
நடந்து முடிந்த சப்ரகமுவ மாகாண தேர்தல் வியூகம் அமைப்பதில் தலைவர் மனோ கணேசன், எத்துனை விட்டுகொடுப்புகளுக்கு மத்தியில், நேர்மையாக செயலாற்றினார் என்பதை நான் பக்கத்தில் இருந்து பார்த்தேன். இரத்தினபுரி, கேகாலை மாவட்ட தமிழர்கள் தங்கள் மாகாணசபை பிரதிநிதித்துவங்களைப் பெற வேண்டும் என்பதற்காக அவரின் தலைமையில் ஜனநாயக மக்கள் முன்னணி பாரிய பங்காற்றியது.
கொழும்பில் இருந்து சப்ரகமுவ மாகாணம் தூரத்தில் இருக்கின்றது. ஆனால் கம்பஹா மாவட்டம், கொழும்பு மாவட்டத்துடன் சேர்ந்து மேல் மாகாணத்தில் இருக்கின்றது. எனவே தூரத்தில் வாழும் நாம், மனோ கணேசனை பயன்படுத்தும்போது, இங்கு கம்பஹா மாவட்டத்தில் வாழும் தமிழர்களாகிய நீங்கள் அவரைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் வந்து கொண்டிருக்கின்றது. எதிர்வரும் மேல்மாகாணசபைத் தேர்தலில் நீங்கள் தலைவர் மனோ கணேசனுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் ஒற்றுமையுடன் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அதன்மூலம் தங்களுக்கு உரிய ஜனநாயக தமிழ் பிரதிநிதித்துவத்தை, கம்பஹா மாவட்ட தமிழர்கள் நிச்சயமாகப் பெற முடியும் என, கம்பஹா மாவட்ட ஜனநாயக மக்கள் முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற வத்தளை வட்டார செயற்குழுக் கூட்டத்தில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய சப்ரகமுவ சிவில் சமூக கழகத்தின் அமைப்பாளர் ரஞ்சித் ஜெயகர் தெரிவித்தார்.
ரஞ்சித் ஜெயகரை அடுத்து உரையாற்றிய முன்னணியின் கம்பஹா மாவட்ட செயலாளர் ஜெரோம் விக்னேஸ்வரன் கூறியதாவது,
சபரகமுவ தேர்தல் மலையக தமிழர்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இத்தேர்தல் இன்று சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது. நமது தலைவர் மனோ கணேசன் இக்கூட்டு முயற்சிக்காக, இனவுணர்வுடன் செயல்பட்டார். இரத்தினபுரியில் மட்டும் அல்ல, நாம் போட்டியிடாத கேகாலை மாவட்டத்துக்கும் சென்று அவர் பிரசாரங்களில் ஈடுபட்டார். கடந்த காலங்களில் வட மாகாணத்துக்கும் சென்று அங்கு வாழும் வட-கிழக்கு தமிழர் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக அவர் பிரசாரங்களில் ஈடுபட்டதை நீங்கள் அறிவீர்கள். அவர் வடக்குக்கு சென்றதையும் சிலர் குறை சொன்னார்கள். இன்று அவர் சப்ரகமுவ சென்றதையும் சிலர் குறை சொல்கிறார்கள். அவர் இந்த விமர்சனங்களை துச்சமாகக் கருதி செயற்படுகிறார். தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் தமிழ் பிரதிநிதித்துவம் உறுதிபடுத்தப்பட வேண்டும் என்பதே அவரது குறிக்கோள்.
இன்று, வத்தளை உட்பட கம்பஹா மாவட்டத்தில், மலையகத்திலிருந்து குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களும், வட-கிழக்கிலிருந்து குடிபெயர்ந்த தமிழர்களும் நிரந்தரமாக இணைந்து வாழ்கிறார்கள். இந்துக்களும், கிறிஸ்தவர்களும் வாழ்கிறார்கள். இங்கு மலையகத்தமிழர், வட-கிழக்கு தமிழர், இந்து, கத்தோலிக்கர் என்று பிரித்து வைத்து அரசியல் செய்யமுடியாது. தமிழர் என்று மாத்திரமே அரசியல் செய்யமுடியும். நம் அனைவரையும் தமிழர் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்று சேர்க்கக் கூடிய ஒரே தலைவர் மனோ கணேசன் அவர்கள் ஆவார்.
ஆகவே, எதிர்காலத்தில் வரும் மாகாணசபைத் தேர்தலில், கம்பஹா மாவட்டத் தமிழர்கள் ஒருமித்து வாக்களித்தால், எமது தலைவர் தலைமையிலான ஏணி சின்னத்தில் நாம் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களைப் பெற முடியும். எனவே சிறு, சிறு குழுக்களாக பிரிந்து நிற்பதை நாம் நிறுத்த வேண்டும். ஜனநாயக மக்கள் முன்னணியில் நாம் அனைவரும் இணைய வேண்டும். எமது கட்சியின் கட்டமைப்பு இன்று கம்பஹா மாவட்டம் முழுக்க அமைக்கப்பட்டு வருகின்றது. நமது ஒளிமயமான எதிர்காலத்துக்காக நாம் இன்று நம்மை தயார்படுத்துவோம். இந்த நோக்கில், சப்ரகமுவ மாகாணத்தைப் பின்பற்றி கம்பஹா மாவட்டத்திலும் தமிழ் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நான் பிரேரிக்கிறேன்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !