
கடந்த பரீட்சை முடிவுகளின்படி, நாட்டில் உள்ள 9 மாகாணங்களில் வடமாகாணம் 9 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது பலதரப்பினர் மத்தியிலும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
நாட்டில் ஒப்பீட்டளவில் வடமாகாணம் கல்வியில் முன்னணியில் திகழ்ந்து வந்துள்ளது.
எனினும் இந்த பரீட்சை பெறுபேற்றின் மூலம் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்பதற்கு 56.26 வீதமான மாணவர்களே இம்முறை வடமாகாணத்தில் தகுதி பெற்றிருக்கின்றார்கள்.
முதலிடத்தைப் பெற்றுள்ள மேல் மாகாணத்தில் 66.56 வீதமான மாணவர்கள் உயர்தர வகுப்பிற்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வடமாகாணம் கல்வியில் பின்னடைந்திருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் பசுபதி சிவநாதன் சுட்டிக்காட்டினார்.
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் கல்வி நடவடிக்கைகளுக்காக போதிய வசதிகள் ஏற்படுத்தப்படாமை, பாடசாலை கட்டடங்கள் மற்றும் வசதிகளில் காணப்படுகின்ற குறைபாடுகள், வன்னிப் பிரதேசத்தில் மாணவர்கள் வீடுகளில் கல்வி கற்க வாய்ப்பின்மை போன்ற காரணங்களை அவர் பிரதானமாக குறிப்பிட்டார்.
அத்தோடு புதிதாக அதிகரித்துவரும் கைத்தொலைபேசி பாவனை, நவீன தொழில்நுட்ப தொடர்பாடல் வசதிகள், குறிப்பாக இணையதள பாவனையில் கொண்டிருக்கின்ற ஆர்வம் மற்றும் களியாட்டச் செயற்பாடுகளில் அக்கறை பெருகுகின்றமை என்பனவும் மாணவர்கள் மத்தியில் கல்வி நாட்டம் குறைந்திருப்பதற்கு காரணம் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமையைப் போக்குவதற்குப் பல்வேறு மட்டங்களிலும் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டுமென்றும் அதில் ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமாக அமைய வேண்டுமென்றும் பேராசிரியர் சிவநாதன் தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !