Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய் அல்லது புனர்வாழ்வு அளித்து விடுதலை செய் : மனோ கணேசன்

பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய் அல்லது புனர்வாழ்வு அளித்து விடுதலை செய் : மனோ கணேசன்

Written By sakara on Tuesday, May 29, 2012 | 2:33:00 PM


  நீண்ட காலமாக சிறை வாழ்க்கை வாழ்கின்ற கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி உடன் விடுதலை செய்யுங்கள். ஏனையவர்களை உடனடியாக புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றி, புனர்வாழ்வு பயிற்சிகள் அளித்து, அவர்களை அவர்களது குடும்பத்தவர்களிடம் ஒப்படையுங்கள். விசேட நீதிமன்றம் என்ற பழைய பல்லவியை பாடி காலத்தை இழுத்து அரசியல் செய்யாதீர்கள் என கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு எதிரில் இன்று நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் பெருந்தொகையில் கலந்துகொண்டு, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு எதிரில் இன்று நண்பகல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

ஏன் இந்த பாரபட்சம்? ஏன் இந்த இரட்டை கொள்கை? 
பொது மன்னிப்பு இன்று தேர்ந்து எடுக்கப்பட்ட சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. புலிகளின் முன்னாள் முக்கியஸ்த்தர்களான கருணா அம்மான் என்ற முரளீதரன், பிள்ளையான் என்ற சந்திரகாந்தன், கேபி என்ற கே. பத்மநாதன் மற்றும் தயா மாஸ்டர் ஆகிய சிலருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் ஆட்சேபிக்கவில்லை. நாட்டின் நல்வாழ்வுக்கு அவை அவசியம் என்றால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதில் எந்த பிரச்சினை கிடையாது.

ஆனால் ஏன் இந்த பாரபட்சம் ? ஏனைய தமிழ் கைதிகள் தொடர்பில் அரசுக்கு ஏன் இந்த இரட்டை கொள்கை? தங்கள் கட்சியுடன் இணைந்து கொண்டால் தேசியவாதி என்றும், இணையாவிட்டால் பயங்கரவாதி என்றும் அரசாங்கம் கணக்கு போடுவதை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இன்றைய அமைச்சர்களான இந்த முன்னாள் புலித்தலைவர்களுக்கு அன்று தண்ணீர் கொடுத்தவர்களும், சாப்பாடு கொடுத்தவர்களும், இருக்க இடம் கொடுத்தவர்களும், அவர்களது ஆணைகளை ஏற்று செயல்பட்டவர்களும் நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ளதை உலகம் ஏற்றுக்கொள்ளாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேபோல் இவர்களது விடுதலை தொடர்பில் தமக்கு உள்ள தார்மீக பொறுப்பை அரசாங்கத்தில் இன்று இடம்பெற்றுள்ள, இந்த முன்னாள் புலித்தலைவர்களும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

அரசியல் கைதிகள்தான் 
கொழும்பு, களுத்துறை, வவுனியா, யாழ்ப்பாணம், கண்டி, நீர்கொழும்பு, அனுராதபுரம், பூசா ஆகிய சிறைக்கூடங்களில் மலையகம், வடக்கு, கிழக்கு, கொழும்பு ஆகிய அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த தமிழ் கைதிகள் இருக்கின்றார்கள். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்த தமிழ் கைதிகள் அனைவரும் அரசியல் கைதிகள்தான். அரசியல் இலட்சியத்திற்காகவே சட்ட மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு இவர்கள் உள்ளாகியுள்ளார்கள்.

அரசாங்கம் இதே குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி ஆனால் தங்கள் கட்சியில் இணைந்து கொண்ட பலரை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக அவர்களை விடுதலை செய்ததுபோல், அரசியல் காரணங்களுக்காக இவர்களை விடுதலை செய்யாமல் அரசாங்கம் வைத்திருக்கின்றது. இதுதான் உண்மை. எனவே சிறை வைக்கப்பட்டுள்ள இவர்கள் அரசியல்கைதிகளே. இதில் சந்தேகம் அல்லது மாறுபட்ட கருத்து எவருக்கும் இருக்க முடியாது.

இதுபற்றி விளக்கம் இல்லாதவர்கள், இந்த அரசில் இருக்கின்ற முன்னாள் புலி தலைவர்களிடம் இதுபற்றி கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அரசில் இருப்பதன் காரணமாகத்தான் தாம் விடுதலை செய்யப்பட்டுள்ளோம் என்ற உண்மையை அரசில் இருக்கின்ற இந்த முன்னாள் புலித்தலைவர்கள் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவேண்டும். அதேபோல் தாங்கள் சொல்லித்தான் இந்த கைதிகள் இப்படி நடந்துகொண்டார்கள் என்ற உண்மையை தமது அரசாங்கத்தலைவர்களுக்கு அவர்கள் எடுத்து கூற வேண்டும் என கூறிவைக்க விரும்புகிறேன்.

விசேட நீதிமன்ற உறுதிமொழி, பலதடவை வழங்கப்பட்ட காலத்தை கடத்தும் பழைய பல்லவி 
அரசாங்கம் இன்று விசேட நீதிமன்றங்களை நிறுவி வழக்குகளை விசாரிக்கப்போவதாக சொல்லுகிறது. இந்த விசேட நீதிமன்ற வாக்குறுதிகளை, இந்த அரசாங்கம் எனக்கு தெரிய இதற்கு முன்னர் இரண்டு தடவை வழங்கியுள்ளது. இது மூன்றாம் முறை. இதற்கு முன்னர் நீங்கள் நிறுவிய விசேட நீதிமன்றங்கள் எங்கே என நாம் கேட்கிறோம். அவற்றை என்ன சுனாமி கொண்டு போய் விட்டதா? எங்களை பொறுத்தவரையில் விசேட நீதிமன்ற தீர்வுக்கதை ஆறிப்போன பழங்கஞ்சி. மீண்டும், மீண்டும் சொல்லி காலத்தை கடத்தும் பழைய பல்லவி. இதற்கு துணை போக நாம் இனிமேலும் தயார் இல்லை.

பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய் அல்லது புனர்வாழ்வு அளித்து விடுதலை செய் 
எமது கோரிக்கை தெளிவானது. நீண்ட காலமாக சிறை வாழ்க்கை வாழ்கின்ற கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி உடன் விடுதலை செய்யுங்கள். ஏனையவர்களை உடனடியாக புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றி, புனர்வாழ்வு பயிற்சிகள் அளித்து, அவர்களை அவர்களது குடும்பத்தவர்களிடம் ஒப்படையுங்கள். இதை தவிர வேறு தீர்வுகளை சொல்லி காலம் கடத்தாதீர்கள். உங்களது பம்மாத்து தீர்வு திட்டங்களை கேட்டு காது புளித்து போய் விட்டது. மனதும் சலித்து போய் விட்டது.

சட்டத்தில் இடம் இல்லாவிட்டால் புது சட்ட திருத்தம் கொண்டு வாருங்கள் 
குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டுள்ள அல்லது தீர்ப்பு வழங்கப்பட்டு மேன் முறையீடு செய்யப்பட்டுள்ள கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடம் இல்லை என அரசாங்கம் அப்பாவித்தனமாக சொல்வதை அப்பாவித்தனமாக கேட்டுக்கொண்டு தலையை ஆட்ட எமக்கு முடியாது. சட்டம் இல்லை என்றால் புதிய சட்ட திருத்தங்களை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுங்கள். அனைத்து எதிர்கட்சிகளின் ஆதரவையும் நாம் பெற்று தருகின்றோம். காலையில் சமர்பித்து, பகல் விவாதம் செய்து, மாலையில் வாக்கெடுப்பு நடத்தி, ஒரே நாளிலேயே நாட்டின் அரசியலமைப்பிலேயே திருத்தம் கொண்டு வந்து, சாதனை செய்தது இந்த அரசாங்கம்தான். அது இவர்களுக்கு மறந்து விட்டதா? அல்லது அரசாங்கத்தின் நீதி அமைச்சருக்கும், அரசில் இடம்பெறும் தமிழ் பேசும் அரசியல்வாதிகளுக்கும் மறந்துவிட்டதா? சட்டம் இல்லாவிட்டால் புது சட்டம் கொண்டு வாருங்கள். எதிர்கட்சிகளின் ஆதரவையும் நாம் வாங்கி தருகிறோம்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி, ஜேவிபி, ஜனநாயக தேசிய கூட்டணி, முன்னிலை சோஷலிச கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் கைதிகளின் விடுதலை தொடர்பான புதிய சட்ட திருத்தங்களுக்கு ஆதரவு வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. அரசாங்கத்தில்தான் கோளாறு இருக்கின்றது. அரசாங்கத்தில் இடம்பெறும் ஈபிடிபி, இதொகா, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தும் கட்சிகள் இந்த விடயத்தில் அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும்.

ஆகவே சட்டத்தில் இடம் இல்லை என்று சொல்லி காலத்தை கடத்தி கைதிகளின் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள்.

சிறையில் இருக்கும் இவர்கள் இலங்கை பிரஜைகள் இல்லையா? இவர்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க உரிமை இல்லையா? யுத்தத்தை முடித்து வைத்து நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித்தந்து விட்டோம் என இந்த அரசாங்கம் திரும்ப, திரும்ப சொல்லி கொண்டு இருக்கிறது. ஆஹா, எங்கே அந்த சுதந்திரம் என தமிழர்களாகிய நாங்கள் நாடு முழுக்க பூதக்கண்ணாடியை வைத்துகொண்டு தேடுகிறோம். எங்கே தேடியும் அது இன்னமும் தென்படவில்லை.

உண்மையில் அரசாங்கத்தின் ஊழல், மோசடி ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை சமாளிக்க இந்த அரசாங்கத்திடம் உள்ள ஒரே மந்திரம் இதுதான். அரசாங்கம் சொல்வதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும்கூட, ஏன் அந்த சுதந்திரம், இந்த வெலிக்கடை சிறையின் மதில் சுவர்களுக்கு அப்பால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு இல்லையா? இலங்கை பிரஜைகளான அவர்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க உரிமை இல்லையா? அவர்களது இளமை காலம் முழுக்க சிறைகூடங்களிலேயே வீணாக வேண்டுமா? அங்கே பெண்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறைகூடங்களின் உள்ளேயே பிறந்த குழந்தைகளும் இருக்கிறார்கள். மத தலைவர்களும், வயோதிபர்களும், அங்கவீனர்களும் இருக்கிறார்கள். இவர்களை உள்ளே அடைத்து வைத்து விட்டு, வெளியே நீங்கள் வெற்றி விழா நடத்துகிறீர்கள். இதற்கெல்லாம் நீங்கள் ஒருநாள் இயற்கை நீதிதேவனுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதை மறவாதீர்கள். 
_
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya