
இது பற்றி உலமாக் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,
அண்மைக்காலமாக முஸ்லிம்களின் சமயக் கிரியைகளுக்கெதிராக பல சக்திகள் செயற்பட்டு வருவதை நாடு அறியும். இவற்றை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான ரவுப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் அல்லது ஜனாதிபதியுடன் பேசி இவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை நாடியிருக்கலாம்.
அதனை விடுத்து இது விடயங்களை தனது கட்சியின் தேர்தல் சுய நலனுக்காக பயன்படுத்துவதன் மூலம் கிழக்கு முஸ்லிம்களை பகடைக்காயாக மாற்ற முனைந்து கடைசியில் தான் பேசியவற்றுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்கும் இழி நிலைக்குத் தள்ளப்பட்டதன் மூலம் முஸ்லிம்களின் அரசியல் தலைவராக இருப்பதற்குரிய தகுதியை இவர் முற்றாக இழந்து விட்டார்.
இத்தகைய ஒருவரை நம்பி கிழக்கு மக்கள் இவரது கட்சிக்கு வாக்களித்தால் நிச்சயம் அவர்கள் நட்டாற்றில் விடப்படுவர் என்பதை உறுதியாகக் கூற முடியும்.
முஸ்லிம் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதாயின் அமைச்சுப்பதவிகளில் இருந்து கொண்டு ஒரு போதும் முடியாது என்பதை நாட்டின் வரலாறு நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. இதன் காரணமாகவே மு. கா தலைமை அமைச்சுப்பதவியைப் பெறாமல் அரசுக்கு ஆதரவளிக்கலாம் என்பதை கடந்த காலங்களில் நாம் சொன்னோம்.
அமைச்சுப்பதவியைப்பெற்று அரசுக்கு முட்டும் கொடுத்துக்கொண்டு சமூகத்துக்கான உரிமைகளைப் பெற முடியும் என்றிருந்தால் தமிழ் கூட்டமைப்பினர் எப்போதோ அதற்கு முன் வந்திருப்பார்கள். அவர்களைப் பார்த்தாவது ஹக்கீம் அரசியல் கற்றுக்கொள்ளாமல் அதாவுல்லா, ரிசாத் போல் தாமும் தமது சகாக்களும் அமைச்சர்களாகவும் அரச வாகனங்களில் உல்லாசமாக வலம் வரவும் வேண்டும் என்பதுடன் சமூகத்தின் உரிமைகளுக்காக பேசுவது போல் காட்டவும் வேண்டும் என்றால் அது முடியாத காரியம் என்ற யதார்த்தம் இப்போதாவது ரவூப் ஹக்கீமுக்கு விளங்கியிருக்குமா என்பது தெரியவில்லை. ஹெல உறுமயவிடம் போய் இவர் பகிரங்க மன்னிப்புக் கேட்டமை மூலம் நாட்டில் காவியுடை பயங்கரவாதம் இல்லை என்பதை இவரே பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதாகவே அர்த்தப்படுகிறது. இதன் மூலம் முழு முஸ்லிம் சமூகத்துக்கும் தலை குனிவை ஏற்படுத்தியுள்ளதோடு ஜாதிக ஹெல உறுமயவுக்கான சிங்கள மக்களின் வாக்குகளைக் கணிசமாக உயர்த்தி விட்டார்.
இவ்வாறு மன்னிப்பு கேட்பதை விட அமைச்சுப்பதவியை தூக்கி எறிந்திருந்தால் இந்த நேரத்தில் சமூகத்துக்கு பெருமை சேர்ந்திருக்கும். அதனை அவர் செய்ய மாட்டார் என்பது நமக்குத்தெரியும். காரணம் முஸ்லிம் காங்கிரஸ் என்பது முழுக்க முழுக்க சுயநலவாதிகளின் கோட்டை என்பதைக் கடந்த பத்து வருடங்களாக நாம் கூறி வருகிறோம்.
இவ்வாறு கிழக்கில் ஒன்றும் கொழும்பில் ஒன்றுமாகப் பேசும் ஒரு தலைமையைப் பற்றி இன்னமும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் புரியவில்லை என்றால் அவர்கள் இன்னமும் யதார்த்த அரசியலை புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தப்படும். உண்மையில் கிழக்கு முஸ்லிம்கள் விழிப்படைந்து விட்டார்கள் என்பதை இந்தத்தேர்தல் மூலம் நிரூபிப்பதாயின் அரசின் அமைச்சராக இருக்கும் ஹக்கீமின் மரத்தையும், பள்ளிகளை பதம் பார்க்க ஒத்துப்போகும் வெற்றிலைக்கும் வாக்களிப்பதைத் தவிர்க்க வேண்டும்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !