.jpg)
சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதிபெற்றுள்ளது.
இன்று இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது விக்கெட்டுக்காக மஹேல ஜெயவர்தன, திலகரட்ண டில்ஷான் இருவரும் களமிறங்கி மிகச்சிறப்பாக ஆடினர்.
குறிப்பாக மஹேல ஜெயவர்தன மிகச்சிறப்பாக ஆடினார். மஹேல ஜெயவர்தனவின் ஆட்டமிழப்பின் பின்னர் குமார் சங்கக்கார சிறப்பாக ஆட முனைந்த போதிலும், அவர் விரைவில் ஆட்டமிழக்க இல்ஙகை அணி தடுமாறியது. ஆனால் இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் பெறப்பட இலங்கை அணி 139 ஓட்டங்கள் பெறப்பட்டன.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக மஹேல ஜெயவர்தன 36 பந்துகளில் 42 ஓட்டங்களையும், திலகரட்ண டில்ஷான் 43 பந்துகளில் 35 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 11 பந்துகளில் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக சயீட் அஜ்மல், ஷகிட் அப்ரிடி, மொஹமட் ஹபீஸ், உமர் குல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
140 ஓட்டங்களை வெள்ளி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 16 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் அணி சார்பாக இம்ரான் நஷீர், மொஹமட் ஹபீஸ் ஆகியோர் நிதானமாக ஆடிய போதிலும், அதன் பின்னர் விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன. ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களுடன் காணப்பட்ட பாகிஸ்தான் அணியை அவ்வணியின் தலைவர் மொஹமட் ஹபீஸ் சிறப்பாக ஆடி பாகிஸ்தான் அணிக்கு வாய்ப்புக்களை வழங்கினார். ஆனால் ஒரே ஓவரில் மொஹமட் ஹபீஸும், ஷகிட் அப்ரிடியும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணியின் வாய்ப்புக்கள் சிதைந்தன.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் ஹபீஸ் 40 பந்துகளில் 42 ஓட்டங்களையும், உமர் அக்மல் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும், இம்ரான் நஷீர் 21 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ரங்கன ஹேரத் 4 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அன்ஜலோ மத்தியூஸ் 4 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், அஜந்த மென்டிஸ் 4 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவானார். இலங்கை அணி இரண்டாவது தடவையாக உலக டுவென்டி டுவென்டி தொடரின் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 2009ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்திருந்தது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !