து மக்களை விடுவித்து இயல்புவாழ்வை ஏற்படுத்துதல் 

5.அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினால் முழு நாடும் அல்லல்படும் சூழ்நிலையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வருமானம் வாழ்வாதாரங்களை இழந்த வடகிழக்கு பிராந்திய மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். வேலையற்றவர்களுக்கும், விசேடமாக வடகிழக்கு பிராந்தியத்தில் வாழும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். பொதுச் சேவையில் 5 வீதத்திற்க்கு குறைந்திருக்கும் தமிழர்களின் எண்ணிக்கையின் காரணமாக தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளார்கள்;. அதனால் பொதுச் சேவையில் அவர்களுடைய விகிதாசாரம் தேசிய விகிதாசார அடிப்படையில் தாமதமின்றி உயர்த்தப்பட வேண்டும். 

புலம் பெயர்ந்த உறவுகளுக்கு ........... 

6.புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், தாயகத்திலுள்ள தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாi~களை உணர்ந்து தமிழ் மக்களுடைய நம்பிக்கையுள்ள பிரதிநிதிகள் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு அவற்றை அடைவதற்கு ஆதரவாக செயற்படுமாறு புலம் பெயர்ந்த உறவுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அத்தோடு மீள்குடியேற்ற விடயங்களில் எமது மக்களுக்கு வேண்டிய பொருள் உதவி, நிபுணத்துவ உதவி போன்றவற்றை ஒரு குறித்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் வழங்க முன்வர வேண்டுமென்றும் புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். 

சர்வதேச சமூகத்திற்கு............. 

7.இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மனித உரிமை பாதுகாப்பு சம்மந்தமாக சர்வதேச சமூகம் இதுவரை ஆற்றியிருக்கும் பங்களிப்புக்காக அவர்களுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில் தொடர்ந்து தமிழ் மக்களை வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கும் தமிழ் மக்களின் மனித உரிமைகள், அரசியல் உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் சர்வதேச சமூகம் தேவையான உதவிகளையாற்றி அதன் மூலமாக நாட்டில் நீதி, நேர்மை, கௌரவம், சமத்துவம் என்ற அடிப்படையில் விசுவாசமான புரிந்துணர்வும் சமத்துவமும் நல்லுணர்வும் ஏற்படுத்த வழி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். 

தாயக மக்களுக்கு................. 

8.எம்மால் நியாயமான முறையின் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு எமது மக்கள் பரிபூரணமான ஆதரவை நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் அதே வேளையில் இவற்றை அடைவதற்கு இந் நாட்டின் சிங்கள, முஸ்லீம் சகோதரர்களும் ஏனைய முற்போக்கு சக்திகளும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டுமென வினயமாக வேண்டுகிறோம். 

சர்வதேச விசாரணை................. 

9.இலங்கையில் 2009 மேயில் முடிவடைந்த போரின்போது சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், உரிமைகள் மீறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா.செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்வின் சிபாரிசுகளின் படி குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு சர்தேவ விசாரணை ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும். 

அதேபோல் இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவால் செய்யப்பட்ட பொறுப்புக்கூறும் கடப்பாடு தவிர்ந்த ஏனைய பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தவேண்டும்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 2012ஆம் ஆண்டு மார்ச் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டால் நாட்டில் விசுவாசம், புரிந்துணர்வு ஏற்பட்டு கௌரவமான சமாதானம் ஏற்படும். 

சாத்வீகப் போராட்டத்துக்கு அறிவித்தல் 

இந்த மாநாட்டில் இலங்கை அரசாங்கத்திடம் மிகவும் நியாயமான கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம். இவற்றை அரசாங்கம் மறுதலிக்குமாக இருந்தால் இந்த நியாயமான இலக்குகளை அடைவதற்காக நாம் காந்தீய வழியில் வன்முறையற்ற சாத்வீக போராட்டம் ஒன்றை உரிய நேரத்தில் உரிய முறையில் ஆரம்பித்து அவற்றை அடையும் வரை போராடுவோம் என்று தெளிவாகவும் வெளிப்படையாகவும் தமிழ் அரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு உறுதியுடன் அறிவித்தல் கொடுக்கிறது. 


இலங்கைத் தமிழரசுக் கட்சி தேசிய மாநாடு ஆரம்பம்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya