
2008,2009ம் ஆண்டுகளில் இலங்கையில் இறுதிப் போர் நடை பெற்று ஈழத் தமிழ் இனம் உதிரமும் உயிரும் சிந்திய அந்தக் கோர நிலைமைகளை இலங்கையிலே ஏற் படாமல் தடுத்திட அங்கே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான என்னென்ன முயற்சிகளிலே ஈடுபட்டோம் என்பதை ஞாபகப்படுத்துவது என்னுடைய கடமை.
திமுக அரசின் சார்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 14,10,2008ல் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிட நேரிடும் என்று ஒரு தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.
இறுதிப் போரிலே இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக நான் மட்டுமல்ல, இந்திய அரசு மாத்திரமல்ல, பெரிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நார்வே போன்ற நாடுகளும் முயற்சித்தன. 9,4,2009ல் சென்னையில் என் தலைமையில் இலங்கை அரசே போரை நிறுத்து என்று முழக்கமிட்டவாறு பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.
21,4,2009ல் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு நான் அனுப்பிய தந்தியில், இலங்கையிலுள்ள லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இறுதி எச்சரிக்கை விடும்படி வலியுறுத்துகிறேன் என்று கேட்டுக் கொண்டேன்.
நான் அனுப்பிய தந்தி அடிப்படையில் 22,4,2009ல் இரவு டெல்லியில் பிரதமர் மத்திய அமைச்சர் கள், அதிகாரிகள் கொண்ட அவசரக் கூட்டம் கூட்டி, அப்பாவித் தமிழர்கள் மீதான போரினை இலங்கை உடனடியாக நிறுத்தவேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்தி தான் கிடைத்தது. அதற்குப் பிறகு தான் மறுநாள் காலை 5 மணி அளவில் என் வீட்டாரிடம் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறி விட்டு, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றேன்.
அதே நாளில் பகல் 11 மணி அளவில் இலங்கை பாதுகாப்பு கவுன்சில் கூடி ஆலோசனை நடத்தியது. இலங்கை வடக்கில் நடைபெற்று வந்த போர் முடிந்துவிட்டது. வடக்கு பகுதியில் இனி கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என்று ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று இலங்கை கூறியது.
இலங்கை அரசினர் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் ஒவ்வொரு முறையும் மீறி, போரைத் தொடர்ந்து, நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி சகோதர யுத்தத்தினால் ஏற்பட்ட சரிவைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாகை சூடினர்.
வீழ்ந்தது தமிழின எழுச்சி ஈழத் தமிழகத்தில். எந்த ஒரு இனத்தின் எழுச்சியும் வீழ்வதும் தாழ்வதும் பின்னர் வெற்றிச் சிகரம் ஏறுவதும் உலக வரலாற்றில் காணக்கூடிய ஒப்பற்ற உதாரணங்கள்.
களத்தில் மறைந்த மாவீரர்கள் அனைவருக்கும் இறுதி வணக்கத்தை தெரிவித்து இனியும் தமிழ் இனம் தலை நிமிர்ந்தே வாழ்வதற்கு நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தருவதற்கு தயங்க மாட்டோம் என்ற உறுதியுடன் அண்ணல் காந்தி காட்டிய வழியில் அண்ணா வகுத்த நெறி யில் பெரியார் போதித்த பாதையில் ஈழத் தந்தை செல்வா ஊட்டிய உணர்வில் அறப்போர் தொடர்ந்திட அணி வகுப்போம். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !