![]() |
தலைமறைவான நித்தியானந்தாவைத் தேடி தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பொலிஸார் விரைந்துள்ளதாகவும் பிடதி ஆசிரமத்தை அரசு கையகப்படுத்துவது தொடர்பில் முதல்வர் சதானந்த கவுடா தலைமையில் நாளை பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிடதி ஆசிரமத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது நிருபர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கத் தவறிய நித்தியானந்தா அந்த நிருபரை உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேற்றினார்.
தனது பணியைச் செய்யவிடாமல் தடுத்தமை குறித்து அந்த நிருபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து நிருபரைப் பணி செய்ய விடாமல் தடுத்த நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் நால்வர் உட்பட 8 பேரை பொலிஸார் கைது செய்தனர். அதன்பின்னர் பிடதி ஆசிரமத்துக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் ஆசிரமம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இதேவேளை, நித்தியானந்தா தன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டதாக ஆர்த்தி ராவ் என்ற பெண் தொலைக்காட்சியொன்றில் பகிரங்க பேட்டியளித்திருந்தார். இவ்விடயங்களால் கொதித்தெழுந்த மக்கள் போராட்டங்களில் குதித்தனர். பிடதி ஆசிரமத்தின் நுழைவாயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
இந்நிலையிலேயே நித்தியானந்தா தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் மதுரை ஆதீன மடத்துக்குச் சென்றிருக்கலாம் என்றும் மைசூரில் தலைமறைவாகியிருக்கலாம் என்றும் இருவேறு தகவல்கள் கூறுகின்றன.
இதேநேரம், நித்தியானந்தாவின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. ' சட்டத்துக்கு புறம்பானதை வெற்றிகொள்வோம். முடிவில் நாங்கள் வெற்றிபெறுவோம். நாங்கள் மிகவும் புனிதமானவர்கள்' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்ற தகவல் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. _
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !