![]() |
ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக கட்சியின் ஊடக செயலாளர் எஸ். பாஸ்கரா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ரீரங்கா எம்பியின் நலன் கருதி, அவர் தன்னை தயார் படுத்தி கொள்வதற்காக குறிப்பிட்ட விவாதத்தில் ஜமமு கலந்துரையாட விரும்பும் விடயங்கள் பற்றியும் ஸ்ரீரங்கா எம்பிக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒரே சமயத்தில் அரசியல்வாதியாகவும், ஊடகவியலாளராகவும் இருந்துகொண்டு நீங்கள் தனியார் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் அரசியல் விவாத நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள். உண்மையில் உமது நிகழ்ச்சி நடைபெறும், தனியார் தொலைக்காட்சி நிறுவனமும், அந்த தொலைக்காட்சி மற்றும் பண்பலை அலைவரிசைகள், இந்நாட்டு தமிழ் பேசும் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் தலைவர், நிர்வாகத்தினர், திறமைமிக்க இளம் மற்றும் அனுபவமிக்க நிகழ்ச்சி மற்றும் செய்தி தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், தொழில்நுட்பகலைஞர்கள் ஆகியோர் தொடர்பில் நாம் நன்மதிப்பு கொண்டுள்ளோம். சக்தி தொலைக்காட்சி, பண்பலை அலைவரிசைகளுடன் எமக்கு எந்த விதமான பிரச்சினையும் கிடையாது. ஆனால், ஊடக தர்ம நியாயங்களையும் மீறி நீங்கள் தன்னிச்சையாக நடத்துகின்ற, அரசியல் விவாத நிகழ்ச்சியே எமதும், இந்நாட்டு தமிழ் பேசும் மக்களினதும் கடும் அதிருப்திகளை சந்தித்துள்ளது.
நீங்களே கேள்விகளையும் கேட்டு, அதற்கான பதில்களையும் நீங்களே வழங்கி, நீங்களே அதிகம் உரையாடும் போக்கில் உமது நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. உம்மால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும் பிரபல தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முன்னணி தமிழ் ஊடகவியலாளர்கள், தொண்டு நிறுவன செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உமது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இல்லை. பதிலளிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் இல்லாத சந்தர்ப்பங்களில், அவர்களை கடும் சொற்களால் தனிப்பட்டரீதியாக விமர்சனம் செய்கிறீர். அதேவேளையில் உம்முடன் இசைந்து செல்லும் ஒருசிலருக்கு நற்சான்றிதழ் வழங்குகிறீர். இவை ஊடக நியாயங்களை கடுமையாக மீறும் செயலாகும்.
ஆகவே நடுநிலையாளர் முன்னிலையில் நடத்தப்படக்கூடியதாக இந்த பகிரங்க நேரடி விவாதத்திற்கு வரும்படி உமக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். உமது பதிலின் பின்னர் உம்முடன் எமது கட்சியின் சார்பாக விவாதிக்கும் பிரதிநிதியை நமது கட்சி நியமிக்கும். உங்களுக்கு வாக்களித்து உம்மை தெரிவு செய்த நுவரேலியா மாவட்ட வாக்காளர்கள் மத்தியிலிருந்து உம்மிடம் கேள்வி கேட்பதற்கு ஆயிரகணக்கானோர் காத்திருக்கின்றனர். அவர்களது கேள்விகளையும், பின்வரும் நமது கேள்விகளையும் நாம் இந்த உத்தேச அரசியல் விவாதத்தில் உம்மிடம் எழுப்ப உள்ளோம். ஊடக நாகரீகத்தின் அடிப்படையில் உங்கள் நன்மையை கருதி எமது முக்கியமான சில கேள்விகள் உமக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகின்றன.
நீங்கள் தற்போது ஆளும் கட்சி எம்பீயா அல்லது எதிர்க்கட்சி எம்பீயா? உமது கட்சியென சொல்லிக்கொள்ளும் பிரஜைகள் முன்னணியின் தலைவர், செயலாளர் மற்றும் அரசியல் குழு, மத்தியக்குழு அங்கத்தவர்கள் யார்? உமது கட்சியின் தலைமை அலுவலகம் எங்கே உள்ளது? உமது கட்சியின் ஸ்தாபகர் யார்? நீங்கள் எப்போது உமது கட்சியின் அங்கத்தவத்தை பெற்றீர்? நுவரெலிய மாவட்ட எம்பியான உமக்கு நுவரெலிய மாவட்டத்தில் அலுவலகங்கள் இருக்கின்றனவா? இருப்பின் அவற்றின் விலாசங்கள் என்ன? உமது கட்சிக்கு தொழிற்சங்க பிரிவு இருக்கின்றதா? இருப்பின் மலையகத்தில் இருக்கின்ற தொழிற்சங்க கிளை அலுவலகங்களின் விலாசங்கள் என்ன?
கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், இதொகா, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி மற்றும் எமது கட்சி ஆகிய தமிழ்பேசும் மக்களின் அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தி, சிதறடிக்க வேண்டுமென உமக்கு எவராவது அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்களா? கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில்,
நுவரெலிய மாவட்ட எம்பியான உமது கட்சி ஏன் நுவரெலிய மாவட்டத்தில் போட்டியிடவில்லை? உமது கட்சி எந்த அடிப்படையில் வட மாகாண உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்டது? வடக்கில் உமது கட்சி போட்டியிட்ட குறிப்பிட்ட பிரதேச சபை தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏன் போட்டியிடவில்லை? வடக்கில் உமது கட்சி பெற்ற ஒட்டு மொத்த வாக்கு தொகை என்ன? 18ம் திருத்தத்திற்கு நீங்கள் ஆதரவாகவா அல்லது எதிர்த்தா வாக்களித்தீர்? 2010ம் வருடம் சித்திரை மாதம் தெரிவு செய்யப்பட்ட இந்த பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி, எதிர்கட்சி ஆகியவை தொடர்பில் இதுவரையில் எந்தெந்த சட்டமூலங்களுக்கு எவ்விதமாக வாக்களித்துள்ளீர்?
நீங்கள் அரசாங்க தூதுக்குழுவில், எத்தனைமுறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளீர்? இலங்கையில் போர் முடிந்தவுடன் ஐநா செயலாளர் நாயகத்தை சந்திப்பதற்கு முதன் முறையாக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி தூதுக்குழுவில் நீங்கள் எந்த அடிப்படையில் இடம் பெற்றீர்? நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையிலான, 'தாருன்யட ஹெட' என்ற அமைப்பில் நீங்கள் வகிக்கும் பதவி என்ன?
நீங்கள் தற்சமயம் சொந்த வீட்டிலா அல்லது வாடகை வீட்டிலா வசிக்கிறீர்கள்? நீங்கள் பயன்படுத்தும் ஜீப் வாகனம் அரசாங்க அமைச்சு ஒன்றின் பெயரில் பதிவு செய்யப்பட்டதா? 2011ம் வருடம் மார்ச் மாதம் 30ம் திகதி மாலை 4.30 மணிக்கு வவுனியா செட்டிக்குளத்தில் இடம்பெற்ற உமது வாகன விபத்தில் பலியான 36759 என்ற இலக்கம் கொண்ட ஜெயமினி உதய புஷ்பகுமார என்ற பொலிஸ் சார்ஜன்டின் மரணம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டதா?
நான் கேக்க இருந்தத நீங்க கேட்டுடீங்க. நீங்களே சொல்லுங்க ஸ்ரீ ரங்கா செய்வது சரியா தவறா ?
ReplyDelete