![]() |
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் காத்தான்குடியிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, சிரேஷ்ட அமைச்சர் பௌசி காத்தான்குடியில் வைத்து என்னைப்பற்றி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் நான் மிகவும் கவலையடைகின்றேன்.
அமைச்சர் பௌசி மூன்று குற்றச்சாட்டு;க்களை என் மீது சுமத்தியிருந்தார். அதை ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.
காத்தான்குடியிலுள்ள வீதி ஒன்றுக்கு அமைச்சர் பௌசியின் பெயர் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதை நான் எடுத்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
காத்தான்குடியிலுள்ள வீதிகளுக்கு பெயர் சூட்டுவது அதை எடுப்பது காத்தான்குடி நகர சபையின் வேலையாகும். குறிப்பிட்ட இந்த வீதி 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் டெலிகொம் வீதி என அழைக்கப்பட்டது. அதற்கு பிறகு 2000ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.அஷ்ரப் அவர்களின் பெயர் அவரின் மறைவுக்கு பிறகு காத்தான்குடி நகர சபை மக்களின் ஆதரவுடனும் அரசியல் பிரமுகர்களின் ஆலோசனையுடனும் அந்த வீதிக்கு அஷ்ஷஹீத் அஷ்ரப் வீதி எனப் பெயரை மாற்றினர்.அந்தப் பெயரிலேயே வர்த்தமானி அறிவித்தலும் செய்யப்பட்டுள்ளது.
26.3.2000 இல் இந்த வீதி டாக்டர் அஷ்ரப் மாவத்தை என வர்த்தமானி அறிவித்தல் மூலம் காத்தான்குடி நகர சபை பிரகடனப்படுத்தியது. 2001ஆம் ஆண்டு ஒரு வெள்ளிக்கிழமை திடீரென யாருக்கும் தெரியாமல் அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக இருந்த மர்சூக் அகமது லெவ்வை அஷ்ரப் மாவத்தை என இருந்த அந்த வீதிக்கான பெயர்ப்பலகையை கழற்றி விட்டு பௌசி மாவத்தை எனும் பெயர்ப்பலகை ஒன்றை சிறியதொரு மட்டைத்தாளில் எழுதிப் போட்டு விட்டு சென்றுள்ளார்.
அதை அந்த நேரம் கழற்றி ஒரு பிரச்சினையாக ஆக்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை. இந்த நிலையில் அண்மையில் நாங்கள் காத்தான்குடியிலுள்ள வீதிகளுக்கு பெயர்ப்பலகை இட்ட போது இந்த வீதிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் சொல்லப்பட்டுள்ள டாக்டர் அஷ்ரப் மாவத்தை எனும் நிரந்தரப் பெயரை இட்டோம்.
நாங்கள் காத்தான்குடியில் கொழும்பிலிருந்து வந்து சேவை செய்த பலரின் பெயர்களை வீதிகளுக்கு வைத்துள்ளோம். டாக்டர் பதியுதீன் மஹ்மூத் மாவத்தை, சேர் றாசீக் பரீத் மாவத்தை என்றெல்லாம் வைத்துள்ளோம். அமைச்சர் பௌசியின் பெயரும் ஏதாவது ஒரு வீதிக்கு சூட்ட வேண்டும் என்பதற்காக காத்தான்குடி முதியோர் இல்ல வீதிக்கு அவரது பெயரை வைப்போம் என நினைத்தோம். ஆனால் அது கிரவல் வீதி அதற்கு அவரின் பெயரை வைத்தால் அதிலும் விமர்சனம் ஏற்படும் என்பதற்காக இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த வாரம் தான் அவ்வீதியின் புனரமைப்பு வேலைகள் முடிவடைந்துள்ளன.
அந்த வீதிக்கு அமைச்சர் பௌசியின் பெயரை சூட்ட வேண்டும் என்று இருக்கின்றோம்.
அமைச்சர் பௌசியை நான் என்றும் மதிப்பவன். அந்த வகையில் அந்த வீதிக்கு அவரின் பெயரை வைக்க வேண்டும் என ஆலோசனை செய்துள்ளோம். எந்த சூழ்நிலையிலும் அமைச்சர் பௌசியின் பெயரை மாற்றவில்லை. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமே வீதிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. பௌசி மாவத்தை என்பது காத்தான்குடியில் இல்லை. அஷ்ரப் மாவத்தை என்பதை பலாத்காரமாக எடுத்து விட்டு பௌசி மாவத்தை என்று வைத்த பெயரை காத்தான்குடி நகரசபையோ ஊர் மக்களோ அனுமதிக்க முடியாது. நாங்கள் அந்த வீதிக்கு மறைந்த தலைவர் அஷ்ரபின் பெயரைத்தான் வைத்துள்ளோம்.
அமைச்சர் பௌசியின் பெயரை எடுத்து விட்டுத்தான் நாங்கள் அஷ்ரபின் பெயரை வைத்துள்ளோம் என்பது முழுக்க முழுக்க தவறானதும் முஸ்லீம்கள் மத்தியில் காத்தான்குடியின் மீது தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். இது கவலையான விடயமாகும். பௌசி மாவத்தை என்று யாரும் பெயர் வைக்கவுமில்லை. யாரும் அதை அங்கீகரிக்கவுமில்லை. நகர சபையோ எந்தவொரு நிறுவனமோ தீர்மானிக்கவுமில்லை.
அங்கீகரிக்கப்பட்ட பெயர்தான் டாக்டர் அஷரப் மாவத்தையாகும் அதையே அவ்வீதிக்கு வைத்துள்ளோம்.
அமைச்சர் பௌசி கூறியுள்ள அடுத்த விடயம் தோணாக்கால்வாய் தோண்டுவதற்கு எனக்கு 9இலட்சம் தந்ததாகக் கூறியுள்ளார். அவர் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக இருந்த போது அவரை அழைத்து வந்து தோணாக்கால்வாயைக் காட்டினேன். நான் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் என்ற வகையில் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக அதற்குப்பொறுப்பான அமைச்சர் என்றவகையில் அவரிடம் காட்டினேன்.
அதற்கு அவர் அதைத் தோண்டுவதற்காக காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு 5இலட்சம் ரூபா பணத்தினை ஒதுக்கீடு செய்திருந்தார். மாறாக அவர் என்னிடம் பணம் தரவில்லை பிரதேச செயலகத்திற்கே ஒதுக்கீடு செய்திருந்தார்.
அவர் கூறியிருப்பது போல அது 9இலட்சமல்ல. 5இலட்சம் ரூபாவைக் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு ஒதுக்கீடு செய்திருந்தார்.
அவர் கூறியுள்ள மற்ற விடயம் நான் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்தவுடன் முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் சென்று கூறியதாகவும் அமைச்சர் பௌசிதான் இதைக் கேட்டுள்ளார் என்று கூறியதும் ஓர் அப்பட்டமான பொய்யாகும்.
எனக்கு முதலமைச்சர் பதவியைத் தருமாறு நான் கேட்டு நின்றேன். இதற்காக ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் விவாதித்தேன். முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்யும் போது கூட அதற்கு நான் செல்லவில்i. இந்நிலையில் ஒரு போதும் நான் முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் முதலமைச்சர் பதவியைக் கோரி நின்றது உலகத்துக்கே தெரியும் இந்நிலையில் யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுவும் அமைச்சர் பௌசியின் தவறான கூற்றாகும் என்பதை தெளிவாகச் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.
இவ்வாறான கருத்துக்களை அமைச்சர் பௌசி கூறுவதிலிருந்து தவிர்த்து கொள்ள வேண்டும் ஓட்டமாவடியில் வைத்து முன்பு இவ்வாறான ஒரு கருத்தை அமைச்சர் பௌசி கூறியிருந்தார்.
அதன் பின்பு நான் பாராளுமன்றத்தில் சந்தித்து அவரிடம் விடயத்தை விளக்கிக் கூறியும் அவர் தப்பாகவே பேசுகின்றார்.
அவர் கூறிய குற்றச்சாட்டுக்களை நான் முற்றாக மறுப்பதுடன் எதிர்காலத்தில் அதை அவர் திருத்திக்கொள்ள வேண்டுமென கூறிக்கொள்கின்றேன் என இதன் போது மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதி தவிசாளர் எம்.எம்.ஜெசீம், நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !