Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » , » ரமழான் பெருநாள்

ரமழான் பெருநாள்

Written By sakara on Sunday, August 19, 2012 | 6:16:00 PM

நாம் பூர்த்தி செய்யும் இந்தப் புனித ரமழான் மாதம், புனித அல்குர்ஆன் இறக்கி அருளப்பெற்ற மாதமாகும்.

அந்தக் குர்ஆனை இறக்கி மனித சமூகத்துக்கு நேர்வழி காட்டிய அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவே அவனது திருநாமத்தை தக்பீராக முழங்கிய வண்ணம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றோம்.

இதனை ஸூரத்துல் பகரா பின்வருமாறு குறிப்பிடுகிறது,

"நீங்கள் (ரமழான் மாதத்தைக் கணக்கிட்டு நோன்பின்) எண்ணிக்கையைப் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் (இந்த மாதத்தில் குர்ஆனை இறக்கி) உங்களுக்கு (உங்களது இரட்சகர்) நேர்வழி காட்டியதற்காக தக்பீர் முழங்க வேண்டும். நீங்கள் நன்றியுள்ளவர்களாக மாறலாம்.'

பெருநாள் மகிழ்ச்சியின் நாளாகும். அன்றைய மகிழ்ச்சி, புத்தாடை அணிந்து, அறுசுவை உண்டு கழிப்பதற்கு மட்டுமல்ல, உலகில் நாம் வாழ வேண்டிய வழியை அல்லாஹ் எமக்குக் காட்டி விட்டான் என்பதைக் குறிப்பதே பெருநாளின் மகிழ்ச்சியாகும். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இஸ்லாமிய சுலோகம் தான் தக்பீர் அல்லாஹூ அக்பர்!

முஸ்லிம்களின் அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக அழகியதொரு வழிமுறையை அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்திருக்கிறார்கள்.

பெருநாள் தினம் சுபஹ் தொழுகைக்கு முன்பே முஸ்லிம்கள் தமது பெருநாள் கொண்டாட்டத்துக்குத்  தயாராக வேண்டும். குளித்து, புத்தாடை அணிந்து, நறுமணம் பூசி தொழுகைக்காக ஒரு திறந்தவெளியில் முஸ்லிம்கள் ஒன்று கூடுவார்கள். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், ஏழைகள், பணக்காரர்கள் அனைவரும் இந்த ஒன்றுகூடலில் பங்கேற்பார்கள். ஆண்கள் முன் வரிசையிலும், சிறுவர்கள் அதற்குப் பின்னாலும் , பெண்கள் பின் வரிசையிலும் அணிவகுத்து நிற்பார்கள்.

சுபஹ் தொழுகை முடிந்ததும் சூரிய உதயம் கழித்து, அடி வானில் சூரியன் ஓர் ஈட்டியளவு உயரும் வரை அந்த வெளியில் அனைவரும் காத்து நிற்பார்கள். பெருநாள் தொழுகை ஆரம்பமாகும். அந்த நேரம் வரை தக்பீர் முழக்கத்தால் தங்களது மகிழ்ச்சிப் பிரவாகத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள்.

ஒரு திறந்தவெளியில், மண்ணிலிருந்து விண்ணை நோக்கி உயரும் இந்த தக்பீர் முழக்கம் மூலமாகத்தான் விண்ணிலிருந்து மண்ணை நோக்கி தமக்கு அருளப்பட்ட குர்ஆனுக்காக முஸ்லிம்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்.

அந்தத் தக்பீர் முழக்கத்தோடு பெருநாள் தொழுகை ஆரம்பமாகிறது. பின்னர் ரமழானை வழியனுப்பும் ஒரு பேருரை பெருநாளுரையாக நிகழ்த்தப்படுகிறது. அது ஒரு சடங்குக்காக நிகழ்த்தப்படும் உரையல்ல. ரமழானில் பெற்ற பயிற்சியை ஏனைய காலங்களில் அமுல் நடத்துவதற்கான பிரகடன உரையாகும்.

அந்த உரையோடு இரட்சகனுக்கு நன்றி கூறிய முஸ்லிம்கள் ஒருவரோடு ஒருவர் ஸலாம் கூறி முஸாபஹா செய்து வாழ்த்தும் கண்கொள்ளாக் காட்சி உலகில் எந்தக் கொண்டாட்டத்துக்கும் ஈடாக மாட்டாது.

பெருநாள் தொழுகைக்காக ஒரு வழியில் வந்து வேறு வழியில் திரும்பிப் போவது நபிகளார் காட்டித் தந்த வழிமுறைகளாகும். இவை யாவற்றையும் முடித்துக்கொண்டு வந்த வழியை விட்டு வேறு வழியாகத் தங்களது வீடுகளை நோக்கித் திரும்பிச் செல்லும் போது ஏனைய முஸ்லிம் சகோதரர்களையும் சந்தித்து ஸலாம் கூறும் வாய்ப்புக் கிட்டுகிறது.

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரிக்கமைய கொண்டாடப்பட வேண்டிய பெருநாள் இன்று ஒரு சில இடங்களைத் தவிர, பொதுவாகக் கூடுதலான இடங்களில் அதன் தன்மையை முற்றாக இழந்து நிற்பது கவலைக்குரிய விடயமாகும்.

இன்றைய நிலையை சற்று உற்று நோக்கினால் எதற்காக, எந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக இப்பெருநாளைக் கொண்டாடுகிறோம் என்பது எமக்குப் புரியாமல் இருக்கிறது. காலை 9.00 மணிக்கும் 10.00 மணிக்கும் தான் பெருநாள் தொழுகை ஆரம்பமாகிறது. சிலர் சுபஹ் தொழுகையை தூக்கத்தில் "கழா' வாக்கிவிட்டுத் தாமதமாகத் துயிலெழுந்து ஆறுதலாகக் குளித்துவிட்டு பெருநாள் தொழுகைக்காக பள்ளிவாசல் நோக்கிச் செல்லும் சோம்பேறித்தனம் தான் இன்றைய பெருநாட்களை அலங்கரிக்கின்றன. ஆண்கள் பள்ளிக்குப் போகிறார்கள். பெண்கள் ஆங்காங்கே வீடுகளிலும், தக்கியாக்களிலும் ஸாவியாக்களிலும் சிறு சிறு குழுக்களாக பெருநாள் தொழுகையை நிறைவேற்றுகிறார்கள். அவர்களுக்கு குத்பா இல்லை. இதுதவிர தாமதமாகி பள்ளிக்குச் செல்லும் ஆண்களுக்கு குத்பாவின் பின்னரும் பெருநாள் தொழுகை தொழுவிக்கப்படுகிறது. ஏற்கனவே தொழுகை ஒன்பது பத்து மணி வரை தாமதமாவது ஒருபுறம், அதற்கு மத்தியில் சோம்பேறித்தனத்துக்குக் கண்ணியம் வேறு.

இவ்வாறு கொண்டாடப்படும் இந்தத் திருநாளில், பெருநாளின் நோக்கம் சிறிதளவும் பிரதிபலிப்பதில்லை. புனித அல்குர்ஆனை நமக்கு அருளி ஹிதாயத்தைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் தன்மையை இன்றைய பெருநாட்களில் காண முடியாதிருக்கின்றது. பட்டாசு கொளுத்தி ரமழானை விரட்டும் ஒருவகை வறட்டு மகிழ்ச்சி தான் இன்றைய பெருநாட்களின் தோரணையாக மாறியிருக்கின்றது.

நாம் இவ்வாறான செயல்முறைகளை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த முன்மாதிரிக்கமைய எமது பெருநாட்களை கொண்டாட முன்வர வேண்டும். ஆண்கள், பெண்கள் எல்லோரும் சேர்ந்து திரையில்லாத ஒரு பெருவெளியில் நபிகளாரின் பெருநாளைப் போல நாம் பெருநாள் கொண்டாடினால் கூடாதா? என்று சமூகத்தைக் கேட்டுப் பார்த்தால் கிடைக்கும் பதில்கள் ஆச்சரியமாக இருக்கின்றன.

ரமழானில் பள்ளிவாசல்களிலும், தக்கியாக்களிலும் ஆங்காங்கே வீடுகளிலும் தராவீஹ் தொழுகை நடத்தியவர்களுக்கு கிடைக்கவேண்டிய பெருநாள் நன்கொடைகள் இல்லாது போய் விடலாம் என்ற சிந்தனை தான் பெருநாளின் தாக்கத்தையும் இல்லாது செய்து நபிகளாரின் முன்மாதிரியையும் புறக்கணிக்கின்ற அளவுக்கு மேலோங்கியுள்ளது.

என்ன ஆச்சரியம்! தராவீஹ் தொழுகை நடத்தியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகத் தான் பெருநாள் கொண்டாடப்படுகிறதா? குர்ஆனின் மூலம் ஹிதாயத்தை அருளிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் பெருநாள் கொண்டாடப்படுகிறதா? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு திறந்தவெளியில் பெருநாள் கொண்டாடுவதற்கு முற்படுகின்ற போது, பள்ளிவாசல்களில், வீடுகளில் தராலீஹ் தொழாதவர்கள் அந்த தக்கியாவிற்குரிய, தொழுகை நடத்தியவருக்குரிய நன்கொடையை வெவ்வேறாக செலுத்துவதற்குரிய ஒரு மாற்றுமுறையைக் கையாளலாம். அப்போது பெருநாள் நன்கொடைக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை.

எனினும் இவ்வாறான வழிமுறைகளைக் கையாளாமல் நபிகளாரின் சுன்னாவைப் புறக்கணித்து விடும் எமது சமூகம், மார்க்கத்தின் ஏனைய சுன்னாக்களை எவ்வாறு தான் உயிர் பெறச் செய்ய முடியும்?

முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள சிக்கலான இன்றைய காலகட்டத்தில் நபிகளாரின் சுன்னத்துகளை செயற்படுத்துவதால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கலாம்.

அது மட்டுமல்ல, சன்மார்க்க விவகாரங்களில் பங்கெடுப்பதற்கு இஸ்லாம் அனுமதித்த எந்த இடத்திற்கும் முஸ்லிம் பெண்களை நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கும் ஒரு சில கூட்டங்களும் நபிகளாரின் முன்மாதிரியைப் பின்பற்றி பெருநாள் கொண்டாடுவதற்கு மற்றுமொரு தடையாக இருக்கிறது.

இவர்களது வாதம் என்னவென்றால் ஆண்களும் , பெண்களும் ஒரே வெளியில் ஒன்று கூடுவதை அனுமதிக்க முடியாது என்பதாகும்.

உண்மையில் இவர்கள் பெண்கள் சமூகத்தைப் பாதுகாப்பதற்காக நினைத்து அல்லாஹ்வின் தீனை விட்டும் அவர்களைத் தூரமாக்கும் வேலைகளையே செய்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்படுத்திய சமூக மாற்றத்திற்கான காரணங்களுள் ஒன்று ஆண்களைப் போலவே சமூகத்தில் சரி பாதியான பெண்களை சன்மார்க்க விவகாரங்கள் அனைத்திலும் அவர்கள் பங்குகொள்ளச் செய்ததாகும்.

ஆனால் இன்று இஸ்லாமியப் பணியில் ஈடுபடும் ஒரு பகுதியினர், பெண்கள் மார்க்கம் படிக்க வேண்டியதில்லை. பெண்களை பாடசாலைகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்ப வேண்டியதில்லை. பெண்கள் இஸ்லாமியப் பணிகளில் ஈடுபடக்கூடாது. இதேபோன்று தான் பெண்கள் ஜூம்ஆத் தொழுகைகளிலோ பெருநாள் தொழுகைகளில் கலந்து கொள்ளவோ தேவையில்லை என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.

இந்தக் கொள்கையை விடாப்பிடியாக செயல்படுத்தும் சில மார்க்க பக்தர்கள் காரணமாக பெண்கள் சமூகம் இஸ்லாத்திலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தின் எத்தனையோ சுன்னாக்களும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் நபிகளார் கொண்டாடிய பெருநாள்.

நாம் கொண்டாடும் பெருநாளுக்கும் நபிகளாரின் பெருநாளுக்கும் இடைவெளி வெகுதூரம். இந்த இடைவெளியைக் குறைக்க முன்வர வேண்டும். பெருநாள் கொண்டாடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் எமது சமூகமும் சமூகத்தை வழிநடத்தும் மார்க்க அறிஞர்களும் இது விடயமாக சிந்தித்து செயற்படுவது காலத்தின் தேவையாகும்.

யா அல்லாஹ்! நபி வழியில் பெருநாள் கொண்டாடும் பாக்கியத்தை சகல முஸ்லிம்களுக்கும் வழங்கி அருளுவாயாக! ஆமீன்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya