மணிமேகலை காவியத்திலும் இப்பாண்டிகைபற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
அன்புதான் உலக ஜோதி, அன்பு தான் இன்ப ஊற்று, அன்புதான் உலக மகா சக்தி என்று மக்களுக்குப் போதித்து வந்தவர் சித்தார்த்தன் எனும் பெயர் கொண்ட புத்த பெருமான்.
அப்பெருமானின் பொன்மொழிகளே போதும், பேரினவாதத்தை ஒழித்து, ஒரு வீடும் சமூகமும் நாடும் ஏன், உலகமும் சுபீட்சம் பெற. இதோ அவரது பொன்மொழிகள் சில :
* தியானத்தின் மூலம் ஞானம் கிடைக்கிறது. தியானத்தின் குறைவால் ஞானம் குன்றிவிடுகிறது. திருப்திதான் பெருஞ்செல்வம்.
* தீமை புரிபவன் இந்த உலகில் துன்புறுகிறான். மறுமையிலும் துன்புறுகிறான். இரண்டிலும் அவனுக்குத் துன்பமே. தான் செய்த தீமையைப் பற்றி நினைக்கும்போது அவன் துன்புறுகிறான். தீய பாதையில் செல்லும்போது இன்னும் அதிகமாய்த் துன்புறுகிறான்.
* காஷாய ஆடைகளால் தோள்களை மூடிக் கொண்டிருப்பவர்களிலும் கூட பலர் தன்னடக்கமின்றி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள். அத்தகைய தீமை புரிபவர்கள் தங்கள் தீச்செயல்களாலேயே நரகத்தை அடைகிறார்கள்.
* குற்றமற்றவர்களைத் தண்டித்துத் தீங்கு செய்கிறவன், கூர்மையான வேதனை, வியாதி, உடற்குலைவு, பெரும் விபத்து, சித்தப்பிரமை, அரசு தண்டனை, பயங்கரமான குற்றச்சாட்டு, உறவினர்களை இழத்தல், அனைத்து செல்வம் இழப்பு, நெருப்பாலோ, இடியாலோ அவன் வீடு எரிந்துபோதல் ஆகிய துன்பங்களில் ஒன்றை உறுதியாகக் காண்பான். மரணத்தின்போதும் அந்த வறட்டு மூடன் துக்கத்தில்தான் மறுஜனனம் காண்கிறான்.
* கருத்துடைமையில் களிப்புறு; உன் எண்ணங்களைக் கட்டிக் காத்துக்கொள்; சோர்வுறாதே. சேற்றில் விழுந்த யானையைத் தூக்கி விடுவதுபோல் உன்னைத் தீயவழியிலிருந்து மீட்டுக்கொள்.
* வெளிப்புறத்தைக் கழுவியது போதும்! உட்புறத்தைக் கழுவுவதே எனக்குத் தேவை.
* நம்பிக்கை, ஒழுக்கம், வீரியம், சித்தம், நடுவுடைமை, தர்மத்தை ஆராய்ந்து தெளிதல், அறிவு, நற்பயிற்சிகள், சிந்தனை ஒருமிப்பு – இவற்றில் பரிபூரண நிறைவு பெற்றால், துன்பங்களை விரட்டி விடலாம்.
* * * போதி மாதவன்!
புத்தரின் கடைசிக் காலம். இது தெரிந்த உடன் புத்தருடைய அன்புச் சீடனான ஆனந்தன் அழுதான். கெளதம புத்தர்,
"ஏன் அழுகிறாய்? எனக்கு மரணமில்லை. நான்தான் மறுபடியும் பிறப்பேன் என்று உனக்குச் சொல்லியிருக்கிறேனே?"
"சுவாமி நீங்கள் பிறப்பீர்கள். ஆனால் எங்கே, எப்படிப் பிறப்பீர்கள்? நான் எப்படி உங்களை அடையாளம் கண்டுபிடிப்பேன்?" என்று ஆனந்தன் கேட்டான்.
புத்தர் புன்னகை செய்தபடி,
"ஆனந்தா! என்னை அடையாளம் கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். அன்புடைய எல்லோரும் புத்தன்தானே...?'' என்று கேட்டார்.
புத்தரைப் பல சித்திகள் தெரிந்த சித்தர் ஒருவர் சந்தித்தார். புத்தரிடம் உயிருள்ள சிப்பி ஒன்றைக் கொடுத்த அந்த சித்தர்,
"இந்த சிப்பிக்குள் விலை உயர்ந்த முத்து உள்ளது. சிப்பியை உடைத்து முத்தை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
அதற்கு புத்தர்,
"முத்து எவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கட்டுமே! ஓர் உயிரைக் கொல்வது என்பது என்னால் முடியாது! சிப்பியை நீயே எடுத்துச் செல்" என்று சொல்லிவிட்டார்.



0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !