Headlines News :
Text:
      Options:

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

Texte alternatif

FACE BOOK இல் இணைந்தவர்கள்

Home » » 1956 சிங்கள மொழிச் சட்டம் நாட்டுக்குச் செய்த பெரும் அநீதி

1956 சிங்கள மொழிச் சட்டம் நாட்டுக்குச் செய்த பெரும் அநீதி

Written By sakara on Wednesday, March 28, 2012 | 9:54:00 PM


  இலங்கையில் 1956 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிச் சிங்கள மொழிச்சட்டத்தால் நாடு பாரிய பின்னடைவைச் சந்தித்தது. இது தமிழருக்கு மட்டுமல்ல நாட்டுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி. இதனால் ஆங்கில மொழியை இழந்தோம். சமூக நல்லிணக்கத்தை இழந்தோம். நிம்மதியை இழந்தோம்.

இவ்வாறு களனிப் பல்கலைக்கழக தத்துவவியல் சிரேஷ்ட பேராசிரியர் தயா எதிரிசிங்க முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி கொழும்பில் நடத்திய சமயங்களுக்கிடையிலான நல்லிணக்க செயலமர்வில் பேசுகையில் குறிப்பிட்டார்.

மேற்படி செயலமர்வு முன்னிணியின் தலைவி தேசபந்து ஜெஸீமா இஸ்மாயில் தலைமையில் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் லைலா உடையார் நெறிப்படுத்தலில் இரு தினங்கள் நடைபெற்றது.

செயலமர்வில் பௌத்தம் சார்பாக பேராசிரியர் தயா எதிரிசிங்க இந்து சமயம் சார்பாக வே.உமையாள், இஸ்லாம் சார்பாக ரவுஸ்ஸின், கத்தோலிக்க சமயம் சார்பாக கனிஸ்ரா ஆகியோர் உரையாற்றினர்.

அங்கு பேராசிரியர் தயா எதிரிசிங்க பேசுகையில், இலங்கையில் 30 வருட கால போர் நிகழ்ந்து அமைதியை சமாதானத்தை இழந்து நிற்கிறது. அப்போர் சடுதியாக இடம்பெறவில்லை. போர் நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் கூற முடியும். ஆனால் போரால் முழு இலங்கையும் முழு சமூகமும் பாதிக்கப்பட்டதென்பது உண்மை.

அது கடந்தது கடந்து விட்டது. இன்று நாம் அதற்கு என்ன செய்யலாம்? என்பது பற்றி ஆராய வேண்டும் . போருக்கான ஒரு காரணம் மொழி உரிமை மறுக்கப்பட்டதாகும். எனவே மொழி பற்றிய முரண்பாட்டிற்குத் தீர்வு காண வேண்டும்.

தனிச் சிங்களச் சட்டம்

ஆங்கிலேய மொழி அவர்களது ஆதிக்கத்திலிருந்து சுதேசத்தை மீட்டெடுக்க எண்ணி 1956 இல் ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் நாட்டிற்கு பாரிய பாதிப்பை உண்டு பண்ணியதை மறக்க முடியாது.

இச் சட்டம் சிறுபான்மைத் தமிழ் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதி என்பதற்கப்பால் நாடு ஆங்கிலத்தை இழந்தது. சகலரும் சிங்கள மொழியைப் பயிலக் கட்டாயப்படுத்தப்பட்ட காரணத்தினால் உயர் கல்வி பெறக் காரணமான ஆங்கிலக் கல்வி மெது மெதுவாக நாட்டை விட்டு ஒதுங்கிக் கொண்டது.

1963 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் இறுதி ஆங்கில மொழி மூல பாடநெறி இருந்தது. அதன் பிறகு சகல நெறிகளும் சிங்கள தமிழ் மொழி மூலங்களிலேயே இருந்தன. அதனால் அதன் பிறகு உயர் கல்வியை ஆங்கிலத்தில் தொடர முடியாத துர்ப்பாக்கிய நிலை நிலவியது. இது துன்பமான நிகழ்வு. இது பாரிய இழப்பை ஏற்படுத்தியது.

எமது நாட்டுக்கு அருகிலுள்ள இந்தியாவில் பல்வேறு இனங்கள் பல்வேறு மொழிகளைப் பேசுகின்றன. ஆனால் அமெரிக்காவைப் போல் தொழில் நுட்பத்தில் முன்னணியில் நிற்கின்றன. அதற்கு அடிப்படைக் காரணம் அங்கு அவர்கள் ஆங்கிலத்தை உபயோகிக்கின்றமை.

அமெரிக்காவுக்கே தொழில் நுட்ப வல்லுனர்கள் ஏற்றுமதி செய்கின்ற வல்லமை இந்தியாவுக்குரியது. அந்தளவுக்கு அவர்கள் ஆங்கில மொழியில் தொழில் நுட்பத்தை வளர்த்திருக்கின்றனர்.

இந்தியா எம்மை விட வறுமையானது தான். வறுமை என்பது அங்கு சனத்தொகை கூடியதனால் மட்டும் தவிர அறிவியல் வறுமை அல்ல. ஆனால் எம்மைப் பொறுத்த மட்டில் சனத்தொகையும் இல்லை. அறிவியலும் இல்லை. அதற்குக் காரணம் 1956 ஆம் ஆண்டு சட்டமே.

யாழ் ஆங்கில நிலை

அன்று யாழ்ப்பாணத்தில் ஆங்கில மொழித் தேர்ச்சி பெற்றோர் ஏராளம். தமிழ் மக்கள் பொதுவாக ஆங்கிலத்தில் வல்லமை உடையவர்கள். மிஷனரிப் பாடசாலைகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டமையால் ஆங்கில அறிவுக்கு அங்கு பஞ்சமிருக்கவில்லை.

ஆனால் இன்று யாழ். நிலைமை ஆங்கிலத்தில் கவலைக்குரியது. யுத்தம் காரணமாக இளம் சந்ததி ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறத் தவறிவிட்டது. அங்கு சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஆங்கிலம் தெரியுமளவிற்கு இளம் சந்ததிக்குத் தெரியவில்லை. இன்று அனைவரும் ஆங்கில மொழிக் கல்வியை ஆர்வத்துடன் மீண்டும் கற்க ஆரம்பித்துள்ளனர். நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஆங்கில மொழி மூலம் பாடசாலைகள் இயங்குகின்றன.

பலர் கொழும்புக்கு கடன் பட்டு வந்து பிள்ளைகளை ஆங்கில மொழி மூலத்தில் கல்வி கற்க வைப்பதைக் காண முடிகிறது. ஆஙகில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜனாதிபதி மும்மொழிக் கல்வியை போதனையை வலியுறுத்தியுள்ளார். நாட்டில் பல பாடசாலைகளில் இருமொழிப் போதனை நடைபெற்று வருகின்றது. அந்தளவிற்கு இப்போது ஆங்கிலத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டது.

பௌத்தம்

நேபாளத்தில் பிறந்த கௌதம புத்தர் 35 வயதில் பரி நிர்வாணமடைந்தார். அவரது போதனைகள் இன்று உலகின் பல்வேறு நாடுகளில் வியாபித்து நிற்கிறது. தேரவாதம்,மகாயாணம் என இருபிரிவுகள் உண்டு.

பிந்திய மகாயாண வாதம் இந்து மதத்தோடு தொடர்புடையது. திரிபீடகத்தை வலகம்பாகு மன்னன் பாணியில் மொழி பெயர்க்க வழி சமைத்தான்.

பிறப்பால் அனைவரும் சமமான மனிதர்களே. அங்கு சாதி முறைமை இல்லை. 2500 ஆம் ஆண்டுகளின் முன்பே பெண் உரிமைகள் பௌத்தத்தில் கூறப்பட்டுள்ளது. பெண் இல்லாமல் சமூகம் வாழாது. எனவே உரியவர்களுக்கு அதை வழங்க வேண்டும் என்றார். 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Get our toolbar!

உன்னால் முடியும் தோழா

இணைந்தவர்கள்

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. Sakaram News சாகரம் செய்திகள் - All Rights Reserved
Original Design by Creating Website Modified by Adiknya