
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரணியில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் பின்னர் அரசாங்கத்தில் பங்காளிக் கட்சியாக இணைந்துகொண்டது
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்க கூட்டணியோடு சேர்ந்து போட்டியிட்ட முஸ்லிம் கட்சிகள் பெற்றுள்ள ஆசனங்களுக்கு சமமான எண்ணிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஆசனங்களை வென்றிருந்தது.
கிழக்கில் மொத்தமாக வெற்றிபெற்றுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் 14 பேரில் 7 பேர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்தே தெரிவுசெய்யப்பட்டார்கள்.
மக்களின் ஆணை
தேர்தல் முடிந்து பல நாட்களின் பின்னர், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் கிழக்கு மாகாணசபையில் அரசாங்க கூட்டணி ஆட்சியமைத்துள்ள நிலையில், 'மக்கள் தமக்கு அளித்த அங்கீகாரத்தை அரசாங்கத்தை விட்டுவிலகி எதிரணியோடு சேர்ந்து ஆட்சியமைப்பதற்காக வழங்கிய ஆணையாக கருதக்கூடாது' என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறியுள்ளது.
அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே தமது மக்களின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக மக்கள் வழங்கிய ஆணையே அது என்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
ரவூப் ஹக்கீம் பதில்
கிழக்கு மாகாணசபைக்கான முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளில் முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்குவது, மாகாணசபையின் அமைச்சரவையில் இரண்டு அமைச்சுப் பதவிகளை வழங்குவது ஆகிய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் எழுத்துமூலம் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறினார்.
இதுதவிர, கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் நீண்டகாலமாக நிலவும் நிர்வாக ரீதியான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் அரச தரப்புடன் உடன்பாடு காணப்பட்டதாகவும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மத்திய அரசாங்கத்தில் எந்தப் பதவிகளுக்காகவும் தாங்கள் பேரம்பேசவில்லை என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தமிழோசையிடம் கூறினார்.
தமிழ் கூட்டமைப்பின் அழைப்பு
கிழக்கு மாகாணசபையை கலைத்துவிட்டு அரசாங்கம் தேர்தல் நடத்தப்போவதாக அறிவித்தது முதலே, ஏற்கனவே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் யாருடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடப் போகிறது என்ற கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

தேசிய அரசாங்கம் அமைக்கும் எண்ணத்தை ஜனாதிபதி நேரடியாக வெளியிட்டால் பரிசீலிக்கத் தயார் என்று தமிழ் கூட்டமைப்பு அறிவித்தது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் போட்டியிட வேண்டும் என்று அந்தக் கட்சிக்குள் இருக்கின்ற மூத்த தலைவர்கள் பலரும் கருதுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
முஸ்லிம் காங்கிரஸின் மாநாடு அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் நகரில் நடந்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேரவேண்டும் அல்லது தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கருத்துக்கள் அக்கட்சிக்குள்ளிருந்தே கிளம்பியிருந்தன.
அதேவேளை, அரசாங்கத்துடன் கூட்டணி அமைப்பதாக இருந்தால் நிபந்தனைகளுடன் செல்ல வேண்டும் என்ற கருத்துக்களும் பின்னர் வந்தன.
இந்த நிலையில் நீண்டகாலமாக முடிவு எதனையும் பகிரங்கமாக அறிவிக்காது இருந்த முஸ்லிம் காங்கிரஸ் தம்மோடு தான் இணைய வேண்டும் என்றும் சிறுபான்மை சமூகங்களின் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து கிழக்கில் போட்டியிட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அழைப்பு விடுத்திருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பையும் பரிசீலித்துவருவதாகக் கூறிவந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைமை பீடம் அடிக்கடி பல சுற்று கூட்டங்களை நடத்தியது.
அதன்பின்னர் அரசாங்கத்துடனேயே சேரப்போவதாக முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அரசாங்கத்துடன் வேட்பாளர் ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ், அதில் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து கிழக்கில் தனித்துப்போட்டியிடப் போவதாக அறிவித்தது.
அரச-கூட்டணிக்கு எதிரான பிரச்சாரம்
தேர்தலில் அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களில் அக்கட்சியினர் பரவலாக ஈடுபட்டார்கள்.

அரச கூட்டணியினர் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதாக முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலின்போது முறையிட்டது
சில இடங்களில் அரச கூட்டணி முஸ்லிம் கட்சிகளுடன் நேரடி மோதல்களும்கூட ஏற்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸே முறையிட்டிருந்தது.
தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பின்னணியில், அரசை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவு தெரிவித்தது.
கிழக்கில் ஆட்சியமைப்பது எதிரணிகளின் கூட்டணியா அரச கூட்டணியா என்பதை தீர்மானிக்கும் முக்கிய வாய்ப்பு கிடைத்திருந்த முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுநடத்திவந்தது.
இதற்கிடையில், தம்முடன் ஏற்கனவே திட்டமிட்டிருந்த பேச்சுவார்த்தைக்காக நீண்டநேரம் காத்திருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் அதில் கலந்துகொள்ளவில்லை என்றும் தமிழ்க்கூட்டமைப்பு வருத்தம் தெரிவித்திருந்தது.
அரசை எதிர்த்து பிரச்சாரம் செய்த முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்த அரசுக்கு எதிரான வாக்காளர்களின் ஆணையை அக்கட்சி மீறக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூறிவந்தது.
கிழக்கில் சர்வகட்சிகளும் பங்கெடுக்கும் ஆட்சியை அமைக்க ஜனாதிபதி அழைத்தால் அதுபற்றி பரிசீலிக்கத்தயார் என்று தமிழ்க் கூட்டமைப்பு அறிவித்த பின்னணியில் மறுநாளே முஸ்லிம் காங்கிரஸ்- தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு கொழும்பில் நடந்தது.
முதலமைச்சர் பதவி

கிழக்கின் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத்தின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதாக அரச தரப்பிலிருந்து இன்னும் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை
முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினருக்கு கிழக்கின் முதலமைச்சர் பதவியை கொடுக்கத்தயார் என்று கூறிய தமிழ்க் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸுடன் நடந்த சந்திப்பு திருப்தி அளிப்பதாக அறிவித்திருந்தது.
இந்த பின்னணியிலேயே, முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் கிழக்கில் ஆட்சியமைப்பதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவித்தது.
அதன்படி, அரச கூட்டணியில் போட்டியிட்டு வென்ற நஜீப் ஏ. மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். 5 அமைச்சுப் பொறுப்புகளில் 2 முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்துள்ளன.
இரண்டரை ஆண்டுகளின் பின்னர் முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கப்படும் என்று அரசாங்கத்துடனான பேச்சுக்களில் உடன்பாடு காணப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுகிறார், ஆனால் அதுபற்றி இன்னும் அரசாங்கம் பகிரங்கமாக எதனையும் அறிவிக்கவில்லை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !