
உலகத் தமிழர் பரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவையின் மேற்சபைக்கு 9 பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பு விதிகளில் (1.8.2) கூறப்பட்டவைக்கு அமைவாக தற்பொழுது மேற்சபை உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணியக ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் :
1) ராம்சி கிளார்க்:
அமெரிக்காவின் முன்னை நாள் சட்டமா அதிபராவர். அமெரிக்கச்சட்டத்திலும் அனைத்துலகச்சட்டத்திலும் துறைதோய்ந்த நிபுணனாகத் திகழ்ந்தவர். சளைக்காத ஒரு குடிசார் உரிமைகள் ஆர்வலர் என்று பெயரெடுத்தவர்.
கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சட்டவாக்கச் சாதனைகள் என்று கருதப்படும் வாக்குரிமைச் சட்டம்-1965, சமூக உரிமைகள் சட்டம்-1968 ஆகிய இரண்டையுமே உருவாக்கலிலும் நிறைவேற்றலிலும் முன்னின்று பணியாற்றிச்சரித்திரத்தில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர்.
அனைத்துத்தமிழராலும் உற்ற தோர் நண்பனாகக் கருதப்பட்டவர். எமது உரிமைகள் எப்போது சரி எங்கு சரி மீறப்படினும் தயங்காது எழுந்து நின்று குரல் தருபவர்.
2) கலாநிதி ப்ராயன் செனெவிரத்ன:
ஒரு சிங்களக் குடிமகனான இவர் இலங்கையில் ஒரு மருத்துவப் பேராசிரியராகத் தொழில் புரிந்தவர்.
கடந்த 20 ஆண்டுகளாக உலகெங்கணும் சென்று பேரினவாத சிறிலங்கா அரசின் கீழ் தமிழர் படும் அல்லல்களைப் புட்டுக்காட்டிக் கொண்டிருப்பவர். சிறிலங்காவின் மனித உரிமைகள் வதம் பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை வரைந்தவர். என்றென்றும் எமக்காக ஒலிக்கபோகின்ற குரல் இவரதாகும்.
3) கலாநிதி நாகலிங்கம் ஜெயலிங்கம் :
ஒரு மருத்துவ ஆய்வாளர். இவர் மட்டுமன்றி இவரது முழுக்குடும்பமுமே தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவர்கள்.
(4) சத்யா சிவராமன் :
ஒரு ஊடகவியலாளர் மட்டுமன்றி தெற்காசியாவில் மனிதஉரிமைகள் மற்றும் பொதுச்சுகாதாரம் பற்றிய ஒரு தொழிற்பாட்டாளருங்கூட. சிறிலங்காவின் மனித உரிமைகள் மீறல்களை வெளியுலகுக்குக் கொண்டுவந்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு.
5) நடேசன் இழஞ்செழியன் :
கல்லூரிப் பராயத்திலிருந்தே சமூகத்தில் நிலை குலைந்தவர்களின் வாழ்க்கைப்போராட்டத்தைத் தம்முடைய சமூக எழுச்சிப் போராட்டமாக மாற்றிக்கொண்டவர்; .அம்மாந்தர் வாழ்வின் கண்ணியத்தைக் காப்பதனையே தம்முடைய வாழ்வின் குறிக்கோளாக்கிக் கொண்டவர். ஐ.நாவிற்குப் பத்துலட்சம் கையெழுத்துக்கள் திரட்டும் பணியில் தம்மைப் பகலிரவாக அர்ப்பணித்தவர்.
6) ஞானேஸ்வரன :
இலங்கையிலும் கனடாவிலும் பொறியியலாளராகப் பட்டயம் இவர் அறிந்தநாட் தொட்டு தமிழ் மக்கள் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். புலம்பெயர் சமூகத்தில் கருத்தொருமிப்பை நிறுவுவதற்குத் தம்மை முழுவதாக அர்ப்பணித்தவர்.
7) உஷா சிறீஸ்கந்தராஜா :
கனேடியத் தமிழர் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். ஈழத்தமிழர் பிரச்சினைகள் பற்றிப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதுவதன் மூலமே ஒரு புனித யுத்தத்தை நடாத்திக்கொண்டிருப்பவர்.
8) சுப்பிரமணியம் இராஜரத்தினம் :
புலம்பெயர் தமிழர் வாழ் உலகெங்கும் ஒருங்கிணைந்த தமிழ் மொழிக் கல்விக்கென்று தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர. அதற்கான நூலாக்கக்குழுவிலும் பெரும்பங்கு கொண்டிருந்தவர். சிறந்த எழுத்தாளரான அவருடைய பண்பாடு: வேரும் விழுதும் என்ற நூலானது தமிழ் நாட்டு அரசினால் சிறந்த நூலெனத் தேர்வு பெற்ற ஒன்று.
9) ஜெகன் நவரத்னம் மோகன் :
தமிழீழச் சங்க மூலமாகவும் கனடியத் தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிறுவகம் மூலமாகவும் கனடியத் தமிழ் மக்களுக்கு அளப்பருஞ் சேவைகள் செய்த ஒரு மூத்தவழக்குரைஞரான இவர் புரியும் பல்தரப்பட்டபணிகளுக்காகவும் அவரின் தலைமைத்துவப் பண்புகளுக்காகவும் கனேடியப்பாராளுமன்றம வரைக் கௌரவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களாகதேர்வு செய்யப்பட்டுள்ள இவர்கள் ஒவ்வொருவரதும் திறமைகளும் அனுபவமும் தொழில் சார் தகமைகளும் நாம் எமது இலக்கை அடையும் முயற்சிகளில் நன்குபயன்படும். அத்துடன் தமிழீழம் நோக்கிய எமது பயணத்தில ;இவர்கள் தங்கள் இதயபூர்வமான அர்ப்பணிப்புடன் செயல் பட உறுதி பூண்டுள்ளவர்கள் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணியக ஊடகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !