![]() |
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 45 ஓவர்களில் 199 ஓட்டங்களில் சுருண்டது.
இலங்கை அணி வீரர் திசர பெரேரா ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.
கொழும்பில் கெத்தாராம மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் அதிகபட்சமாக சங்ககாரா 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 97 ஓட்டங்கள் எடுத்தார்.
அணித்தலைவர் ஜயவர்த்தன 40, தில்ஷான் 24 ஓட்டங்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் சோஹைல் தன்வீர், அஜ்மல், ஹபீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் அசார் அலி ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்கள் குவித்த போதும், மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாததால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. அசார் அலிக்கு அடுத்தபடியாக அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 57 ஓட்டங்கள் எடுத்தார். அந்த அணியில் 6 வீரர்கள் எவ்வித ஓட்டங்களும் பெறாது ஆட்டமிழந்தனர்.
இலங்கை தரப்பில் பெரேரா 4 விக்கெட்டுகளையும், மாலிங்க இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இலங்கை முன்னிலை வகிக்கிறது. 3-வது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
41ஆவது ஓவரை வீசிய பெரெரா அந்த ஓவரின் 2-வது பந்தில் யூனிஸ்கான், 3-வது பந்தில் அப்ரிடி, 4-வது பந்தில் சர்ஃப்ராஸ் அஹமது ஆகியோரை வீழ்த்தி ஹெட்ரிக் சாதனை படைத்தார். இதேவேளை போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !