தமிழை தாய் மொழியாக மனதார ஏற்றுக்கொண்டு வீட்டிலும் வெளியிலும் தமிழை
வாய்மொழியாக பேசும் அனைவரும் தமிழரே. வீட்டில் வேறு மொழியும் வெளியில்
தமிழ் மொழியும் பேசி இரட்டை வேடம் போடும் அனைவரும் மாற்றாரே.
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே.
நான் தமிழர் நீங்கள் யார் ? அப்படியானால் எதற்கு தமிழ்த் தேசியம்
பேசுகிறீர்கள் (தமிழ் மொழியும் தமிழ் நிலமும்தான் தமிழ்த் தேசியம்) ? நான்
தமிழனுடந்தான் தமிழில் பேசச்ச்சொன்னேன் அது தப்பு எனில் அதை மீண்டும்
மீண்டும் செய்வேன் எனில் நான் தமிழன் இதை யாருக்காகவும் விட்டுக் கொடேன்.
தமிழனுக்கு தமிழ் என்ற உணர்வு முக்கியம். தமிழ் தெரிந்திருந்தும் தெரியாதது
போல் ஆங்கில மொழியில் பேசுகிறார்கள். ஏன் தமிழ் என்றால் கசக்கிறதோ?
நம்முடைய தமிழை வளர்க்க நாம்தான் போராட வேண்டும். எங்கேயும் எந்த
இடத்திலும் நம் மொழி தமிழ்மொழி என்று பெருமையோடு நிமிர்ந்து நிற்க
வேண்டும்.
தமிழர்கள் அனைவரும் தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வருகிறார்கள். ஆனால்
தமிழ்மொழி மட்டும் தலைமுறை தலைமுறையாக அழிந்து வருகிறது. இது நம்மவர்களிடம்
உள்ள தாழ்வு மனப்பான்மையே.
தமிழைக் கற்றுக் கொடுங்கள்; வீட்டில் தமிழில் பேசுங்கள்; தமிழ் நாளிதழ்களை
வாங்கிப் படியுங்கள். நம் மொழியை நாம் தான் வளர்க்க வேண்டும் என்றெல்லாம்
தமிழர்களுக்கே சொல்ல வேண்டிய நிலைமை வந்து விட்டது.
தமிழ் மொழி தெரியாதவர்களிடம் வேற்று மோழியில் பேசலாம். தெரிந்தவரிடம்
எதற்கு வேற்று மொழி? 'ஆங்கிலம்', ஆங்கிலம் என்றால் என்ன? அவர்களிடம்தானே
முன்பு நாம் அடிமையாக இருந்தோம். தமிழன் தன்னுடைய தாய் மொழியை வைத்துக்
கொண்டு மற்றவர்களுடைய மொழியை கடன் வாங்கி பேசுகிறார்கள். எதற்கு கடன் வாங்க
வேண்டும்? தேவையில்லையே. நமக்குத் தான் நம் மொழிதமிழ்மொழி இருக்கின்றதே.
மற்றவர்கள் தத்தம் மொழியை விட்டுவிட்டு நம் மொழியான தமிழ் மொழியில்
பேசவில்லை. அவர்கள் அவரவர் சொந்த மொழியில்தானே பேசுகிறார்கள். நமது உரிமையை
நாமே விட்டுக் கொடுத்தாற்போல் ஆகின்றதல்லவா. தமிழ் மொழி வளர தமிழர்களிடம்
தமிழ் பேசுங்கள்.
தமிழனாக பிறந்து நமக்கே உரிய தமிழ் மொழியின் அருமை பெருமைகளை அறிய முற்பட
வேண்டும். கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி வழி வந்த
நாம் தீந்தமிழை கற்றுக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று சும்மாவா சொன்னார்கள்.
தமிழர்கள், தான் ஒரு தமிழன், என் தாய் மொழி தமிழ் என்று சொல்லிப்
பெருமையடைய வேண்டும்.தமிழ் மொழி உயர வேண்டும். தமிழ் மொழியும் தமிழ்
பண்பாடும் வளர வேண்டும். தமிழர்கள் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும்
என்கிற எண்ணத்தில்தான், நமது முன்னோர்கள் அப்படிச் சொன்னார்கள்.
நம்முடைய மொழியை அடிப்படையிலிருந்து கற்றுக் கொண்டால்தான் அதன் முழு
நன்மைகளும் கிடைக்கப் பெறலாம்.தமிழில் கணக்கிட முடியாத அளவிற்கு புறநானுறு,
பத்துப்பாட்டு, பழமொழி, திருக்குறள், ஆத்திசூடி, என்று இன்னும் அறிவுக்கு
உகந்த புத்தகங்களும், நாவல்களும் தமிழில் இருக்கிறது.
ஒவ்வொன்றும் படிப்பதற்கும், கேட்பதற்கும் மிகவும் இதமாகவும் தேன்போல்
தித்திக்கும். ஆனால் தமிழை வெறுப்பவர் நம்மிடையே இருக்கத்தான்
செய்கிறார்கள். தமிழ் மொழி நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கு அவசியமாகிறது.
ஆனால் பலபேர் இதை அறியாமல் ஏன் வெறுக்கிறார்கள் என்று புரியவில்லை?
இந்த பூமியில் உள்ள எல்லா மரங்களையும் எழுது கோலாகவும், நம்மை சுற்றியுள்ள
ஏழு கடலை மையாகவும் கொண்டு எழுதினாலும் நம்முடைய தாய் மொழியான தமிழ்
மொழியின் சிறப்பை எழுதி முடிக்க இயலாது.
இப்படி உலகில் பல மூலை முடுக்குகளில் உள்ள அனைவரின் மனதிலும் பசுமரத்தாணிப்
போல் பதிந்துள்ள தமிழை அழிக்கவும், மட்டம் தட்டிக் கவிழ்க்க நினைப்பதும்
தகுமோ?
தமிழ் என்றும் நமது வலதுகையைப் போல் பலம் கொண்டது. அந்த பலத்தை நாம்
இழக்கத்தான் வேண்டுமா? தன்னுடைய தாய்மொழியான தமிழை வெறுப்பவன், அவன் தன்
உயிரையே வெறுப்பதற்குச்சமமானவன்.
அவரவர் சொந்த வேலையை கவனிக்கின்ற இந்த நேரத்தில் நான் மட்டும் ஏன்
தமிழைப்பற்றி பொரிந்து தள்ளுகிறேன் என்று நீங்கள் நினைக்கக் கூடும். நானும்
உங்களுக்கு துணைப் போகலாம். ஆனால் தமிழ் பற்றுத்தான் என்னை விடமாட்டேன்
என்கிறது.ஒவ்வொரு முறையும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க
வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.
நம் மொழியின் எதிர்காலம் நம் கையில்தான் இருக்கிறது. தமிழர்களால் தான்
தமிழ் மொழியை கட்டிக் காக்க முடியும்.ஒரு சிலர் தனக்கு வயதாகி விட்டாலும்,
நான் கிழவன் இல்லை, எனக்கு இன்னும் வயதாகவில்லை என்று மிகவும் கட்டோடு
இருப்பார்கள். அதேப்போல் தான் தமிழ் கற்கும்போது மனதில் தமிழ்ப்பற்று என்று
ஒன்று இருந்தால் போதும், தமிழ் மட்டும் அல்ல தமிழ் புலவனாகவும் மாறலாம்,
மூதறிவுள்ளது வாழ்வு நல்ல முத்தமிழ்க் கற்பது வாழ்வு, என்று தமிழ் கவிஞரான
பாரதிதாசன் கூறியுள்ளார்.
இதுபோன்ற தமிழ் எழுத்தாளர், தமிழ் கவிஞர் என்று பலப்பேர் இருந்தார்கள்.
இப்பொழுதும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தமிழ் கற்று அதற்கு
பெருமையைச் சேர்த்து, தமிழை வாழ வைத்தனர். வாழவைக்கின்றனர். இன்றுவரை
அவர்களுடைய பெயரும் புகழும் அழியா சின்னமாக இருக்கிறது. அவர்களும்தான்
தமிழ் மொழியை கற்று வாழ்க்கையில் முன்னேறி யிருக்கிறார்கள்.
அந்த காலத்தில் எந்தவொரு கல்வி சாதனங்களுமின்றி படித்து வாழ்க்கையின்
அர்த்தமே தமிழில்தான் இருக்கிறது என்று புரிந்துக் கொண்டனர். அன்று அவர்கள்
யாரும், நான் தமிழ் கற்றால், வாழ்க்கையில் முன்னேற மாட்டோம் என்று
கருதவில்லையே!
ஆனால் இக்காலத்தில் இவர்களுக்கு எதிர்மறையாக சில தரப்பினர்கள் கருதுவதால்,
பல தரப்பினர்களை நம்பிக்கை இழக்க செய்கிறது. இதனால் தமிழ் கற்க
விரும்புவோரும் கற்க மாட்டார்கள். இந்த செயல் தமிழுக்கு ஒரு பெரிய இழப்பை
ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதனால் தமிழ் மொழி கற்க விருப்பம் இருந்தால் கற்று
வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்ய வேண்டும். அதைத் தவிர்த்து சாகடிக்க
நினைப்பது கொடுமையாகும். அது தமிழை நேசிப்பவர்கள் இருக்கும் வரை நடக்காது.
ஒருமொழித் தெரியாத ஊருக்கு போகிறோம். அங்கே நாம் பேசும் மொழி அவர்களுக்கு
புரியவில்லை. அவர் பேசும் மொழி நமக்கு புரியவில்லை. அந்த நேரத்தில் தம்
மொழித் தெரிந்த ஒரு தமிழர் இருப்பாரா என்று தேடுவோம். ஆனால் அதே
சூழ்லையில், நமக்கு வேற்றுமொழி தெரிந்து விட்டால் தமிழனை பார்த்தும்
பார்க்காததுப் போல் வேற்று மொழிக்காரரிடம் சென்று பேசுவது கண்கூடு.
அது ஏன்? தமிழ் என்பது நம்மில் உள்ள உயிருக்கு ஈடாகும். அதை வெறுத்தால்
நாம் எப்படி உயிர் வாழ்வது. தாய்மொழி, என்னுடைய உயிர் என்று எண்ணுபவன்
என்றும் தமிழை வெறுக்கமாட்டான். தமிழை புறக்கணிக்கும் கூட்டத்திற்கு
சாவுமணி அடிக்க வேண்டும்.
இப்பொழுதெல்லாம் தமிழ் கற்பதற்கு சிரமமில்லை. காரணம் கணினியின் வாயிலாகவும்
தமிழ் கற்கும் வாய்ப்பை அறிவியல் நமக்குக் கொடுத்திருக்கின்றது.
சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் !
எம் சாம்பலும் தமிழ் மகிழ்ந்து வேக வேண்டும் !
தமிழ்ச் செல்வன் . யாழ்ப்பாணம்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !