
ஊடக ஒழுக்கக்கோவையினைப் பாதுகாத்து, செய்தி இணையத்தளங்களினூடாக வெளியிடப்படும் ஆபாசம் மற்றும் தனிநபர் விமர்சனம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வகையில் மேற்படி பத்திரிகைக் கவுன்ஸில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இதன்படி, இலங்கை பத்திரிகை கவுன்ஸிலின் 1973ஆம் ஆண்டு 5ஆம் இலக்கச் சட்டம் திருத்தப்பட்டுள்ளதுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்காக நாடாளுமன்ற அனுமதி கோரி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் மேற்படி சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,
மேற்படி பத்திரிகை கவுன்ஸில் திருத்தச் சட்டத்தின் கீழ் தற்போது நடைமுறையில் உள்ள இணையத்தளங்களும் உள்ளடக்கப்படும். இவ்விணையத்தளங்களும் தங்களது பதிவுக் கட்டணத்தை செலுத்த வேண்டி ஏற்படும்.
சேய்தி இணையத்தளங்கள் மூலம் வலையமைப்பினூடாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ எவ்வித தவறுகளும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த சட்டம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இதனால், பொறுப்புவாய்ந்த முறையில் செயற்படும் இணையத்தளங்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. அவர்கள் ஏற்கனவே பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டு வருவதால் இந்த சட்டம் அவர்களை பாதிக்காது. இருப்பினும் கட்டண விடயத்தில் அவர்கள் பாதிக்கப்படவுள்ளதால் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து இயங்கும் இணையத்தளங்கள் தொடர்பில் சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !