![]() |
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சமர்செட் அணிக்கெதிரான 2 நாள் ஆட்டத்தில் பங்கேற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சமர்செட் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்கள் எடுத்தது. சமர்செட் அணி துடுப்பெடுத்தாடிய போது 46வது ஓவரில் ஜம்மால் உசேனுக்கு தென்னாபிரிக்க வீரர் இம்ரான்தாகீர் பந்துவீசினார்.
அந்த பந்தில் உசேன் ஆட்டமிழந்தார். அப்போது பெய்ல்ஸ் எதிர்பாராத விதமாக விக்கெட் கீப்பர் பவுச்சரின் கண்ணை தாக்கியதில் கண்ணிலிருந்து ரத்தம் வழிந்தது.
உடனடியாக களத்திலிருந்து பவுச்சர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆய்வு செய்த போது கண்ணின் வெள்ளை பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். எனவே அவருக்கு பதிலாக டிவிலியர்ஸ் விக்கெட் கீப்பர் பொறுப்பை ஏற்றார்.
மேலும், கடுமையாக அடிபட்டிருப்பதால் 150வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஆர்வத்துடன் இருந்த பவுச்சர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக பவுச்சர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சோகத்தோடும், வலியோடும் ஓய்வு முடிவை அறிவிக்கிறேன். எனது கண்ணில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக இனிமேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இங்கிலாந்து தொடருக்கு நான் தயாரானதைப் போன்று வேறு எந்தத் தொடருக்கும் தயாரானதில்லை. இங்கிலாந்துத் தொடரில் நான் ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கவில்லை. ஆனாலும் சூழ்நிலை என்னை ஓய்வுக்கு தள்ளிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவின் முன்னணி விக்கெட் காப்பாளராக திகழ்ந்த பவுச்சர், 14 ஆண்டுகள் விளையாடியுள்ளார். பல்வேறு போட்டிகளில் விக்கெட் காப்பாளராக மட்டுமல்ல, துடுப்பாட்டத்திலும் அதிரடியாக விளையாடி அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்தவர். 147 டெஸ்ட் போட்டிகளில் 555 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். 5,515 ஓட்டங்கள் குவித்துள்ளார். 295 ஒரு நாள் போட்டிகளில் 425 பேரை ஆட்டமிழக்கச் செய்ததோடு, 4686 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !