![]() |
இக்கண்டுபிடிப்புக் குறித்து பேராசிரியர் சி. பத்மநாதன் வீரகேசரிக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது பின்வருமாறு கூறினார். ”பொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களில் கருங்கல் இடிபாடுகளைக் கூர்மையாகக் கவனித்த பொழுது வியப்புக்குரிய சில விடயங்களை அறியமுடிந்தது. இந்தக் கோயில்கள் பாதுகாப்பாக உள்ள பொலன்னறுவைத் தொல்லியல் சின்ன வலயங்களுக்கு மிகத் தூரத்தில், ஹிங்குராங்கொட வீதியில் 2 கி.மீ தொலைவிலுள்ளது.100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீதி மாட்டுவண்டிப் பாதையாக இருந்தது. இம்மூன்று கோயில்களிலும் பெருந்தொகையான தமிழ்ச்சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன.
மூன்றாம் சிவாலயம்

ஐந்தாம் சிவாலயம்

கோயிலில் மிகவும் உயரமான தூண்கள் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. மூலஸ்தான, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்பவற்றின் நுழைவாயிலில் அமைந்த தூண்களிலே சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. மண்டபம் ஒன்றிலே உடைந்த சாசனம் எழுதிய பல கற்கள் காணப்படுகின்றன. இவை ஆயிரம் ஆண்டுகளாக மழையினாலும் வேறு இயற்கை சக்திகளினாலும் பாதிக்கப்பட்டதால் அவற்றிலே பெருமளவிற்கு எழுத்துகள் சிதைந்துவிட்டன. ஆயினும் மிக நுட்பமான முறையில் படியெடுப்பதன் மூலமும் படம் எடுப்பதன் மூலமும் அவற்றின் சில பகுதிகளையேனும் மீட்டுக்கொள்ள முடியும்.
விக்ஷ்ணு கோயில்


ஓர் அருங்காட்சியகத்திலே, தூண்சாலையிலே நிரைநிரையாக பல வரிசைகளில் நிறுத்தி வைக்கக்கூடிய சாசனம் எழுதிய தூண்கள் ஐந்தாம் சிவாலயத்திலும் அதனை அடுத்து இருக்கும் விக்ஷ்ணு கோயிலிலும் காணப்படுகின்றன. இச்சாசனங்கள் அனைத்தும் 11ஆம் 12ஆம் நூற்றாண்டுகளுக்குரியவை. சமய வழிபாடுகள், சமூகநிலைகள் என்பன பற்றி இவற்றிலே மிகவும் பயனுடைய விபரங்கள் கிடைக்கும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. பொலன்னறுவை நகரத்து மறைந்துபோன வரலாற்றின் ஓர் அத்தியாயத்தை இவற்றின் மூலம் மீட்டுக்கொள்ள முடியும் என்பது உறுதியான நம்பிக்கையாகும்.” எனப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் உறுதிபடத் தெரிவித்தார்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !