![]() |
இடம்பெயர்ந்த முஸ்லிம்களை எனது உயிரைக் கொடுத்தேனும் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவேன். இதற்கு கூட்டமைப்பிடமிருந்து இடையூறுகள் வரின் 20 இலட்சம் முஸ்லிம்களை வீதியில் இறக்கி புலிகள் இழைத்த அநீதிகளுக்காக தனியானதொரு ஆணைக்குழுவை நிறுவுமாறு ஜனாதிபதியை வலியுறுத்துவோம் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
"தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தேசியக் கொடியை ஏந்தினார் என்ற விடயம் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு செய்திகளைக் காண முடிந்தது. அந்த வகையில் கூட்டமைப்பின் மூத்த பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, சம்பந்தன் தேசியக் கொடியை ஏந்தியமைக்காக பகிரங்க மன்னிப்புக் கோரியிருந்தமையானது இனவாதத்தையே தூண்டியுள்ளது.
தேசியக் கொடியானது என்னுடையதோ சம்பந்தனுடையதோ இல்லாவிடில் ஜனாதிபதியுடையதோ அல்ல. அது நாட்டின் தேசியக் கொடியாகும். இவ்வாறான கருத்துக்கள் இனவாதத்தையே தூண்டிவிடுகின்றன. இது ஒரு வெட்கமான செயலாகும்.
அதேபோன்று தம்புள்ளை விவகாரத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அங்கு பிக்கு ஒருவர் சாதாரண மனிதரைப் போன்று கூட இல்லாது மிகக் கேவலமான முறையில் நடந்து கொண்டதையும் பள்ளிவாசலைத் தகர்க்கத் தூண்டியதையும் காண முடிந்தது. கூட்டமைப்பில் இருக்கின்ற இனவாதிகளைப் போன்றே தம்புள்ளையில் சிங்கள இனவாதிகளும் இருக்கின்றனர்.
சிங்களத் தலைவர்கள் இழைத்த தவறினால் தான் ஆயுதப் போராட்டம் உருவானது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதேபோன்று தான் தம்புள்ளையில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடும் இடம்பெற்றது.
பிக்கு உட்பட சிங்கள இனவாதிகள் செயற்பட்ட விதத்தை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இணைந்து எதிர்த்தனர். அந்த சம்பவத்துக்கு முஸ்லிம் சமூகம் தனது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
இது இவ்வாறிருக்க தம்புள்ளைப் பிக்குவைப் போன்று தான் மன்னார் ஆயரும் நடந்து கொள்கின்றார்.
முஸ்லிம்களுக்கு நிலங்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் முஸ்லிம்கள் நில ஆக்கிரமிப்பு செய்வதாகவும் மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கின்றார். அவர் முஸ்லிம்களுக்கு எதிராக மதவாதத்தைப் பரப்பி பிளவுகளை ஏற்படுத்த விளைகின்றார்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் எமது சொந்த இடங்களில் நாம் மீள்குடியேற வேண்டும் என்று தான் கேட்கிறோம். அதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடம் கொடுக்க மறுக்கின்றது. அதேபோன்று மன்னார் ஆயரும் செயற்பட்டு வருகின்றார்.
நாம் யாருடைய நிலங்களையும் ஆக்கிரமிக்கவில்லை. புலிகளால் விரட்டப்பட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்கள் இன்று புத்தளத்தில் இருக்கின்றனர். இவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். ஆனால் அது அதனைச் செய்யவில்லை.
இடம்பெயர்ந்த ஒரு இலட்சம் முஸ்லிம்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றியே தீருவேன். எனது உயிரைக் கொடுத்தேனும் அதனைச் செய்வேன்.
தமிழர் போராட்டத்தை நாம் எதிர்க்கவில்லை. அவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். அதேபோல் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்பட வேண்டும். மேலும் தமிழர் பிரச்சினைக்காக முன்னிற்கும் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்தும் சிந்திக்க வேண்டும்" என்றார். _
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !